17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » இராமநாதபுரம் மாவட்ட 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு 7,348 வாக்குச்சாவடி அலுவலர்கள் நியமனம்..

இராமநாதபுரம் மாவட்ட 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு 7,348 வாக்குச்சாவடி அலுவலர்கள் நியமனம்..

எழுதியவர்: ஆசிரியர் March 31, 2019, 5:32 pm

இராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பரமக்குடி ஆயிர வைசியா மேல்நிலைப்பள்ளி, முதுகுளத்தூர் சோனை மீனாள் கலைக்கல்லூரியில் முதல் கட்ட பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சியை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் பார்வையிட்டார்.

பரமக்குடி ஆயிர வைசியா மேல்நிலைப்பள்ளியில் நடந்த பயிற்சியில் பரமக்குடி சட்டமன்ற தொகுதி  இடைத்தேர்தலுக்கான தேர்தல் பொது பார்வையாளர் ஆனந்த் ஸ்வரூப் முன்னிலை வகித்தார்.மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் கூறியதாவது: நாடாளுமன்ற பொதுத்தேர்தல், பரமக்குடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு சுமுகமாக வாக்குப்பதிவு நடத்த அனைத்து முன்னேற்பாடுகளும் மாவட்ட நிர்வாகம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் உள்ள 4  சட்டமன்ற தொகுதிகளில் 1,364 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு ஒவ்வொரு வாக்குச்சாவடி மையங்களிலும் சாய்வுதளம், குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் உறுதி செய்யப்பட்டுள்ளன. தேர்தல் நாளில் பணியில் ஈடுபட பரமக்குடி சட்டமன்ற  தொகுதியில் 1,615 வாக்குச்சாவடி அலுவலர்கள், திருவாடானை சட்டமன்ற தொகுதியில் 1,504 வாக்குச்சாவடி  அலுவலர்கள், ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் 2,169 வாக்குச்சாவடி அலுவலர்கள் , முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதியில் 2,060 வாக்குச்சாவடி அலுவலர்கள் என 7,348 வாக்குச்சாவடி அலுவலர்கள்  நியமிக்கப்பட்டு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. அந்தந்த சட்டமன்ற தொகுதி வாரியாக நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி  அலுவலர்களுக்கு தேர்தல் தொடர்பான முதற்கட்ட பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.  வாக்குப்பதிவை அமைதியான முறையில் நிறைவேற்ற வாக்குச்சாவடி அலுவலர்களின் பங்கு மிகவும்  முக்கியம். ஒவ்வொரு வாக்குச்சாவடி அலுவலரும் வாக்குப்பதிவு நாளுக்கு முந்தைய தினமே தங்களுக்கு  ஒதுக்கிய வாக்குச்சாவடி மையத்தில் வாக்குப்பதிவிற்கு தேவையான தளவாட சாமான்கள், பொருட்கள்  அனைத்தும் தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மின்னணு வாக்குப்பதிவு  இயந்திரம், வாக்காளர் சரிபார்ப்பு இயந்திரம் ஆகியவற்றை கையாளும் முறை குறித்து முழுமையாக அறிந்து  தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். வாக்குப்பதிவு நாளன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்குவதற்கு முன்னதாக வேட்பாளர்களின்  முகவர்கள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்பாடு குறித்து உறுதிபடுத்தும் விதமாக மாதிரி வாக்குப்பதிவு நடத்தி சான்றொப்பம் இட வேண்டும். வாக்குப்பதிவு துவங்கும் முன்னதாக வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு முடிவினை நீக்கி வாக்குப்பதிவிற்கு தயாராக வேண்டும். வாக்காளர்களின் வாக்குப்பதிவு ரகசியத்தைபாதுகாக்கும் வகையில் வாக்குச்சாவடி அமைப்பை ஏற்படுத்த வேண்டும். தேர்தல் பணியில் ஈடுபடும் வாக்குச்சாவடி அலுவலர்கள் தவறாமல் தங்களது வாக்கை பதிவு செய்ய ஏதுவாக முன்னதாகவே உரிய படிவம் சமர்ப்பித்து தேர்தல் பணி சான்று, தபால் வாக்குச்சீட்டு பெற வேண்டும். தேர்தல் நடைமுறைகளில் இந்திய தேர்தல் ஆணையம் வலியுறுத்திய விதிமுறைகள் எவ்வித பாரபட்சமுமின்றி முறையே பின்பற்றி பொதுமக்கள் சுதந்திரமாக, அமைதியான முறையில் தங்களது வாக்கை பதிவு செய்ய ஏதுவாக அனைத்து வாக்குச்சாவடி அலுவலர்கள் பணியாற்ற வேண்டுமென  மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

உதவி தேர்தல் அலுவலர்கள் ராமன், கயல்விழி உட்பட வட்டாட்சியர்கள், வாக்குச்சாவடி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!