தமிழகக் கடலோர பகுதிகளில் நடைபெறும் கடத்தல் மற்றும் சட்டவிரோத செயல்பாடுகளை முற்றிலும் ஒழிக்கும் நோக்கில், கடலோர பாதுகாப்புக் குழுமம் தீவிர கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. கூடுதல் காவல்துறை இயக்குநரின் நேரடி அறிவுறுத்தலின்படி, அனைத்து கடற்கரை காவல் நிலையங்களிலும் சிறப்புப் படைகள் அமைக்கப்பட்டு 24 மணி நேர கண்காணிப்பு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் அவர்களின் உத்தரவின்பேரில், கடலோர பாதுகாப்புக் குழும ஆய்வாளர் ஜான்சிராணி தலைமையில், கீழக்கரை சார்பு ஆய்வாளர் சிவகுருநாதன் மற்றும் போலீசார், கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மண்டபம் டி.நகர் பகுதியில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, TN 56 S 9793 என்ற பதிவு எண்ணுடைய Ashok Leyland மினி லாரியில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக கடத்துவதற்காக ஒரு தனியார் குடோனில் பொருட்கள் இறக்கி வைக்கப்பட்டு கொண்டிருந்தது கண்டறியப்பட்டது. போலீசார் வந்ததை அறிந்ததும் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் தப்பி ஓடினர்.
இந்நிலையில், லாரி டிரைவர் ஒருவரை போலீசார் உடனடியாக கைது செய்து, லாரி மற்றும் குடோனில் இருந்த
விரலி மஞ்சள் – 2080 கிலோ
சிகரெட் பாக்கெட்டுகள் – 958 பெட்டிகள்
நிலக்கரி – 308 கிலோ
பீடி கட்டுகள் – 100 சிறிய பண்டல்கள்
பூச்சிக்கொல்லி மருந்து – 56 லிட்டர் மற்றும் 119 பாக்கெட்கள்
ஏலக்காய் – 10.45 கிலோ
மஞ்சள் பொடி – 60 கிலோ
கஞ்சா – 2.200 கிலோ பொருட்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட நபர் மண்டபம் கடற்கரை காவல் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், தப்பியோடிய குற்றவாளிகளை கைது செய்ய போலீசார் தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
கடத்தல் மற்றும் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கடலோர பாதுகாப்புக் குழுமம் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளது.




You must be logged in to post a comment.