03 April 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » ரமழான் “ஜகாத்” பணத்தை பறிமுதல் செய்யக்கூடாது!; IUML கோரிக்கை..

ரமழான் “ஜகாத்” பணத்தை பறிமுதல் செய்யக்கூடாது!; IUML கோரிக்கை..

எழுதியவர்: Abubakker Sithik March 17, 2026, 12:58 pm

தமிழக சட்டமன்றத் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், இஸ்லாமியர்கள் ஏழைகளுக்கு வழங்கும் மார்க்கக் கடமையான “ஜகாத்” மற்றும் “பித்ரா” நிதியை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்வதை தவிர்க்க வேண்டும் என்றும், இது குறித்து அதிகாரிகளுக்கு உரிய அறிவுறுத்தல் வழங்குமாறும் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரிக்கு IUML தேசிய தலைவர் கே.எம்.காதர் மொகிதீன் கடிதம் எழுதி உள்ளார்.

அந்த கடிதத்தில், தமிழகத்தில் சட்டப் பேரவைத் தேர்தலை மிகச் சிறந்த முறையில் நடத்த தாங்கள் மேற்கொண்டுள்ள பணிகளுக்கு எங்களுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். சட்டப் பேரவைத் தேர்தல் அமைதியாக நடைபெற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என்றும் உறுதி அளிக்கிறோம். தேர்தல் தேதி அட்டவணை வெளியிட்டதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இதனால் மாநிலம் முழுவதும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனைகளை நடத்தி, 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் கொண்டு செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதனால் சிறு வணிகர்கள், அப்பாவி பொது மக்கள் பாதிப்பு அடைகிறார்கள் என்று பொதுவாகத் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

தற்போது ரமழான் காலம் என்பதால் இஸ்லாமியர்கள் அனைவரும் தங்களுடைய மார்க்கக் கடமையான ஜகாத் மற்றும் பித்ரா ஆகியவற்றை ஏழை எளிய மக்களுக்கு கொடுத்து வருகிறார்கள். ரமழானின் கடைசி 5 நாட்களில் இந்த ஜகாத் மற்றும் பித்ரா கொடுப்பதை முஸ்லிம்கள் வழக்கமாக கொண்டுள்ளார்கள். இப்படி, ஜகாத் கொடுப்பதற்காக பணத்தை எடுத்துச் செல்லும் போது, அவற்றை பறிமுதல் செய்வதை தவிர்க்க வேண்டும் என நாங்கள் அன்புடன் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம். இது தொடர்பாக உரிய அறிவுறுத்தல்களை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு தாங்கள் பிறப்பிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கிறோம்.

இஸ்லாமிய மக்கள் சார்பில் வைக்கப்படும் இந்த கோரிக்கையை தாங்கள் பரிசீலனை செய்து நிச்சயம் நடைமுறைப்படுத்துவீர்கள் என உறுதியாக நம்புகிறோம். உங்களுடைய தேர்தல் பணிகள் அனைத்தும் மிகச் சிறந்து முறையில் அமைய மீண்டும் எங்களுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம் என IUML தலைவர் காதர் மொகிதீன் தெரிவித்துள்ளார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!