இராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியை பூர்வீகமாக கொண்டவர் ராணி, 70. கடந்த 1964 ஆண்டு கோரப் புயலையடுத்து அகஸ்தியர் தீர்த்தம் பகுதிக்கு இடம் பெயர்ந்த ராணி, அரசு புறம்போக்கு நிலத்தில் வசித்து வருகிறார். அக்னி தீர்த்த கடற்கரை எதிரே மிகச் சிறிய இடத்தில் தார் பாய் கட்டி, அதன் நிழலில் இட்லி, வடை விற்பனை செய்து வருகிறார். இவரிடம் சுற்றுலா பயணிகள், அப்பகுதி கூலி தொழிலாளர்கள் உள்ளிட்டோர் குறைந்த விலையில் இட்லி சாப்பிட்டு செல்கின்றனர். மேலும், அப்பகுதியில் உணவுக்கு வழியின்றி தவிக்கும் ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக இட்லி வழங்கி வருகிறார்.
வறிய சூழலில், விறகு அடுப்பு புகைக்கு நடுவே இட்லி அவித்து, வடை சுட்டு வாழ்ந்து வரும் போதும் உணவுக்கு வழியின்றி வருவோருக்கு இட்லியை இலவசமாக அளித்து வரும் ராணி பாட்டியின் சேவையை அறிந்த ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் உதவி கரம் நீட்ட முன் வந்தது. தனது ஏழ்மையை கருதாமல் இலவசமாக உணவளிக்கும் ராணி பாட்டிக்கு கேஸ் சிலிண்டர்கள், அடுப்பு, புதிய இட்லி பாத்திரம், லைட்டர் உள்ளிட்ட சாதனங்களை தென் மண்டல ஹிந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனம் இலவமாக வழங்கியது. இராமநாதபுரம் எம்எம்என்டி ஹிந்துஸ்தான் பெட்ரோலிய முகவர் மூலம் ராணி பாட்டியிடம் வழங்கி ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் பெருமைபடுத்தியது.ஹிந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவன உதவியானது மேலும் பலருக்கு இலவச உணவு கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தை தனக்குள் ஏற்படுத்தி உள்ளது என ராணி பாட்டி நெகிழ்ச்சியுடன் ஹிந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்தார்.







You must be logged in to post a comment.