16 March 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » கீழக்கரை மக்கள் களம் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் பொதுமக்களுக்கு அறிவிப்பு.!

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் பொதுமக்களுக்கு அறிவிப்பு.!

எழுதியவர்: Baker BAker March 16, 2026, 4:53 pm

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித்தலைவருமான சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.

அப்போது அவர் தெரிவித்ததாவது:

இந்திய தேர்தல் ஆணையம் தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தல் – 2026 தொடர்பான அறிவிப்பை 15.03.2026 அன்று வெளியிட்டுள்ளது. இதன்படி இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நிகழ்ச்சித் திட்டம் பின்வருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது:

• தேர்தல் அறிவிப்பு வெளியீடு மற்றும் வேட்பு மனு தாக்கல் தொடக்கம் – 30.03.2026

• வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் – 06.04.2026

• வேட்பு மனு ஆய்வு நாள் – 07.04.2026

• வேட்பு மனு திரும்ப பெறுதல் கடைசி நாள் – 09.04.2026

• வாக்குப்பதிவு நாள் – 23.04.2026

• வாக்கு எண்ணிக்கை நாள் – 04.05.2026 தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்ட நாளான 15.03.2026 முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 1514 வாக்குச்சாவடிகளில் மொத்தம் 7267 மாநில அரசு பணியாளர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ளனர். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கான சாய்தளம், குடிநீர், கழிப்பறை வசதி, மின்சார வசதி, தேவையான இருக்கைகள் மற்றும் சக்கர நாற்காலிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதையடுத்து இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கும் தலா 3 குழுக்கள் வீதம் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் மொத்தம் 36 பறக்கும் படைகள் மற்றும் 36 நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனுடன் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் வீடியோ கண்காணிப்பு குழுக்கள் மற்றும் வீடியோ பார்வை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் உரிய ஆவணங்கள் இன்றி ரொக்கமாக கொண்டு செல்லப்படும் ரூ.50,000/- க்கும் அதிகமான தொகையும், உரிய இரசீதுகள் இன்றி கொண்டு செல்லப்படும் ரூ.10,000/- க்கும் மேற்பட்ட மதிப்புள்ள பொருட்களும் கண்காணிப்பு குழுவினரால் பறிமுதல் செய்யப்படும்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் தேர்தல் தொடர்பான சந்தேகங்கள், புகார்கள் அல்லது தேர்தல் நடத்தை விதி மீறல்கள் தொடர்பாக கட்டணமில்லா தொலைபேசி எண்கள் 1950 மற்றும் 1800 425 7092 ஆகிய எண்களிலும், 04567-221172, 04567-221173, 04567-221174, 04567-221179 ஆகிய தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். மேலும் VIGIL செயலி மூலமாகவும் தேர்தல் விதிமுறை மீறல்கள் குறித்து புகார் அளிக்கலாம்.

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால் அரசு வளாகங்கள், பொதுவளாகங்கள் மற்றும் தனியார் வளாகங்களில் உள்ள அரசியல் கட்சி விளம்பரங்கள், பதாகைகள், சுவர் விளம்பரங்கள் மற்றும் கொடிகள் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் அகற்றப்பட வேண்டும். மேலும் தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் உள்ளதால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் திங்கள் கிழமை மக்கள் குறை தீர்க்கும் நாள் மனுக் கூட்டம், மக்கள் தொடர்பு முகாம் மற்றும் “உங்களை தேடி உங்கள் ஊரில்” போன்ற திட்டங்கள் தேர்தல் நடத்தை விதிகள் முடிவடையும் வரை நடைபெறாது. இராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் வாக்கு சதவிகிதத்தை அதிகரிக்க SVEEP செயல்பாடுகள் மூலம் சிறப்பு விழிப்புணர்வு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் குறைந்தபட்சம் 40 சதவீதம் இயலாமை கொண்ட மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் வீட்டிலிருந்தே வாக்களிக்க வசதியாக படிவம் 12-D வழங்கப்பட்டு அவர்களின் விருப்பத்தின் அடிப்படையில் தேர்தல் அலுவலர்கள் மூலம் வாக்குப்பதிவு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எனவே அரசியல் கட்சியினர், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகள் மற்றும் அறிவுரைகளை கடைப்பிடித்து தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தல் – 2026 சிறப்பாக நடைபெற முழு ஒத்துழைப்பு வழங்குமாறு மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித்தலைவருமான சிம்ரன்ஜீத் சிங் காலோன் கேட்டுக்கொண்டார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!