தென்காசியில் அமைக்கப்பட்டுள்ள மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயல்பாடுகளை முதன்மை மாவட்ட நீதிபதி பி.ராஜவேலு தொடங்கி வைத்தார்.
சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவின் பேரில், தென்காசி மாவட்டத்தில் சட்டப் பணிகள் ஆணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழாவிற்கு முதன்மை மாவட்ட நீதிபதியும், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு தலைவருமான பி.ராஜவேலு தலைமை தாங்கி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயல்பாடுகளை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சிக்கு கூடுதல் மாவட்ட நீதிபதி மனோஜ் குமார், முதன்மை சார்பு நீதிபதி பிஸ்மிதா, கூடுதல் சார்பு நீதிபதி முருகவேல், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி ராஜேஷ்குமார், குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்ற நீதிபதி முத்துலட்சுமி, சிவகிரி முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதியும் குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்ற நீதிபதியுமான ஜெனிபர் ஜோசப், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி காளீஸ்வரி, சங்கரன்கோவில் கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி பவித்ரா, ஆலங்குளம் மாவட்ட உரிமையியல் நீதிபதி முத்துசெல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னதாக, முதன்மை மாவட்ட நீதிபதி மற்றும் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு தலைவர் பி.ராஜவேலு செய்தியாளர்களிடம் கூறியதாவது: இதுவரை திருநெல்வேலி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு தலைமையில் தென்காசி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயல்பட்டு வந்தது. தற்போது தென்காசி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவிற்கு சென்னை உயர்நீதிமன்றம், மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இதனை அடுத்து தென்காசி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு தற்போது தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு தென்காசி மாவட்ட சட்டப் பணிகள் குழு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இனி தென்காசி மாவட்ட பொதுமக்கள் திருநெல்வேலி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவை நாட வேண்டியதில்லை. அவர்கள் தென்காசி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவை நாடினால் போதுமானது. மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவிற்கு தனியாக செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் கூடுதல் சார்பு நீதிபதி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு மேலாளராக செயல்படுவார். சட்டம் சார்ந்த மற்றும் சட்டம் சாராத பிரச்சனைகளுக்கு பொதுமக்கள் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவிடம் மனுக்கள் வழங்கலாம்.
ஒவ்வொரு மாதமும் மாவட்ட சட்டப் பணிகள் குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெறும். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை சிறப்பு ஆய்வுக் கூட்டம் நடைபெறும். இக்கூட்டங்களில் மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் அனைத்து அரசு துறை அலுவலர்கள் கலந்து கொள்வார்கள். தென்காசி மாவட்டத்தில் ஆலங்குளம், செங்கோட்டை, சிவகிரி, சங்கரன் கோவில் ஆகிய 4 புறநகர்களிலும் வட்ட அளவில் சட்டப் பணிகள் ஆணைக்குழு செயல்படும்,
தென்காசி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு தலைமை அலுவலகம் அமைக்கப்பட்டு உள்ளது. நீதி மன்றத்தில் வழக்கு தொடர்வதற்கு முன்பே மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவில் மனுக்களை வழங்கி பரிகாரம் காணலாம். முக்கிய பிரச்சினைகள் குறித்து நீதிமன்றம் மூலம் பரிகாரம் பெறப்படும். இழப்பீடு உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து இங்கு மனு அளித்து பரிகாரம் பெறலாம். தென்காசி மாவட்ட பொதுமக்கள் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவில் மனுக்கள் அளித்து பயன்பெறலாம் என முதன்மை மாவட்ட நீதிபதி பி.ராஜவேலு தெரிவித்து உள்ளார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்




You must be logged in to post a comment.