05 September 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை அருகே 12ம் நூற்றாண்டு பாண்டியர் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு.!

மதுரை அருகே 12ம் நூற்றாண்டு பாண்டியர் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு.!

எழுதியவர்: Baker BAker April 4, 2026, 1:41 pm

மதுரை மாவட்டம் மேலூர் அருகிலுள்ள அம்பலக்காரன்பட்டி கிராமத்தில் பன்னிரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியர் கால கல்வெட்டுகள் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த கண்டுபிடிப்பு தமிழக வரலாற்று ஆய்வாளர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

தென்னகப் பண்பாட்டு ஆய்வு மையத்தின் ஆய்வாளர்களான முனைவர் தாமரைக்கண்ணன், முனைவர் மாரீஸ்வரன், முனைவர் கோபி, முனைவர் மீனாட்சி சுந்தரம் மற்றும் காரைக்குடி வரலாற்று ஆய்வாளர் பேராசிரியர் தி. பாலசுப்பிரமணியன் ஆகியோர் கள ஆய்வில் ஈடுபட்டபோது இந்த கல்வெட்டுகள் கண்டறியப்பட்டன. கிராம நிர்வாக அலுவலரின் அனுமதியுடன் மேற்கொண்ட ஆய்வில், இவை சுமார் 800 ஆண்டுகள் பழமையான தமிழ் கல்வெட்டுகள் என்பது உறுதியாகியுள்ளது.

கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுகள் இரண்டு துண்டுகளாக காணப்படுகின்றன. ஒவ்வொரு துண்டும் 9 வரிகளைக் கொண்டதாக இருந்து மொத்தம் 18 வரிகள் இடம்பெற்றுள்ளன. கல்வெட்டுகள் மிகவும் தேய்ந்த நிலையில் இருப்பதால் முழுமையான தகவலைப் புரிந்துகொள்ள சிரமம் இருப்பினும், தெளிவாகக் காணப்படும் சில சொற்களின் அடிப்படையில், அப்பகுதி மக்கள் மிகுந்த பொருட்செலவில் அங்கிருந்த கோவிலுக்கு திருப்பணி செய்திருப்பது தெரியவந்துள்ளது.

மேலும், கல்வெட்டில் “தென் களவழி நாடு”, “முத்தூற்று கூற்றம்”, “நல்லூரான தூற்றுவன்”, “கண்ணுடைய மண்டலம்” போன்ற பாண்டியர் கால நிர்வாகப் பிரிவுகளின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இது அக்காலத்தின் நிர்வாக அமைப்பை வெளிப்படுத்தும் முக்கிய ஆதாரமாக கருதப்படுகிறது.

இக்கல்வெட்டில் “ராச தேவராயன் எழுத்து” எனக் குறிப்பிடப்பட்டுள்ளதால், கல்வெட்டை பொறித்தவரின் பெயரும் பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. எழுத்து வடிவம் மற்றும் உள்ளடக்கத்தை அடிப்படையாகக் கொண்டு, இது பன்னிரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியர் காலத்தைச் சார்ந்ததாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இந்த கண்டுபிடிப்பு, தமிழர்களின் தொன்மையான பண்பாடு மற்றும் சமூக அமைப்பை வெளிப்படுத்தும் முக்கியமான வரலாற்றுச் சான்றாக பார்க்கப்படுகிறது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!