17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சிங்கப்பூர் பெருமையை பறைசாற்ற பைக்கில் தஞ்சாவூர் வந்த 3 பேர்..!

சிங்கப்பூர் பெருமையை பறைசாற்ற பைக்கில் தஞ்சாவூர் வந்த 3 பேர்..!

எழுதியவர்: ஆசிரியர் May 6, 2019, 2:59 pm

சிங்கப்பூரின் 200வது ஆண்டு கொண்டாட்டத்தை மக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக, அதிநவீன மோட்டார் சைக்கிள்களில் 3 பேர் தஞ்சாவூர் வந்தனர்.

தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட பன்னீர்செல்வம் (53), பாலச்சந்திரன் (56), அருணகிரி (52) ஆகிய மூவரும் சிங்கப்பூரில் தொழில் செய்து வருகின்றனர். இவர்கள், சிங்கப்பூர் தோற்றுவிக்கப்பட்டு 200 ஆண்டுகள் நிறைவடைந்ததை மற்ற நாட்டு மக்களுக்கு தெரியபடுத்தும் வகையில், ஒவ்வொரு நாட்டுக்கும் மோட்டார் சைக்கிள் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டனர்.

இதையடுத்து, அதிநவீன மோட்டார் சைக்கிள்கள் மூலம் சாலை மற்றும் கடல் மார்க்கமாக தஞ்சாவூர் வந்தனர். பின்னர் இவர்கள் மூவரும், தஞ்சை பெரிய கோயிலுக்குள் சென்று சுவாமி தரிசனம் செய்தனர். அப்போது, வெளியில் நிறுத்தப்பட்டிருந்த அவர்களின் நவீன மோட்டார் சைக்கிளை ஆச்சரியத்துடன் பார்த்த பொதுமக்கள், அதன் அருகில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

சுவாமி தரிசனம் முடித்துவிட்டு வெளியே வந்த பாலசந்திரன், பன்னீர்செல்வம், அருணகிரி ஆகியோர் கூறியதாவது; “நாங்கள் சிங்கப்பூரில் தொழில் செய்து வருகிறோம். சிங்கப்பூர் தோற்றுவிக்கப்பட்டு 200 ஆண்டுகள் ஆகிறது. இதை, மற்ற நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கு தெரியப்படுத்தவே நாங்கள் மோட்டார் சைக்கிள் மூலம் வலம் வருகிறோம்.

இந்த மோட்டார் சைக்கிள் விலை 28 லட்சம் ரூபாய். இதில், ஜி.பி.ஆர்.எஸ். கருவி, கூகுள்மேப், டி.வி., ரேடியோ, ஏர் கூலர் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளன. இந்த மோட்டார் சைக்கிள்கள் 1,800 சி.சி. திறன் கொண்டவை. பெட்ரோல் மூலம் இயங்கும் இந்த மோட்டார் சைக்கிள், ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 15 கி.மீ தூரம் செல்லும்.

நாங்கள், கடந்த மார்ச் மாதம் 26ம் தேதி சிங்கப்பூரில் பயணத்தை தொடங்கினோம். அங்கிருந்து மலேசியா, தாய்லாந்து, மியான்மர், வங்கதேசம், திபெத், நேபாளம் வழியாக இந்தியாவுக்கு வந்தோம். பெரும்பாலும் சாலை வழியாகவே வந்தோம். ஒரு சில இடங்களில் படகில் மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு பயணம் செய்தோம்.

நாளொன்றுக்கு சுமார் 400 கி.மீ. தூரம் பயணம் செய்து வருகிறோம். இதன் மூலம், 13 ஆயிரம் கி.மீ. தூரம் செல்ல திட்டமிட்டுள்ளோம். தஞ்சை பெரிய கோயிலில் இருந்து வேளாங்கண்ணி உட்பட பல்வேறு இடங்களுக்கு சென்றுவிட்டு, வரும் 8ம் தேதி சென்னையில் பயணத்தை நிறைவு செய்து விட்டு விமானம் மூலம் மீண்டும் சிங்கப்பூர் செல்ல உள்ளோம்” என்று தெரிவித்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!