ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வடக்கு தெரு தாருஸ்ஸலாம் மர்கஸில் சமூக செயல்பாட்டாளர்கள் கூட்டமைப்பின் சிறப்பு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கீழக்கரையின் சமூக, கல்வி மற்றும் பொதுச் சேவை தொடர்பான பல முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. குறிப்பாக, கீழக்கரை தனியார் கல்லூரி சாலையில் வேகத்தடை அமைப்பதாக வாக்குறுதி அளித்தும் நிறைவேற்றாத ராமநாதபுரம் மாவட்ட நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளை கண்டித்து, ஹல்வா வழங்கும் வித்யாசமான முறையிலான கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது.
மேலும், கீழக்கரை புதிய பேருந்து நிலையத்திற்கு அனைத்து பேருந்துகளும் பகல் மற்றும் இரவு நேரங்களில் முறையாக வந்து செல்ல வேண்டும் என்றும், அங்கு அரசு போக்குவரத்து நேர கண்காணிப்பாளரை பணியமர்த்த வேண்டும் என்றும் வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடத்தவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
அதேபோல், 480 மதிப்பெண்களுக்கு மேல் (உயர்நிலை) மற்றும் 580 மதிப்பெண்களுக்கு மேல் (மேல்நிலை) பெற்ற மாணவர்களை பாராட்டும் விதமாக, அவர்களின் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கேடயம் வழங்கவும் தீர்மானிக்கப்பட்டது.
மேலும், திறமையான மாணவர்களை அடையாளம் கண்டு, அவர்களை உயர்கல்வி மற்றும் அரசுப் பணிகளுக்கு வழிநடத்த சமூக மற்றும் சமுதாய அமைப்புகள் முன்வர வேண்டும் என்பதையும் வலியுறுத்தி, சம்பந்தப்பட்ட அமைப்புகளின் நிர்வாகிகளிடம் மனு வழங்கவும் முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்தில் எடுத்த முடிவுகள் அனைத்தும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.




You must be logged in to post a comment.