கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம்– ஊட்டி சாலையில் அமைந்துள்ள ஈத்கா பள்ளியில் ரமலான் மாதத்தை முன்னிட்டு சிறப்பு தொழுகை சிறப்பாக நடைபெற்றது. 2026ஆம் ஆண்டிற்கான புனித ரமலான் மாத நோன்பு தமிழகம் மற்றும் உலகம் முழுவதும் மார்ச் மாதத்தில் உற்சாகத்துடன் தொடங்கியுள்ளது.
ரமலான் மாத இறுதியில் ஷவ்வால் மாதப் பிறை தென்பட்டதும் ரம்ஜான் திருநாள் (ஈத்-உல்-பித்ர்) கொண்டாடப்படுகிறது. இஸ்லாமியர்களின் ஐந்து கடமைகளில் ஒன்றான நோன்பு, அதிகாலை முதல் மாலை வரை உணவு, நீர் எதையும் அருந்தாமல் இறை நம்பிக்கையுடன் கடைப்பிடிக்கப்படுகிறது.
ஏழைகளின் பசியை உணர்தல், தர்மம் செய்தல் மற்றும் சமூக ஒற்றுமையை வலியுறுத்துதல் இந்த நோன்பின் முக்கிய நோக்கங்களாகும். முப்பது நாட்கள் ஆன்மீகப் பயணமாகக் கருதப்படும் இந்த காலத்தில் மனக்கட்டுப்பாடு வளர்த்தல் மற்றும் பாவங்களுக்கு மன்னிப்பு கோருதல் முக்கியத்துவம் பெறுகிறது.
இந்த மாதத்தில் திருக்குர்ஆன் ஓதுதல் மற்றும் இரவு நேர சிறப்பு தொழுகையான தராவிஹ் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. மேலும், இஃப்தார் நிகழ்ச்சிகளில் அரசியல் தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்துகின்றனர்.
மேட்டுப்பாளையம் ஈத்கா பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த சிறப்பு தொழுகையில் பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இதில் 100 வயதை கடந்த இப்ராஹிம் என்ற மூத்த நபரும் கலந்து கொண்டது அனைவரின் கவனத்தை ஈர்த்தது.
இந்த நிகழ்வை முன்னிட்டு துணை காவல் கண்காணிப்பாளர் பாஸ்கர் உத்தரவின் பேரில், காவல் ஆய்வாளர் மணிகண்டன் தலைமையில் காவல்துறையினர் சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டனர். மேலும், இஸ்லாமிய சமுதாயத்தினர் சார்பில் மருத்துவ வசதி, குடிநீர் மற்றும் தொழுகைக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தன்னார்வலர்களால் சிறப்பாக செய்யப்பட்டிருந்தது.




You must be logged in to post a comment.