ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கையின் போது, ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட வெளிநாட்டு நாணயங்கள் மற்றும் இந்திய பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி–ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கருமொழி சோதனைச் சாவடி பகுதியில் தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்தனர்.
சோதனையில், ராமநாதபுரம் மாவட்டம் சித்தார்கோட்டை பகுதியைச் சேர்ந்த முகம்மது பாசில் என்பவரிடம் இருந்து மலேசிய நாணயமான ரிங்கிட் சுமார் 10,000 மற்றும் ரூ.52,000 இந்திய பணம் இருப்பது கண்டறியப்பட்டது. இப்பணங்களுக்கு தேவையான உரிய ஆவணங்களை அவர் வழங்க முடியாததால், அதிகாரிகள் அவற்றை உடனடியாக பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட பணம் திருவாடானை தாலுகா அலுவலகத்திற்கு ஒப்படைக்கப்பட்டு, பின்னர் அரசு கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
இதனுடன், இதுவரை திருவாடானை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளின் போது மொத்தமாக மலேசிய ரிங்கிட் 15,927 மற்றும் சிங்கப்பூர் டாலர் 468 ஆகிய வெளிநாட்டு நாணயங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தேர்தல் விதிமுறைகள் முறையாக அமல்படுத்தப்படுவதற்காக கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்பட்டு வருவதாகவும், உரிய ஆவணங்கள் இன்றி பணம் எடுத்துச் செல்லும் நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.




You must be logged in to post a comment.