திருவண்ணாமலை ஈசான்ய மைதானத்தில் தூய்மை பாரத இயக்கத்தின் சார்பில் 84 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பேட்டரி மூலம் இயக்கப்படும் 60 புதிய வாகனங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.இந்த நிகழ்ச்சியில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி மற்றும் திருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய பெருந்தலைவர் மற்றும் முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை நகராட்சிக்கு உட்பட்ட 39 வார்டு பகுதிகளில் 33 ஆயிரம் வீடுகள் உள்ளன.ஏற்கனவே தள்ளு வண்டிகள் மூலம் வீடு வீடாகச் சென்று குப்பைகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.தற்போது திருவண்ணாமலை நகராட்சிக்கு முற்றிலும் பேட்டரியால் இயங்கும் 60 புதிய குப்பை சேகரிக்கும் வாகனங்களை தூய்மை பாரத இயக்கத்தின் மூலம் 84 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் வாங்கப்பட்டுள்ளது.
ஒரு வாகனத்தில் நான்கு பேட்டரிகள் பொருத்தப்பட்டு ஆறு குப்பைத் தொட்டிகள் உள்ளது .அதில் மூன்று மக்கும் குப்பை மற்றும் மூன்று மக்காத குப்பைகள் சேகரிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.திருவண்ணாமலை நகராட்சி பகுதியில் வீடு வீடாகச் சென்று 60 பேட்டரி வாகனங்கள் மூலம் ஒரு வாகனத்திற்கு இரண்டு தூய்மைப் பணியாளர்கள் வீதம் மொத்தம் 120 தூய்மைப் பணியாளர்கள் தினமும் காலை 6 மணி முதல் 11 மணி வரை குப்பைகளை சேகரிக்கும் பணியில் ஈடுபடுவார்கள்.
இந்த பேட்டரி வாகனங்கள் மூலம் குப்பைகளை சேகரிக்கும் தூய்மைப் பணியாளர்களின் வேலைப்பளு குறைந்து பணி நேரமும் சேமிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.திருவண்ணாமலை நகராட்சியில் தினமும் 55 மெட்ரிக் டன் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.




You must be logged in to post a comment.