17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தங்கத்திற்கு ஆசைப்படாத அக்கா – தம்பிக்கு போலீஸ் அதிகாரி பாராட்டு..!

தங்கத்திற்கு ஆசைப்படாத அக்கா – தம்பிக்கு போலீஸ் அதிகாரி பாராட்டு..!

எழுதியவர்: ஆசிரியர் April 17, 2019, 2:06 am

வீதியில் கண்டெடுத்த தங்கச் செயினை உரியவரிடம் ஒப்படைத்த அக்கா – தம்பியை, விழுப்புரம் மாவட்ட போலீஸ் அதிகாரி பாராட்டி ஊக்கப்பரிசு வழங்கினார்.

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த நத்தகாளியைச் சேர்ந்த தம்பதி சரவணன் – சரோஜா. இவர்களது மகள் ஜோதிகா (13), மகன் சதீஷ் (10). இருவரும், அருகில் உள்ள ஏமம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் 8 மற்றும் 5ம் வகுப்பு படிக்கின்றனர்.  சில தினங்களுக்கு முன் காலையில், இருவரும் பள்ளிக்கு நடந்து சென்றனர். அப்போது, ரோட்டோரத்தில் ஒரு தங்கச் செயின் கிடந்துள்ளது. அதை எடுத்து, பள்ளியின் தலைமை ஆசிரியர் செல்வகுமாரிடம் ஒப்படைத்தனர்.

சுமார் ஒரு பவுன் எடைகொண்ட அந்த தங்கச் செயின் குறித்து, தலைமை ஆசிரியர் செல்வகுமார் தனது ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் பக்கங்களில் பதிவிட்டார். இதைப்பார்த்த, ஏமம் அடுத்த நெய்வனை கிராமத்தைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர், அது தனக்கு சொந்தமானது என தெரிவித்தார். உரிய விசாரணைக்குப் பின், அவரிடம் அந்தச் செயின் ஒப்படைக்கப்பட்டது.

ஏழ்மையான நிலையில் இருந்தபோதிலும், நேர்மையாக செயல்பட்ட ஜோதிகா – சதீஷ் இருவரையும் தலைமை ஆசிரியர் செல்வகுமார் உட்பட மற்ற ஆசிரியர்கள் பாராட்டினர். இதுகுறித்து தகவல் அறிந்த விழுப்புரம் எஸ்.பி. ஜெயகுமார், ஜோதிகா மற்றும் சதீஷை கள்ளக்குறிச்சி போலீஸ் ஸ்டேஷனுக்கு வரவழைத்தார். அங்கு, இருவருக்கும் சால்வை அணிவித்து, ஊக்கப்பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!