ஆஸ்பத்திரியில் ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால், சிகிச்சை பலனின்றி இறந்த மகளின் உடலை, கண்ணீருடன் தந்தை கையில் சுமந்து சென்ற சம்பவம் தெலுங்கானாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தெலுங்கானா மாநிலம் பொத்தப்பள்ளி மாவட்டம் கூனுறு கிராமத்தைச் சேர்ந்தவர் சம்பத். இவருடைய மகள் கோமலா. 7 வயது நிரம்பிய கோமலாவிற்கு சிறுநீரகம் பாதிக்கப்பட்டு உடல்நிலை கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து அவரை, கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு கரீம்நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டுவந்து சேர்த்தார் சம்பத்.
அங்கு, தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த கோமலா, சிகிச்சை பலனின்றி நேற்று (3ம் தேதி) உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த சம்பத் மகளின் உடலை பார்த்து கதறி அழுதார். பின்னர் இறுதிச்சடங்கு செய்வதற்காக மகளின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு செல்ல முடிவு செய்தார்.மிகவும் ஏழ்மை நிலையில் இருக்கும் சம்பத்தால் வாடகைக்கு வாகனம் எடுத்து மகள் உடலை கொண்டு செல்ல முடியாத நிலை. இதனால், மருத்துவமனை சார்பில் ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தித்தர கேட்டிருக்கிறார். ஆனால் மருத்துவமனை நிர்வாகத்தினர் தங்களிடம் ஆம்புலன்ஸ் இல்லை என தெரிவித்துள்ளனர்.
இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் சுமார் 2 மணி நேரம் மருத்துவமனை முன்பு கண்ணீருடன் காத்திருந்தார் சம்பத். யாரும் உதவி செய்ய முன்வராத நிலையில், மகளின் சடலத்தை கண்ணீருடன் கையில் ஏந்தியபடி மருத்துவமனைக்கு வெளியே வந்து ஆட்டோ ஓட்டுநர்களிடம் சொந்த ஊருக்குச் செல்ல வேண்டும் என கேட்டுள்ளார். பலர் நிராகரித்த நிலையில், மனிதாபிமானம் கொண்ட ஒரு ஆட்டோ டிரைவர் தனது ஆட்டோவில் கோமலாவின் உடலை ஏற்றிக் கொண்டு சொந்த ஊருக்கு கொண்டுசென்றார்.கையில் பணம் இல்லாததால், உயிரிழந்த தனது மகளின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு செல்வதற்காக தந்தை கண்ணீர் மல்க அனைவரிடமும் கெஞ்சிய சம்பவம், அங்கு இருந்தவர்களை கண்கலங்க வைத்தது.
தெலுங்கானா மாநிலத்தின் மருத்துவ மற்றும் சுகாதாரத் துறை அமைச்சராக இருக்கும் ஈட்டல ராஜேந்திரனின் சொந்த மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்திருப்பது குறிப்பிடத் தக்கது.
– சிறப்பு நிருபர் ப.ஞானமுத்து




You must be logged in to post a comment.