18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » “நான்கு இடைத்தேர்தலுக்குப் பின்னால் மிகப்பெரிய அரசியல் சூதாட்டம்!” – கமல்ஹாசன்

“நான்கு இடைத்தேர்தலுக்குப் பின்னால் மிகப்பெரிய அரசியல் சூதாட்டம்!” – கமல்ஹாசன்

எழுதியவர்: ஆசிரியர் May 4, 2019, 1:39 pm

தமிழகத்தில் நடைபெற உள்ள நான்கு தொகுதி இடைத்தேர்தலுக்குப் பின்னால் மிகப்பெரிய அரசியல் சூதாட்டம் உள்ளது. அதை மாற்றும் விசை மக்களாகிய உங்களின் விரலில் உள்ளது என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்ய கட்சி வேட்பாளர் காந்தியை ஆதரித்து அக்கட்சித் தலைவர் கமல்ஹாசன் கலந்துகொண்ட தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் தூத்துக்குடி மாவட்டம் சிலுவைப்பட்டியில் நடைபெற்றது. இதில் பேசிய அவர், “அன்பாலும் நேர்மையாலும் இணைந்த கூட்டத்துக்கு நான் வந்திருப்பது எனக்குப் பெருமை. இங்கிருக்கும் அனைவரையும் அரசியலில் ஒன்றிணைத்தது ஒரு தார்மீகமான கோபம்தான். நியாயம் நடந்தே ஆக வேண்டும் என தனித்தனியாக கோபப்பட்டு கொண்டிருந்தவர்கள் எல்லாம் ஒன்றாக அமர்ந்திருக்கும் மேடை இது.

அரசியலில் எங்களின் முதலீடு நேர்மை. அவர்களின் முதலீடு துரோகம். ஆகவே துரோகத்தை அகற்றி மாற்றத்திற்கான விதை தூவ வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. நம் பிள்ளைகளைப் பார்த்து, நாம் ஏற்றி வைத்த அரசே துப்பாக்கிச் சூடு நடத்திய கொடுமை இனி நிகழாமல் இருப்பதற்கு நம் ஆணைப்படி நடக்கும் அரசு, நம் சட்டப்படி நடக்கும் அரசு உருவாக்க வேண்டும். அது மக்களாட்சியாக இருக்க வேண்டும்.

முன்பின் தெரியாதவர்களாக, சகோதரர்களாக, குடும்பமாக இணைந்துவிட்டோம். இப்படித்தான் இருக்க வேண்டும். குடும்ப அரசியல். உங்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைக் கொடுக்க மறந்த அரசைக் கண்டிக்கும் குரல்களில் ஒருவன் நான். குடிதண்ணீரை 6ரூபாய் கொடுத்து வாங்கும் கொடுமை மாற வேண்டாமா?

நீங்கள் பார்க்காத ஒரு எதிர்காலத்தை நாம் பார்க்காத எதிர்காலத்தை நம் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் பார்க்க வேண்டும். அந்த மாற்றத்துக்கான விதையை தூவாமல் போய் விட்டால் நாமும் துரோகிகளாவோம். வாக்களிப்பது நாம் செய்ய வேண்டிய முக்கிய கடமைகளில் ஒன்று. நிலத்தடி நீர் வளம் பாதுகாக்கப்பட வேண்டும்.

தமிழகத்தில் 4தொகுதிகளுக்குதான் தேர்தல் நடக்க இருக்கிறது. ஆனால், அதற்குப் பின்னால் ஒரு மிகப்பெரிய அரசியல் சூதாட்டம் உள்ளது. அதை மாற்றும் விசை உங்களின் விரல்களில் உள்ளது. ஒரு விரல் புரட்சி செய்யுங்கள். அதன்பின் என் பேச்சும் செயலும் வேகம் எடுக்கும். எங்களின் கட்சியிலும் பிழை இருக்கும். அந்தப் பிழை குறித்து ஒரு பெரும் கூட்டத்தைக் கேள்வி கேட்கவிட்டு அதற்கான பதில் கூறுவோம். பதில் கூற முடியவில்லை எனில் அடுத்த கூட்டத்தில் அதற்கான பதிலைத் தெரிவிக்கும் தைரியம் மக்கள் நீதி மய்யத்தில்தான் உள்ளது.

தலைமுறை தலைமுறைகளாக தேர்தலில் ஒன்று இது இல்லையென்றால் அது என மாறி மாறி இரண்டு கட்சிகளுக்கு வாக்கு செலுத்தி இருக்கிறோம். இன்று அதை எதிர்த்து ஒரு புதிய மாற்றத்தை ஒரு புதிய கருத்தை எடுத்துச் சொல்வதற்கு நாங்கள் இருக்கிறோம் என்பதை இளைஞர்கள் ஆகிய நீங்கள் உங்களின் பெற்றோர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்” என்றார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!