கோவை மாவட்டத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு வனத்துறை (கோவை வனக்கோட்டம் – மதுக்கரை வனச்சரகம்) மற்றும் வனஉயிர் மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை (WNCT) இணைந்து வாளையார் வனப்பகுதியில் சிறப்பு வனத்தூய்மைப் பணியை நேற்று மேற்கொண்டன.
இந்த தூய்மைப் பணியில் கோவை ரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் மாணவ, மாணவியர்கள் பெரும் எண்ணிக்கையில் பங்கேற்று, வாளையார் வனப்பகுதி இரயில் தண்டவாளங்களில் கிடந்த பிளாஸ்டிக் கழிவுகள், கண்ணாடி பாட்டில்கள் உள்ளிட்ட குப்பைகளை அகற்றி வனப்பகுதியை தூய்மைப்படுத்தினர்.
நிகழ்ச்சிக்கு கோவை மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு தலைமை வகித்து தூய்மைப் பணியை தொடங்கி வைத்து மாணவர்களிடையே உரையாற்றினார். அவர் பிளாஸ்டிக் கழிவுகள் சுற்றுச்சூழலுக்கு ஏற்படுத்தும் தீவிர பாதிப்புகள் மற்றும் வனஉயிரின பாதுகாப்பின் அவசியம் குறித்து விழிப்புணர்வு வழங்கினார்.
மேலும் WNCT அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சிராஜுதீன் மாணவர்களிடையே உரையாற்றி, இயற்கை மற்றும் வனங்களை பாதுகாப்பதில் இளைஞர்களின் பங்கு முக்கியமானது என வலியுறுத்தினார். தொடர்ந்து மதுக்கரை வனச்சரக அலுவலர் அருண்குமார் வழிகாட்டுதலின்படி தூய்மைப் பணி நடைபெற்றது.
வனத்துறை மற்றும் WNCT இணைந்து நடத்திய இந்த நடவடிக்கையில் மாணவர்கள் காட்டிய உற்சாகமான பங்கேற்பு, பொதுமக்களிடையே நெகிழி ஒழிப்பு குறித்த விழிப்புணர்வை மேலும் வலுப்படுத்தும் வகையில் அமைந்திருந்தது.




You must be logged in to post a comment.