விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் இந்திய தந்தி சட்டத்தை கைவிடக் கோரி, திருவண்ணாமலையில் விவசாயிகள் இந்திய தந்தி சட்ட நகல் எரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், உயர் மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு, வி.ச மாநில துணைத் தலைவர் ஸ்டாலின் மணி தலைமை தாங்கினார்.மாவட்ட நிர்வாகிகள் டி. கே. வெங்கடேசன், வி சுப்பிரமணி, ஏ.உதயகுமார், எம்.பிரகலநாதன், ஏ.திருமுருகன், எஸ்.பலராமன், கே. பாலமுருகன் , சிபிஎம் மாவட்ட செயலாளர் எம்.சிவக்குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், எம். வீரபத்திரன், பி.செல்வன், எஸ். ராமதாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை நாசமாக்கும் தந்தி சட்டத்தை கைவிட்டு, விவசாயிகளின் நில உரிமையை பாதுகாக்க வேண்டும், ஏற்கனவே செயல்படும் திட்டங்களுக்கும், மின் கோபுரத்திற்கும், மின்கம்பி செல்லும் பாதைக்கும், மாத வாடகையும், உரிய இழப்பீடும் வழங்க வேண்டும். புதிதாக செயல்படுத்தும் திட்டங்களை கேபிள் மூலமாக செயல்படுத்த வேண்டும், விவசாயிகள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் பெற வேண்டும், என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நிர்வாகிகள் உரையாற்றினார். பின்னர் சட்ட நகலை தீயிட்டு எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.




You must be logged in to post a comment.