18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » வள்ளியூரில் நரிக்குறவர்களின் குழந்தைகளை தனது காரில் ஏற்றி சுற்றி வலம் வந்த நெல்லை மாவட்ட ஆட்சியர் ..

வள்ளியூரில் நரிக்குறவர்களின் குழந்தைகளை தனது காரில் ஏற்றி சுற்றி வலம் வந்த நெல்லை மாவட்ட ஆட்சியர் ..

எழுதியவர்: ஆசிரியர் March 6, 2019, 1:47 am

நெல்லை மாவட்டம் வள்ளியூர் நரிக்குறவர் காலனியில் நரிக்குறவர் மாணவிகளை நேரில் சென்று பாராட்டிய மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.ஷில்பா பிரபாகர் சதீஷ் நரிக்குறவர்களின் குழந்தைகளை தனது காரில் ஏற்றி சுற்றி வலம் வந்தார். கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் நெல்லை மாவட்ட ஆட்சியர் நரிக்குறவர் குழந்தைகளை தனது காரில் ஏற்றி வலம் வந்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

நெல்லை மாவட்டத்தில் முதல் முறையாக நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த மாதவி மற்றும் பார்வதி என்ற இரண்டு மாணவிகள் பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுத உள்ளனர் என்ற விபரம் அறிந்த மாவட்ட ஆட்சியர் திருமதி. ஷில்பா பிரபாகர் சதீஷ் அவர்களை பாராட்டும் விதமாக அவர்கள் தங்கியிருக்கும் வள்ளியூர் பூங்கா நகரில் உள்ள நரிக்குறவர்களின் காலனிக்கு சென்றார்.

அந்த கூடாரத்தில் இருந்த மாணவிகளை நேரில் பார்த்ததோடு பரிசுகளும் வழங்கினார். மேலும் கல்வி கற்றால் மட்டுமே எல்லா வகையிலும் முன்னேற முடியும் என்பது பற்றி அவர்களுக்கு அறிவுரை வழங்கினார். தன்னை போலவே நீங்களும் காரில் ஏறி அமர்ந்து பணி செய்ய வேண்டும் என கூறியதுடன் தனது காரிலேயே அவர்களை ஏற்றி அந்த பகுதியில் வலம் வந்தார் .

மேலும் அங்குள்ள நரிக்குறவர்களுடன் நீண்ட நேரம் உரையாடி அவர்களுடைய குறைகளை கேட்டறிந்ததுடன் உடனடியாக நரிக்குறவர் காலனியில் அங்கன்வாடி பள்ளி ஒன்றை திறப்பதற்கும் உத்தரவு பிறப்பித்தார்.

100 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் அந்த காலனியில் 38 பேருக்கு மட்டுமே இலவச வீடுகள் வழங்கப்பட்டுள்ளதால் மற்றவர்களுக்கும் இலவச பட்டா வழங்கி அடுக்குமாடி வீடு கட்டுவதற்கான திட்ட மதிப்பீடுகளையும் அதிகாரிகளுக்கு சமர்ப்பிக்க உத்தரவிட்டார்.

நரிக்குறவர் இனத்தவர்களின் குறைகள் அனைத்தையும் மாவட்ட ஆட்சியர் கேட்டறிந்து செயல்படுத்த உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியரின் இந்த செயலை பொதுமக்கள் பாராட்டுகின்றனர்.

செய்தியாளர்:-அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!