நாடாளுமன்ற மக்களவை பொதுத்தேர்தலை முன்னிட்டு, இராமநாதபுரம் நகரம், அரண்மனைப் பகுதியிலிருந்து இராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் வரை மாவட்ட ஆட்சியர் கொ.வீர ராகவ ராவ் தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனா முன்னிலையில், தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்காக வருகை தந்துள்ள துணை ராணுவ படையினர் மற்றும் தமிழ்நாடு காவல் துறை சிறப்பு பிரிவு படையினர் பங்கேற்ற அடையாளஅணி வகுப்பு நடைபெற்றது.
மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவ ராவ் தெரிவித்ததாவது: இராமநாதபுரம் மாவட்டத்தில், இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கான பொதுத்தேர்தல் மற்றும் பரமக்குடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 18.4.2019 அன்று நடைபெறவுள்ளது. அதனடிப்படையில், வாக்குப்பதிவினை அமைதியான முறையில் நிறைவேற்றிடும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் முன்னேற்பாடு பணிகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட 1,916 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. அவற்றில் வருவாய்த்துறை மற்றும் காவல்துறை ஒருங்கிணைந்து மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் 188 வாக்குச்சாவடி மையங்கள் அசம்பாவிதங்கள் நடைபெறக்கூடும் எனவும், 135 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவை எனவும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வாக்குச்சாவடி மையங்களில் பொதுமக்கள் எவ்வித அச்சமுமின்றி சுதந்திரமாக வாக்களித்திட ஏதுவாக அனைத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்தகைய பதற்றமான வாக்குச்சாவடி மையங்களில் துணை ராணுவ படையினர், தமிழ்நாடு காவல்துறை சிறப்புப்பிரிவு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
அதேபோல தேர்தல் நுண் பார்வையாளர்களால் வெப் கேமரா மூலம் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. அதனடிப்படையில் இராமநாதபுரம் மாவட்டத்திற்கு 3 கம்பெனி துணை ராணுவ படையினர் (1 கம்பெனிக்கு தலா 40 நபர்கள் வீதம் 120 வீரர்கள்), 2 கம்பெனி தமிழ்நாடு காவல்துறை சிறப்புப்பிரிவு படையினர் (1 கம்பெனிக்கு தலா 120 நபர்கள் வீதம் 240 காவலர்கள்) வருகை தந்துள்ளனர். இந்த பாதுகாப்பு படை வீரர்கள் பங்கேற்ற அடையாள அணி வகுப்பானது இராமநாதபுரம் அரண்மனை அருகே துவங்கி சாலைத்தெரு வழியாக இராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் அருகே நிறைவு பெற்றது. அந்த வகையில் இராமநாதபுரம் மாவட்டத்தில் அமைதியான முறையில் தேர்தல் வாக்குப்பதிவினை நிறைவேற்றும் வகையில் மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது என தெரிவித்தார்.
இராமநாதபுரம் உதவி தேர்தல் அலுவலர், வருவாய் கோட்டாட்சியர் ஆர்.சுமன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் லயோலா இக்னேஷியஸ் (மது விலக்குப் பிரிவு), திரு.தங்கவேல் (தலைமையிடம்), துணை காவல் கண்காணிப்பாளர்கள் எம்.நடராஜன் (இராமநாதபுரம்), புகழேந்தி (திருவாடானை) உட்பட அரசு அலுவலர்கள், காவல்துறையை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.










You must be logged in to post a comment.