18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » “கிடாவை கண்டுபிடித்து கொடுத்தால் உடல் உறுப்பு தானமாக வழங்கப்படும்..!”வினோத சுவரொட்டி..

“கிடாவை கண்டுபிடித்து கொடுத்தால் உடல் உறுப்பு தானமாக வழங்கப்படும்..!”வினோத சுவரொட்டி..

எழுதியவர்: ஆசிரியர் May 7, 2019, 2:58 pm

கோயிலுக்கு நேர்ந்துவிட்ட கிடாவை காணவில்லை; அதைக் கண்டுபிடித்து தருவோருக்கு, உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்படும்’ என ஒட்டப்பட்டுள்ள போஸ்டரை, பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.

இதுகுறித்த விவரம் வருமாறு; காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு, திருப்போரூர், சிங்கப் பெருமாள் கோவில் போன்ற பகுதிகளின் பஸ் நிலையம் மற்றும் முக்கியமான பகுதிகளில், ‘காணவில்லை’ எனும் தலைப்பில், ‘நான் பெற்றெடுக்காத பிள்ளை கே.எம்.ராமு’ என்ற வாசகத்துடன், ஆட்டுக்கிடா படம் அச்சிட்ட ஒரு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அந்த போஸ்டரைத்தான் பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர்.

அதுசரி, அந்த போஸ்டரில் அப்படி என்னதான் உள்ளது..? காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அருகேயுள்ள சிங்கப்பெருமாள் கோவில், முத்துமாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கே.முருகன் (எ) கணக்கு. இவர், கடந்த பல ஆண்டுகளாக கிடா ஒன்றை மிகவும் பாசமாக வளர்த்து வந்தார். ராமு என பெயர் கொண்ட அந்த கிடாவும் இவருடன் மிகவும் பாசமாக பழகி வந்ததுடன், இவருடனே படுத்து உறங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தது.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் அந்த கிடா காணாமல்போனது. இதனால் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்த முருகன், இதுகுறித்து மறைமலைநகர் போலீஸில் புகார் செய்தார். போலீஸாரோ, ’காணாமல் போன மனிதர்களையே கண்டுபிடிக்க முடியாமல் திண்டாடுகிறோம்; இதில், உனது கிடாவை எங்கிருந்து கண்டுபிடிப்பது..? போ… போய் நல்லா தேடிப்பாரு..!’ என்று அன்பாகச் சொல்லி அனுப்பி வைத்தனர்.

இதனால் மேலும் வேதனையடைந்த முருகன், போஸ்டர் அடித்து தானே அந்தக் கிடாவை கண்டு பிடிக்கும் முயற்சியில் இறங்கினார். இதையடுத்து, தனது செல்போன் எண்கள் மற்றும் காணாமல்போன கிடாவின் படத்தை போஸ்டராக அச்சடித்து, அதை மாவட்டம் முழுவதும் ஒட்டியுள்ளார். அந்த போஸ்டரில் உள்ள வாசகம்தான் பொதுமக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

அதில், ‘படத்தில் உள்ள கே.எம்.ராமு பத்து ஆண்டுகளாக முத்துமாரியம்மன் கோயிலுக்கு நேர்ந்துவிடப்பட்ட கடா. இவன் காணாமல் போனதில் இருந்து எனது உயிர் கொஞ்சம் கொஞ்சமாக போய்க்கொண்டுள்ளது. என் மகனைப்பற்றி தகவல் தந்தாலோ, கண்டுபிடித்து தந்தாலோ 25 ஆயிரம் ரூபாய் சன்மானமாக வழங்கி, எனது உடலில் உள்ள எந்த பாகத்தை தானமாக கேட்டாலும் சத்தியமாக தருகிறேன்’ என உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

‘மனிதர்கள் மாயமானால், விளம்பரம் கொடுத்து கண்டுபிடித்து தாருங்கள் எனக் கேட்பது வழக்கம். ஆனால் இவரோ, கிடாவை காணவில்லை, கண்டுபிடித்து தந்தால் 25 ஆயிரம் ரூபாய் சன்மானத்துடன் உடல் உறுப்பையும் தானமாக தருகிறேன் என்கிறாரே… அப்படியானால், அந்த கிடாவை எவ்வளவு பாசத்துடன் வளர்த்திருப்பார்’ என ஒருவருக்கொருவர் பேசியபடி சென்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!