17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்தில் பாரபட்சம்-இரண்டாண்டுகளாக TARATDAC நடத்திய வழக்கு வெற்றி!

முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்தில் பாரபட்சம்-இரண்டாண்டுகளாக TARATDAC நடத்திய வழக்கு வெற்றி!

எழுதியவர்: mohan June 22, 2019, 1:45 pm

2017ஆம் ஆண்டு தமிழகம் முழுவதுமுள்ள அரசுப்பள்ளிகளில் பல்வேறு பாடப்பிரிவுகளில் காலியாக இருந்த 3456 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணி நியமனங்களுக்கான தகுதித்தேர்வு நடத்த விதிமுறைகளை வகுத்து தமிழ்நாடு ஆசிரியர் தேர்வுவாரியம் அறிவிக்கை ஒன்றை அப்போது வெளியிட்டது.

அந்த அறிவிக்கையில் 40 முதல் 70% ஊனமுள்ள மாற்றுத்திறனாளிகள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த விதி 70%க்கும் அதிகமுள்ள கடும் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகளை பாதிக்கும் விதத்தில் சட்ட விரோதமாக வகுக்கப்பட்டு இருந்தது.மேலும் ஊனமுற்றோர் உரிமைகள் சட்டம் 2016-ன்படி 4% இட ஒதுக்கீட்டுக்கு பதிலாக பழைய 3% இட ஒதுக்கீடு மட்டுமே அறிவிக்கப்பட்டிருந்தது.

மாற்றுத்திறனாளிகளுக்கு எதிரான ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இந்த சட்டவிரோத நடவடிக்கையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் 2017ல் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கை முதலில் ஏற்று விசாரித்த உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் அளித்த தீர்ப்பில் மொத்தமுள்ள 3456 பணியிடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட 4 சதவீத இடத்தை அதாவது சுமார் 140 பணியிடங்களை ஒதுக்கிவிட்டு மீதமுள்ள பொது இடங்களை அரசு நிரப்பிக்கொள்ளலாம். அதில் இடஒதுக்கீடு முறை பின்பற்றப்படவேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு 2017 டிசம்பர் மாதம் மீண்டும் விசாரணைக்கு வந்த போது விசாரித்த நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், ரவிசந்திரபாபு ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், சங்கம் சார்பில் வைத்த கோரிக்கை ஏற்கப்படுகிறது என்றும், மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்ட ஒதுக்கீட்டைப் பின்பற்றி 6 மாதங்களுக்குள் புதிய அறிவிப்பை வெளியிட்டு அந்த பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று ஆசிரியர் தேர்வுவாரியத்திற்கு உத்தரவிட்டிருந்தனர்.ஆனால், 6 மாதங்களுக்கு மேல் கடந்த பின்னரும், உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதித்தேர்வு நடத்தாமல், பல காரணங்களைக் கூறி ஆசிரியர் தேர்வு வாரியம் இழுத்தடித்து வந்தது. இதனையடித்து நமது சங்கத்தின் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு 2018 ஆம் ஆண்டு தொடரப்பட்டது.

இரண்டாண்டுகள் இழுத்தடிப்புக்குப் பிறகு, பல்வேறு பாடப்பிரிவுகளில் முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் பணிநியமனங்களில் மாற்றுத்திறனாளிகளிகளுக்குரிய 134 பின்னடைவு காலி பணியிடங்கள், வேறு பிரிவினருக்கான 336 பின்னடைவு காலிப்பணியிடங்கள் மற்றும் தற்போது காலியாக உள்ள 1,657 இடங்களையும் சேர்த்து மொத்தமாக 2144 பணியிடங்களை நிரப்ப ஜுன் 12 தேதியிட்டு தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் புதிய அறிவிக்கையை வெளியிட்டுள்ளது.இதனை தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் வரவேற்கிறது. புதிய அறிவிக்கை…

சங்கம் தொடுத்திருந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஜுன் 14 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம் மற்றும் வி.பவானி சுப்பராயன் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன்பாக விசாரணைக்கு வந்தபோது, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சார்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள புதிய அறிவிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.இதனையடுத்து இரண்டாண்டுகளாக தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் கடும் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ஆதரவான சட்டப் போராட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.கடந்த இரண்டு ஆண்டுகளாக இது தொடர்பான வழக்குகளை திறம்பட நடத்திய சங்கத்தின் வழக்கறிஞர் கே.சி. காரல்மார்க்ஸ் மற்றும் அவர்கள் குழுவிற்கு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் பா.ஜான்ஸிராணி – மாநில தலைவர் எஸ். நம்புராஜன் – பொதுச்செயலாளர் ஆகியோர் தனது நெஞ்சார்ந்தநன்றிகளையும்,பாராட்டுக்களையும் ரித்தாக்குகின்றனர்.

செய்தியாளர்   அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!