17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ராமேஸ்வரம் கோயில் பணியாளர்களின் வருங்கால வைப்புநிதி ரூ.78 லட்சம் மோசடி

ராமேஸ்வரம் கோயில் பணியாளர்களின் வருங்கால வைப்புநிதி ரூ.78 லட்சம் மோசடி

எழுதியவர்: mohan June 25, 2019, 5:44 pm

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் கண்காணிப்பாளர், பேஷ்கார், இளநிலை உதவியாளர்கள், அர்ச்சகர்கள், கைங்கரியம், பாராக்காரர்கள் உள்ளிட்ட89 பேர் பணியாற்றிவருகின்றனர். இவர்களுக்கு, புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் தொழிலாளர் சேமநல நிதி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கென பணியாளர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படும் குறிப்பிட்ட சதவீத தொகை, கோயில் நிர்வாகம் மூலம் குறிப்பிட்ட சதவீத தொகை, தொழிலாளர் சேமநல நிதி கணக்கில் ராமேஸ்வரம் ஸ்டேட் வங்கியில் ஒவ்வொரு மாதமும்வரவு வைக்கப்பட்டுவருகிறது.

இந்நிலையில், கடந்த சில ஆண்டுளாக, கோயில் பணியாளர்களின் சேமநல நிதி கணக்கில் பணம் முறையாக வரவு வைக்கப்படவில்லை. இது குறித்து விளக்கம் அளிக்க ராமநாதசுவாமி கோயில் இணை ஆணையருக்கு கடிதம் வந்தது. மேலும், கோயிலில் பணியாற்றி மறைந்த ஊழியர்கள், ஓய்வு பெற்ற கோயில் ஊழியர் குடும்பத்திற்கான இழப்பீட்டு தொகை சரிவர கிடைக்கவில்லை. இதையடுத்து, சேமநல நிதி கணக்கு குறித்து இணை ஆணையர் கல்யாணி ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது, கோயில் தற்காலிக பணியாளரான கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் சிவன் அருள்குமரன், தொழிலாளர்களின் பெயரில் செலுத்தவேண்டிய ரூ.78 லட்சத்தை வங்கியில் செலுத்தாமல் மோசடி செய்திருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக சிவன் அருள் குமரன் மீது மாவட்ட காவல் அலுவலகத்தில், இணை ஆணையர் கல்யாணி புகார் கொடுத்தார். இணை ஆணையர் கல்யாணி கூறுகையில், ” கோயில் பனியாளர்கள் மற்றும் நிர்வாகம் சார்பில், கடந்த மூன்றரை ஆண்டுகளில் சேமநல நிதியாக ரூ.2.13 கோடி செலுத்தியதாக இ-ரசீது உள்ளது. ஆனால், வங்கி கணக்கில் இத்தொகை முழுமையாக செலுத்தப்படவில்லை. இது குறித்து நடத்திய விரிவான ஆய்வில் தற்காலிக பணியாளராகப் பணியாற்றிய கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் சிவன் அருள்குமரன், பிடித்தம் செய்த தொகையை வங்கியில் செலுத்தியது போன்ற போலி இ-ரசீதுகளை அலுவலகத்தில் கொடுத்துள்ளார். மேலும், கோயில் வங்கி கணக்கில் இருந்து சேம நலநிதி கணக்கிற்குச் செலுத்துவதற்குப் பதில், அவரது தந்தையின் வங்கி கணக்கில் செலுத்தி, முறைகேடு செய்துள்ளார்.

இதன்மூலம் ரூ. 78 லட்சத்தை, அவர் கையாடல் செய்துள்ளார். இதுகுறித்து மாவட்ட காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்களின் எதிர்காலம் கருதி, விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறை அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளேன்” என்றார். கோயில் ஊழியர்களின் சேம நலநிதி பணம் கையாடல் சம்பவம், ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!