18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மாற்றுத்திறனாளிகள் சட்டத்திற்கு விரோதமாக செயல்படும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உயர் அதிகாரிகள்-TARATDAC குற்றச்சாட்டு

மாற்றுத்திறனாளிகள் சட்டத்திற்கு விரோதமாக செயல்படும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உயர் அதிகாரிகள்-TARATDAC குற்றச்சாட்டு

எழுதியவர்: mohan June 26, 2019, 5:46 pm

புதிய மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம்-2016 அமலில் உள்ளது. மாநிலங்களில் இச்சட்டத்தை அமலாக்குவதற்கென தனி ஆணையரை மாநில அரசுகள் நியமிக்க வேண்டுமென இச்சட்டம் வலியுறுத்துகிறது.

இச்சட்டத்தின் படி மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் ஒரு சிவில் கோர்ட் நீதிபதி அந்தஸ்துடன் செயல்பட வேண்டும். மாற்று த்திறனாளிகள் உரிமைகளை மீறும் மற்ற துறை உயர் அதிகாரிகள் மீதுகூட நடவடிக்கை எடுக்க தகுதி உடையவர்.ஆனால், மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்ட விதிகளுக்கு மாறாக, தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்திட்டங்களை இயக்கும் இயக்குனர் அந்தஸ்துடன் உள்ள ஐஏஎஸ் அதிகாரியையே ஆணையராகவும் செயல்படும் வகையில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுக் கொண்டது. இதுவே சட்ட விரோதமாகும்.சட்டத்தை அமல்படுத்த முழுமையான விதிமுறைகளைக் கூட தமிழக அரசு உருவாக்கவில்லை. இது குறித்து 2018 ஆகஸ்ட் மாதம் சமூக நலத்துறை அமைச்சர் அளித்த வாக்குறுதியும் நிறைவேற்றப்ப டவில்லை.மேலும், தற்போது ஆணையராக பொறுப்பில் உள்ள அதிகாரி, அவர் பொறுப்பேற்றது முதல், மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டத்தை அமல்படுத்துவதெல்லாம் தன்னுடைய பணி அல்ல என வெளிப்படையாகவே பேசுகிறார்.மாற்றுத்திறனாளிகள் உரிமைகளுக்கான சங்க நிர்வாகிகளைக் கூட சந்திக்க மறுக்கிறார். அவர்கள் முன்வைக்கும் கோரிக்கைகள் மீது சட்டப்படி செயலாற்ற முடியாது என்கிறார்.மாற்றுத்திறனாளிகளுக்கான ஆணையர் அலுவலகம் மாற்றுத்திறனாளிகளின் நலனுக்கான அலுவலகம் என்பதை மறந்து, அவருடைய தனிப்பட்ட நலனுக்கான அலுவலகம் என்பது போல கருதி செயல்படுகிறார்.மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அரசு செயலாளராக தற்போது தலைமைச்செயலகத்தில் உள்ள ஐஏஎஸ் அதிகாரி, மாற்றுத்திறனாளிகள் தனது அலுவல கத்திற்கு வரவே கூடாது என கூறுகிறார்.கோரிக்கைகள் சம்பந்தமாக செல்லும் மாற்றுத்திறனாளிகளை அவமானப்படுத்துகிறார். உரிமை சார்ந்து இருக்கும் உத்தரவுகளை ரத்து செய்வேன் என மிரட்டுகிறார்.

எல்லாவற்றுக்கும் மேலாக, இச்சட்ட விதிப்படி எந்த ஒரு சமூகப்பாதுகாப்பு திட்டமும் அமலாக்கும்போதும், மற்றவர்களுக்கு வழங்கும் அளவை விட மாற்றுத்திறனாளிகள் நலனுக்கு கூடுதலாக 25% அளவு உயர்த்தி வழங்கிடவும், 5% திட்ட அளவை மாற்றுத்திறனாளிகள் பயன்பெற ஒதுக்கீட செய்ய வேண்டுமென விதி உள்ளது.மற்ற துறைகளுக்கு அழுத்தம் கொடுத்து இதனை நிறைவேற்ற வேண்டிய அரசு செயலாளர், பொங்கல் நிதி உதவி வழக்கில், சங்கம் வைத்த கோரிக்கை மீது உரிய நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், மாற்று த்திறனாளிகளை ஏமாற்றும் வகையில் வார்த்தை ஜாலத்தை பயன்படுத்தி மறுக்கிறார்.இவர்கள் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரிகளா? அல்லது மாற்றுத்திறனாளிகளை ஏமாற்றுவதற்கான அதிகாரிகளா என்ற கேள்வி எழுகிறது.இது குறித்து விளக்கிப் பேசிட மாநில தலைமை செயலாளர் அவர்களிடம் நேரம் ஒதுக்கித்தரக் கேட்டும், இதுவரை எந்தப் பலனும் இல்லை.

எனவே, மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டத்திற்கு விரோதமாக செயல்படும் மாற்றுத்திறனாளிகள் துறை உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரி ஜூலை-10 முதல் சென்னையில் தொடர் முற்றுகைப் போராட்டம் நடத்திட மாற்றுத்திறனாளிகள் கூட்டு இயக்கம் தீர்மானித்துள்ளதாக TARATDAC-சார்பில் திண்டுக்கல் மாவட்ட செயலாளர் பகத்சிங் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!