15 March 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » ஈரான் தலைவர்கள் குறித்து துப்பு கொடுத்தால் 10 மில்லியன் டாலர்கள் பரிசு என அமெரிக்கா அறிவிப்பு..

ஈரான் தலைவர்கள் குறித்து துப்பு கொடுத்தால் 10 மில்லியன் டாலர்கள் பரிசு என அமெரிக்கா அறிவிப்பு..

எழுதியவர்: Askar March 15, 2026, 5:35 am

அமெரிக்கா-இஸ்ரேல், இரான் நாடுகளுக்கு இடையே நடைபெற்றுவரும் போர் ஒருவாரத்தை கடந்தும் நீடித்துவருகிறது. ஈரானில் தங்களுக்கு ஆதரவான ஆட்சி அமைய வேண்டும் என்று அமெரிக்கா கூறிவரும் நிலையில், புதியதாக நியமிக்கப்பட்டுள்ள உச்சதலைவர் மொஜ்தபா கமேனியும் அமெரிக்காவிற்கு எதிரான நிலைப்பாட்டுடன் இருக்கிறார். இந்த சூழலில்தான் ஈரான் தலைவர்கள் குறித்து துப்பு கொடுத்தால் 10 மில்லியன் டாலர்கள் பரிசு என அமெரிக்கா அறிவித்துள்ளது.

புதிய உச்சத் தலைவரான மொஜ்தபா கமேனி மற்றும் துணைத் தலைமைத் தளபதி அலி அஸ்கர் ஹெஜாசி உள்ளிட்ட 10 மூத்த ஈரானிய அதிகாரிகள் பற்றி தகவல் கொடுத்தால் அமெரிக்க வெளியுறவுத்துறை 10 மில்லியன் டாலர்கள் ( இந்திய மதிப்பில் ரூ.92.5 கோடி) வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

இந்த அதிகாரிகள் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையுடன் (IRGC) தொடர்புடையவர்கள் என்பதால், 2019-ல் பயங்கரவாதம் மற்றும் அமெரிக்கர்கள் மீதான தாக்குதல்களில் ஈடுபட்டதாக கூறி வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பாக IRGC-ஐ அமெரிக்கா அறிவித்துள்ளது.

அமெரிக்காவின் ’Rewards for Justice’ என்ற எக்ஸ் தள பக்கத்தில் வெளியாகியிருக்கும் தகவலின் படி, முன்னாள் உச்ச தலைவர் அலி கமேனியின் மகன் மொஜ்தபா கமேனி உட்பட, “ஈரானிய பயங்கரவாதத் தலைவர்கள்” என்று அவர்களின் ஒளிப்படத்தை பகிர்ந்து இவர்களைப் பற்றி தகவல் தெரிவித்தால் 10 மில்லியன் டாலர்கள் மற்றும் வசிப்பிடமும் மாற்றியமைத்து தரப்படும் என்று கூறியிருக்கிறார்கள்.

அந்த பதிவில் மொஜ்தபா கமெனியுடன், மூத்த ஈரானிய அதிகாரிகள் பட்டியலிடப்பட்டுள்ளனர். இவர்களில் புலனாய்வு அமைச்சர் எஸ்மாயில் காதிப், துணைத் தலைமைத் தளபதி அலி அஸ்கர் ஹெஜாசி, மேஜர் ஜெனரல் யஹ்யா ரஹீம் சஃபாவி, உள்துறை அமைச்சர் எஸ்கந்தர் மோமெனி மற்றும் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் அலி லாரிஜானி ஆகியோர் அடங்குவர்.

இந்த நபர்கள் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் பல்வேறு நடவடிக்கைகளை கட்டளையிட்டு வழிநடத்துகிறார்கள், இது உலகம் முழுவதும் பயங்கரவாதத்தைத் திட்டமிடுகிறது, ஒழுங்கமைக்கிறது மற்றும் செயல்படுத்துகிறது என்றும் அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.

தகவல் தெரிவிப்பவர்கள் பாதுகாப்பான சேனல் மூலம் தொடர்பு கொள்ளலாம் என்றும் பதிவிட்டிருக்கிறார்கள். வாஷிங்டனுக்கும் தெஹ்ரானுக்கும் இடையில் பதட்டங்கள் அதிகரித்து வரும் நேரத்தில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

1. ஈரானின் மிகவும் சக்திவாய்ந்த மற்றும் செல்வாக்குமிக்க ராணுவ அமைப்புதான் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC)

2. 1979 இல் நிறுவப்பட்டது இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை(IRGC).

3. ஈரானின் வெளியுறவுக் கொள்கை மற்றும் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க செல்வாக்கைப் பெற்றுள்ளது.

4. 2019 முதல் இது அமெரிக்காவால் ஒரு வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டது.

5. இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை( IRGC) அமெரிக்க நபர்களுடன் பரிவர்த்தனைகளில் ஈடுபடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

6. IRGCக்கு நிதி ஆதரவு வழங்குவது அமெரிக்க சட்டத்தின் கீழ் ஒரு குற்றமாகும்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!