இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுக்கா, தொண்டி பேரூராட்சியில் பொதுநிதி மற்றும் வளர்ச்சி திட்டப் பணிகளில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக எழுந்த புகாரின் பேரில், பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த முறைகேடுகள் தொடர்பாக தொண்டி பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் கலந்தர் ஆசிக் அஹமது சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் (WP CRL (MD) No.977/2026) வழக்கு தொடர்ந்தார். மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், புகார் குறித்து முழுமையான விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க 8 வார காலக்கெடு விதித்ததுடன், விசாரணை அறிக்கையை லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறைக்கு சமர்ப்பிக்கவும் உத்தரவிட்டது.
நீதிமன்ற உத்தரவின்படி, சிவகங்கை மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் மேற்கொண்ட விரிவான விசாரணையில், கடந்த 01.04.2022 முதல் தற்போது வரை தொண்டி பேரூராட்சியில் மேற்கொள்ளப்பட்ட பல திட்டப்பணிகள், மன்றத்தின் ஒப்புதல் இன்றி தன்னிச்சையாக மேற்கொள்ளப்பட்டதாக கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், மன்ற கூட்ட நிகழ்ச்சி நிரலில் (Meeting Agenda) செலவுகள் குறைவாக அல்லது முழுமையாக வெளிப்படுத்தப்படாமல் தவறான தகவல்கள் வழங்கப்பட்டதாகவும், மன்ற கூட்ட பதிவேடுகள் முறையாக பராமரிக்கப்படவில்லை என்றும் விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தக் கடுமையான முறைகேடுகளுக்குப் பொறுப்பானதாக கருதப்படும் தொண்டி பேரூராட்சியில் பணியாற்றிய 6 செயல் அலுவலர்கள் மீது தமிழ்நாடு குடிமைப்பணிகள் (ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு) விதிகள் 17(b)-ன் கீழ் குற்றச்சாட்டு குறிப்பாணைகள் (Charge Memo) பிறப்பிக்கப்பட்டுள்ளன. இதற்கான உத்தரவை பேரூராட்சிகளின் இயக்குநர் பிரதீப் குமார் வழங்கியுள்ளார்.
அதேபோல், இந்த விசாரணை அறிக்கை சென்னை லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை தீவிரப்படுத்தப் பட்டுள்ளதால், தொண்டி பேரூராட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பு நிலவுகிறது




You must be logged in to post a comment.