17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » “ஆட்சியைத் தக்கவைக்க தி.மு.க-வுடன்கூட கூட்டணி வைப்பார் எடப்பாடி!” – தினகரன் சாடல்

“ஆட்சியைத் தக்கவைக்க தி.மு.க-வுடன்கூட கூட்டணி வைப்பார் எடப்பாடி!” – தினகரன் சாடல்

எழுதியவர்: ஆசிரியர் May 6, 2019, 2:18 pm

எம்.எல்.ஏ-க்களைத் தகுதி நீக்கம் செய்தே தனது முதலமைச்சர் பதவியையும் ஆட்சியையையும் தக்கவைத்துக்கொள்கிறார் எடப்பாடி பழனிசாமி. இன்னும் சொல்லப்போனால், பதவிக்காக தி.மு.க-வுடன் கூட்டணி வைக்கக்கூட அவர் தயங்க மாட்டார் என அ.ம.மு.க பொதுச் செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி அ.ம.மு.க வேட்பாளர் சுந்தரராஜனை ஆதரித்து, வல்லநாட்டில் தினகரன் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர், ”இரட்டை இலைச் சின்னம் இருந்தால் ஜெயித்துவிடலாம் என அ.தி.மு.க-வினர் நினைக்கிறார்கள். அந்தச் சின்னம் எம்.ஜி.ஆர் கையில் இருந்தபோதும், ஜெயலலிதா கையில் இருந்தபோதும் நிச்சயம் வெற்றிதான். ஆனால், ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் என்ற இரண்டு துரோகிகள் கையில் இருக்கும்போது எப்படி வெற்றி கிடைக்கும்? ஆர்.கே.நகர் தொகுதியில் இரட்டை இலை வைத்திருந்த அவர்களை சுயேட்சையாக நின்ற நான், தோற்கடித்தேன். அதே நிலைதான் தற்போதும் ஏற்படும்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவப் படத்தை சட்டமன்றத்தில் வைக்கக் கூடாது என்ற தே.மு.தி.க,  அவருக்கு நினைவு மண்டபம் கட்டக் கூடாது என்று கூறிய பா.ம.க,  கடைசிவரை ஜெயலலிதாவைப் பார்க்க வராத மோடியின் பா.ஜ.க இவர்களுடன் கூட்டணி வைத்துக்கொண்டு ஆட்சியைக் காப்பாற்ற திட்டமிடுகிறார் எடப்பாடி பழனிசாமி.  ‘மோடியா இந்த லேடியா’ என ஜெயலலிதா எதிர்த்து நின்று ஜெயித்தார். இன்று, ‘மோடி எங்கள் டாடி’ என அவர்களிடம் சராணகதி அடைந்துள்ளார்கள்  பழனிசாமியும், பன்னீர் செல்வமும்.

அம்மாவின் மறைவுக்குப் பிறகு உள்ள ஆட்சிக் காலத்தை மோடியின் தயவால் ஓட்டிவிட்டார்கள். மீதமுள்ள ஆட்சியை எம்.எல்.ஏ-க்களைத் தகுதிநீக்கம் செய்தே தக்கவைத்துக்கொள்ளலாம் என நினைக்கிறார் எடப்பாடி. இப்போது இடைத்தேர்தலில் தங்களது ஆட்சியைக் காப்பாற்றிக்கொள்ள ஓட்டுக்கு 10 ஆயிரத்தில் இருந்து 20 ஆயிரம் வரை கொடுக்கத் தயாராக உள்ளார்கள்.

அ.ம.மு.க தி.மு.க-வுடன் மறைமுகக் கூட்டணி வைத்துள்ளது… ஸ்டாலினும் தினகரனும் ரகசியமாகத் திட்டம் தீட்டுகிறார்கள் என அ.தி.மு.க-வினர் குற்றம் சாட்டுகின்றனர். தி.மு.க-வில் இருந்துதான் மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் அ.தி.மு.க-வை தொடங்கினார். ஆனால், ஆட்சியையும் தன் முதல்வர் பதவியையும் தக்கவைத்துக்கொள்ள தி.மு.க-வின் காலைப் பிடித்து கூட்டணி வைத்துக்கொள்ளக்கூட  எடப்பாடியார் தயங்க மாட்டார். மறைமுகமாக தி.மு.க-வுடன் கூட்டணி வைத்திருப்பது அ.தி.முக-தான்” என்றார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!