17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மகளின் வெற்றிக்காகத் திருச்செந்தூரில் வழிபாடு செய்த ராசாத்தி அம்மாள்!..

மகளின் வெற்றிக்காகத் திருச்செந்தூரில் வழிபாடு செய்த ராசாத்தி அம்மாள்!..

எழுதியவர்: ஆசிரியர் March 27, 2019, 1:56 pm

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பா.ஜ.க வேட்பாளர் தமிழிசையைத் தொடர்ந்து கனிமொழியின் வெற்றிக்காக அவரின் தாயார் ராசாத்தி அம்மாள் சண்முகார்ச்சனை செய்து வழிபாடு நடத்தினார்.

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க சார்பில் தமிழிசை செளந்தரராஜன் போட்டியிடுகிறார். தி.மு.க கூட்டணி சார்பில் கனிமொழி போட்டியிடுகிறார். இரண்டு பெண் தலைவர்கள் இத்தொகுதியில் போட்டியிடுவதால், ஸ்டார் தொகுதி என்ற அந்தஸ்தைப் பெற்றதுடன், தேர்தல் களம் மிகுந்த பரபரப்பாகக் காணப்படுகிறது. இந்நிலையில் பா.ஜ.க வேட்பாளரான தமிழிசை செளந்தரராஜன் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். அப்போது எதிரிகளை வெல்லும் வல்லமை பெறக்கூடிய சத்ரு சம்ஹார யாகம் நடத்தினார். மேலும், ஒன்றரை அடி உயர வெள்ளி வேலை காணிக்கையாகச் செலுத்தினார்.

இதைத் தொடர்ந்து, தி.மு.க வேட்பாளர் கனிமொழியின் வெற்றிக்காக அவரின் தாயார் ராசாத்தி அம்மாள், சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்தார். கோயிலுக்கு வந்த ராசாத்தி அம்மாளை தி.மு.க-வினர் வரவேற்றனர். பின்னர், கோயிலுக்குள் சென்ற அவர்,மூலவர் சுப்பிரமணிய சுவாமி சந்நிதியில் பயபக்தியுடன் சுவாமி தரிசனம் செய்தார். இதைத் தொடர்ந்து, அருகில் உள்ள உற்சவர் சண்முகர் சந்நிதியில் ராசாத்தி அம்மாள் சண்முகார்ச்சனை செய்து வழிப்பட்டார். தொடர்ந்து, அனைத்து சந்நிதிகளிலும் சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோயில் அர்ச்சகர் பூஜை செய்யப்பட்டு சுவாமிக்கு சாற்றப்பட்ட பட்டுத்துணி, வேலும் சேவற்கொடியும் பிரசாதமாக வழங்கினார். பின்னர், கோயில் வளாகத்தில் யானை தெய்வானைக்கு பழம் கொடுத்து ஆசீர்வாதம் பெற்றார். ராசாத்தி அம்மாளிடம் கோயிலில் பூஜை செய்தது குறித்து கேட்டதற்கு, “தேர்தலில் என் மகளை முருகப் பெருமான் வெற்றி பெறச் செய்தாலே போதும்” என்றார். இந்துக்கள் வழிப்பாட்டு முறையை பகுத்தறிவு விமர்சனம் செய்து வரும் தி.மு.க-வினர் திடீர் வழிபாடு நடத்தியது பக்தர்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளது. 

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!