18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » குற்றாலத்தில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு-மகிழ்ச்சி வெள்ளத்தில் சுற்றுலாப்பயணிகள்..

குற்றாலத்தில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு-மகிழ்ச்சி வெள்ளத்தில் சுற்றுலாப்பயணிகள்..

எழுதியவர்: ஆசிரியர் June 23, 2019, 7:01 pm

நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் கடந்த இரண்டு நாட்களாக சாரல் மழை பெய்து வருவதால் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

குற்றாலத்தில் இந்த வருடம் சற்று தாமதமாக ஜூன் 10ம்தேதி சீசன் துவங்கியது. அதன்பிறகு 3 நாட்கள் மட்டுமே சாரல் இருந்தது. இதனால் அருவிகளில் தண்ணீர் வரத்து வெகுவாக குறைந்தது. சுற்றுலாப் பயணிகள் வருகையும் குறைந்து காணப்பட்டது.

இந்நிலையில் கடந்த 2 நாட்களாக பகலில் வெயில் குறைந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. நேற்று முன்தினம் இரவில் சாரல் ஓரளவு பெய்தது. நேற்று காலை, மாலையில் லேசாக சாரல் பெய்தது. இரண்டு நாட்களாக சாரல் தொடர்ந்து பெய்துள்ளதால் நேற்று காலை முதல் அருவிகளில் தண்ணீர் வரத்து சற்று அதிகரித்துள்ளது.

குற்றாலம் மெயினருவியில் ஆண்கள் பகுதியில் தண்ணீர் நன்றாகவும், பெண்கள் பகுதியில் ஓரளவு சுமாராகவும் விழுகிறது. ஐந்தருவியில் மூன்று பிரிவுகளில் தண்ணீர் நன்றாக விழுகிறது. பழைய குற்றாலத்திலும் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

விடுமுறை தினமான நேற்று சுற்றுலா பயணிகளின் வருகை ஓரளவு நன்றாக இருந்தது. மெயினருவியில் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இரண்டு பகுதிகளிலும் வரிசையில் நின்று சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த குற்றாலம் சீசனில் கடந்த இரண்டு நாட்ளாக சாரல் பெய்வதுடன் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

எனினும் சுற்றுலாப்பயணிகள் வரத்து போதுமான அளவிற்கு இல்லாததால் வியாபாரம் குறைவாகவே உள்ளதாக இப்பகுதியில் கடை வைத்துள்ள வியாபாரிகள் கூறுகின்றனர்.

செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!