18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரத்தில் ஜாக்டோ ஜியோ போராட்டம் 44 பேர் சிறையிலடைப்பு..

இராமநாதபுரத்தில் ஜாக்டோ ஜியோ போராட்டம் 44 பேர் சிறையிலடைப்பு..

எழுதியவர்: ஆசிரியர் January 29, 2019, 10:43 am

கடந்த 2003 ஏப்.1 ஆம் தேதிக்கு பிறகு அரசுப் பணியில் சேர்ந்தோருக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கு, மத்திய அரசு பணியாளர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், அரசின் பல்வேறு துறை பணியாளர்களுக்கு இடையேயான ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று வரும் அங்கன்வாடி , பணியாளர்கள் சத்துணவு பணியாளர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள், ஊரக நூலகர்கள், கல்வித்துறை துப்புரவு பணியாளர்கள், தொகுப்பூதிய சிறப்பாசிரியர்கள், செவிலியர்கள், பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் வரையறுக்கப் பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், 5 ஆயிரம் பள்ளிகள் மூடும் நடவடிக்கையை அரசு கைவிட வேண்டும், 3,500 துவக்கப்பள்ளிகளை உயர், மேல்நிலை பள்ளிகளுடன் இணைக்கும் முடிவை அரசு விலக்கி கொள்ள வேண்டும், பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்திற்கு பிடித்தம் செய்த தொகையை ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கணக்கில் சேர்க்க வேண்டும் உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், அரசு பணியாளர்கள் (ஜாக்டோ-ஜியோ) பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தினர். நிர்வாகிகளை அழைத்து பேசி எவ்வித முடிவையும் அறிவிக்க தமிழக அரசு முன்வராததால் காலவரையற்ற போராட்டம் தொடர்ந்தது.

போராட்டத்தை விடுத்து பணிக்கு வர வேண்டும் என அரசு வேண்டுகோள் விடுத்தது. மேலும் போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கப்பட மாட்டாது என அரசு எச்சரிக்கையை மீறி ஜன.22 முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்வு நெருங்குவதால் மாணவர்கள் நலன் கருதி ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியது. ஆனால், போராட்டம் தீவிரமடைந்தது. இதையடுத்து ராமநாதபுரத்தில் நடந்த ஆர்ப்பாட்டம் தொடர்பாக ஜன., 25ல் 18 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஐந்தாவது நாளாக நேற்றைய போராட்டம் தொடர்பாக 886 பெண்கள் உள்பட 1,500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டவர்களில் 45 பேர் தவிர எஞ்சியோர் நள்ளிரவில் விடுவிக்கப்பட்டனர். இதில் துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் 11 பேர், உதவி தலைமை ஆசிரியர் 1 , உடற்கல்வி ஆசிரியர் 1 , பேராசிரியர் 1 , உதவி பேராசிரியர்கள் 2, பட்டதாரி ஆசிரியர்கள் 21 பேர், இடை நிலை ஆசிரியர் 1 , முதுகலை பட்டதாரி ஆசிரியர் 3 , துணை வட்டாட்சியர் 1 , ஊரக வளர்ச்சி உதவியாளர்கள் 2, பேரூராட்சி இளநிலை உதவியாளர் 1 என 45 பேரை ராமநாதபுரம் ஜூடிசியல் மாஜிஸ்டிரேட் ராதாகிருஷ்ணன் முன்னிலையில் போலீசார் ஆஜர்படுத்தினர். இதில் ஒருவர் இரு தய நோயாளி என்பதால் நிபந்தனை ஜாமீனில் விடுவித்து எஞ்சிய 44 பேர் ராமநாதபுரம் சிறையில் அடைக்கப்பட்டனர். * ராமநாதபுரம் மாவட்டத்தில் 4,020 ஆசிரியர்களுக்கு துறை ரீதியான நடவடிக்கைக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. * மாவட்டத்தில் தற்காலிக ஆசிரியர் பணிக்கு 3,891 பேர் விண்ணப்பித்தனர். * இதில் 1,254 பேர் தகுதியுடையவர்கள் என சான்றிதழ் சரிபார்ப்பில் தெரிய வந்துள்ளது என முதன்மை கல்வி அலுவலர் முருகன் தெரிவித்தார்.

செய்தி:- முருகன், இராமநாதபுரம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!