திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் தாலுகா, வடமதுரை ஒன்றியம் அய்யலூரில் இரண்டு ரயில்வே கேட் உள்ளது. ஒன்று கடவூர் பிரிவிலிருந்து அரசு மேல்நிலைப் பள்ளி வழியாக செல்லும் தடத்தில் வனத்துறை அலுவலகம் அருகே உள்ள கேட்..மற்றொன்று அய்யலூர் கடைவீதிக்கும் களர்பட்டிக்கும் இடையே உள்ள ரயில்வே கேட். இந்த கேட்தான் நீண்ட நெடுங்காலமாக பிரச்சனைக்குரியதாய் இருந்து வருவது. இந்த கேட் பெரும்பாலும் சாத்தப்பட்ட நிலையிலேயேதான் இருக்கும். காரணம் இரவு பகல் பாராது எந்நேரமும் ரயில் வண்டிகள் சென்றுகொண்டே இருப்பதுதான். தோராயமாக இரவில் 35 முறையும் பகலில் 20 முறையும் இத்தடத்தில் வண்டிகள் கடக்கின்றன.
இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். ரயில்வே கேட்டிற்கு கிழக்கே கிட்டத்தட்ட 30க்கும் மேற்பட்ட ஊர்கள் உள்ளன. இது அல்லாமல் செந்துறை செங்குறிச்சி தடங்களின் இணைப்பாகவும் இந்த கேட் வழிதான் இருந்து வருகிறது.எந்நேரமும் கேட் சாத்தியே இருப்பதால் பொதுமக்கள் வழக்கமாய் தொடரும் தம் அலுவல் பணிகளை செய்து முடிப்பதில் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். பள்ளி கல்லூரி செல்லும் மாணவ மாணவியரும் இந்த கேட்டினால் குறித்த நேரத்தில் செல்ல இயலாமல் தவியாய்த் தவித்து வருகின்றனர். இதோடன்றி இரவு நேரத்தில் விஷப் பூச்சிகள் தீண்டினாலோ, வேறு ஏதேனும் அசம்பாவிதங்கள் நடந்தாலோ மருத்துவமனைக்கு இக் கேட்டை கடந்துதான் செல்ல வேண்டியிருக்கிறது. பெரும்பாலும் இக் கேட் சாத்தியே இருப்பதலால் உரிய நேரத்தில் மருத்துவம் பார்க்க இயலாமல் நிறைய உயிர்ப்பலிகளும் நிகழ்ந்து வருகிறது. இப்படி ஒவ்வொன்றாய் அடுக்கிக்கொண்டே போகலாம்.
எனவே இக் கேட்டிற்கு கீழாக சுரங்க வழியை ஒத்த மாற்றுப்பாதை ஒன்றினை அமைப்பதின் மூலமாகவோ, அல்லது அல்லது தண்டவாளத்திற்கு மேலாக பாலம் அமைப்பதின் மூலமாகவோ இந்தப் பிரச்சனைக்கு ஒரு நிரந்தர தீர்வு காண முடியும்..இது குறித்து ஏற்கனவே பல்வேறு விதமான போராட்டங்கள் நடந்தும் எவ்விதமான பலனுமில்லை. புகார்கள், கோரிக்கைகள் என்று பொதுமக்கள் தரப்பிலிருந்து நிறைய எழுந்தும் அதற்கும் பலனில்லை என்கிறது பொதுமக்கள் தரப்பு.. புதிதாய் பொறுப்பேற்றிருக்கும் கரூர் பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி அவர்களின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டிருப்பதாக தெரிகிறது. எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இதை கவனத்தில் கொண்டு இந்த கேட்டிற்குப் பதிலாக சுரங்கவழி பாதையோ அல்லது பாலமோ அமைத்து இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணும்படி பொதுமக்கள் தொடர்ச்சியாய் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.




You must be logged in to post a comment.