இந்தியாவிலேயே முதல் மாநிலக் கட்சியாக நம்முடைய கழகத்தை ஆட்சியில் அமர்த்தினார், பேரறிஞர் பெருந்தகை அண்ணா! அவரது வழியில் ஐந்து முறை தமிழ்நாட்டை ஆட்சி செய்தார் நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் அவர்கள்! ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு 10 ஆண்டுகள் கழித்து, உங்களில் ஒருவனான என்னுடைய தலைமையில் ஆறாவது முறையாக ஆட்சிக்கு வந்தோம்! இப்போது ஏழாவது முறை மட்டுமல்ல, இனி எந்நாளும் கழகம்தான் தமிழ்நாட்டை ஆள வேண்டும் என்று சூளுரைக்கத்தான் இங்கு கூடியிருக்கிறோம்! இதுதான் நம்முடைய கடமை! அனைவரின் பெரும் கடமை!இதை எதற்காகச் சொல்கிறோம் என்றால், நான் முதலமைச்சர் ஆகவும், சில பேர் அமைச்சர்கள் ஆகவும், பல பேர் எம்.எல்.ஏ ஆகவும், சொல்கிறோமா? இல்லை. நம்முடைய தமிழினத்தைக் காக்கத் தகுதியும் – திறமையும் – உழைப்பும் கொண்ட ஒரே படை நம்முடைய கருப்பு சிவப்புப் படைதான்! நமக்கென்று மாபெரும் வரலாறு இருக்கிறது. நமக்கென்று ஒரு லெகசி இருக்கிறது. தமிழைக் காத்தவர்கள் நாம்! தாய்த்தமிழ்நாட்டிற்குப் பெயர் வைத்தவர்கள் நாம்! நம்முடைய மாநிலத்தை எல்லா நிலையிலும் உயர்த்தியவர்கள் நாம்! இப்போது கூட தமிழ் மண்ணுக்குக் காவல் அரணாக இருப்பவர்கள் நாம்தான்! தமிழ்நாடு, நம்மை நம்பித்தான் இருக்கிறது; நாமும் தமிழ்நாட்டை நம்பித்தான் இருக்கிறோம்! அதற்காகதான் சொல்கிறேன்… திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி, தொய்வில்லாமல் தொடர வேண்டும்! அதற்காக நாம் உழைக்க வேண்டும். அதற்கேற்ப சூளுரைக்க வேண்டும்.இந்த நேரத்தில், தந்தை பெரியார் 1971 தேர்தலின்போது சொன்னதை, நினைத்துப் பார்க்கிறேன். “தி.மு.க. ஆட்சி தொடர்ந்தால்தான், தமிழ்ச்சமுதாயம் எதிர்பார்க்கும் முன்னேற்றம் ஏற்படும்” என்றார். இப்போதும் தந்தை பெரியார் சொன்னதை மனதில் வைத்து நம்முடைய பயணத்தைத் தொடர வேண்டும்!இங்கே வந்ததும் என்னுடைய நினைவிற்கு வந்தது., 2021 தேர்தலுக்கு முன்பு, இதே திருச்சியில், இதே இடத்தில் ஏழு இலக்குகளை உறுதிமொழிகளாக நான் அறிவித்தேன். அதில் முதல் இலக்கு – வளரும் வாய்ப்புகள், வளமான தமிழ்நாடு! இரண்டாவது இலக்கு – மகசூல் பெருக்கம், மகிழும் விவசாயி! மூன்றாவது இலக்கு – குடிமக்கள் அனைவருக்கும் குறையாத தண்ணீர்! நான்காவது இலக்கு – அனைவருக்கும் உயர்தரக் கல்வி – உயர்ந்த மருத்துவம்! ஐந்தாவது இலக்கு – எழில்மிகு மாநகரங்களின் மாநிலம்! ஆறாவது இலக்கு – உயர்தர ஊரகக் கட்டமைப்பு, உயர்ந்த வாழ்க்கைத் தரம்! ஏழாவது இலக்கு – அனைவருக்கும் அனைத்துமான தமிழ்நாடு!நெஞ்சை நிமிர்த்திச் சொல்கிறேன்., இந்த ஏழு இலக்குகளையும் நம்முடைய ஐந்தாண்டு ஆட்சியின் திட்டங்களால் நிறைவேற்றிக் காட்டியிருக்கிறோம்! அதனால்தான் மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்! இதையெல்லாம், நம்முடைய எதிரிகளே, இன்றைக்கு மனதிற்குள் ஒப்புக்கொள்வார்கள். யாராலும் மறைக்க முடியாத, மறுக்க முடியாத உண்மை இது! தமிழ்நாட்டைத் தொடர்ந்து புறக்கணிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசுகூட, “நம்பர் ஒன் மாநிலம் – தமிழ்நாடு’ என்று சொல்கிறார்கள். உலக பத்திரிகைகளே, ‘சூப்பர்ஸ்டார் ஸ்டேட் தமிழ்நாடு’ என்று பாராட்டுகிறார்கள். அந்த அளவிற்கு நாம் கெத்தாக முன்னேறி இருக்கிறோம்!கடந்த ஐந்து ஆண்டுகளில், நாம் செய்திருக்கும் சாதனைகளை நினைத்துப் பாருங்கள். எத்தனை நெருக்கடிகள், எத்தனை பிரச்சினைகளைத் தகர்த்து நாம் முன்னேறி இருக்கிறோம்! மூன்று நாட்களுக்கு முன்பு கூட, சென்னையில், 2030-க்கான 14 உறுதிமொழிகளை, “ஸ்டாலின் ஸ்டேட்மெண்ட்” என்று நான் அறிவித்தேன். அந்த மேடையில் அமைச்சர்கள், ஒவ்வொரு துறையிலும் நாம் என்ன சாதித்திருக்கிறோம் என்று சொன்னார்கள். ஐந்தாண்டுகளில் ஒரு மாநில அரசால் இவ்வளவு செய்ய முடியுமா என்று எல்லோரும் பிரமித்துப் பார்த்தார்கள். நமக்கே மலைப்பாக இருந்தது. நம்முடைய சாதனைகளை PPT போட்டுக் காட்டினோம்! அதில் கடந்த ஆட்சியோடு, நாம் செய்திருப்பதை ஒப்பிட்டுச் சொன்னார்கள். உங்களுக்காகச் சிலவற்றை மட்டும் இங்கு சொல்கிறேன்… நன்றாக கவனியுங்கள்! மக்களிடம் சென்று சொல்ல வேண்டும்!கடந்த 2016-21, அ.தி.மு.க. ஆட்சியில், தொழில் முதலீட்டிற்காகப் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் எவ்வளவு தெரியுமா? 471. இதுவே நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில், ஆயிரத்து 190 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போட்டிருக்கிறோம்! கடந்த கால அ.தி.மு.க. ஆட்சியில் ஈர்த்த முதலீடு – நான்கு இலட்சத்து 13 ஆயிரத்து 414 கோடி ரூபாய்தான். ஆனால், நம்முடைய ஆட்சிக் காலத்தில், 12 இலட்சத்து 54 ஆயிரத்து 133 கோடி ரூபாய்க்கான முதலீடுகளை ஈர்த்திருக்கிறோம்! மூன்று மடங்கு அதிகம்!2016-21-இல் அ.தி.மு.க. ஆட்சியில், புதிதாக நான்கே நான்கு சிப்காட் தொழிற்பூங்காக்களைதான் தொடங்கினார்கள். ஆனால், நாம் 33 புதிய சிப்காட் தொழிற்பூங்காக்களைத் தொடங்கி இருக்கிறோம்!ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை எடுத்துகொண்டால், 2021 வரைக்கும் இருந்த எண்ணிக்கை: 2 ஆயிரத்தி 45. இப்போது 13,500-க்கும் மேற்பட்ட ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் நம்முடைய ஆட்சியில் இருக்கிறது!அடுத்து வேளாண் துறை, 2016-21-இல், 57.26 இலட்சம் ஹெக்டேராக இருந்த மொத்த சாகுபடிப் பரப்பை, இப்போது 62.32 லட்சம் ஹெக்டேராக உயர்த்தி இருக்கிறோம்! ஐந்து ஆண்டுகளில் 5 லட்சம் ஹெக்டேர் உயர்ந்திருக்கிறது.கடந்த ஆட்சிக்காலத்தில் ஒரு இலட்சம் விவசாயிகளுக்குத்தான் இலவச வேளாண் மின் இணைப்பு கொடுத்தார்கள். ஆனால், நம்முடைய ஆட்சியில், இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான விவசாயிகளுக்கு இலவச வேளாண் மின் இணைப்பு கொடுத்திருக்கிறோம்.2016-21-இல், அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகை திட்டத்தில் படித்த மாணவர்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? இரண்டே இரண்டு பேர்தான்! ஆனால், நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில் 386 மாணவர்களுக்கு, 160 கோடி ரூபாய் உதவித்தொகை கொடுத்து படிக்கிறார்கள்!அதேபோன்று, ஆதிதிராவிட மகளிர் நன்னிலம் நில உடைமைத் திட்டத்தில் அ.தி.மு.க. ஆட்சியில் பயனடைந்த பெண்கள் 40 பேர்! 40 இலட்சம் ரூபாய் கொடுத்தார்கள்! அதுவே நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில் 1,026 பெண்களுக்கு, சுமார் 50 கோடி ரூபாய் வழங்கியிருக்கிறோம்! எவ்வளவு பெரிய வித்தியாசம்?அடுத்து, விளையாட்டில் நம்முடைய இளைஞர்கள் இன்றைக்கு எப்படியெல்லாம் சாதிக்கிறார்கள். அதற்குக் காரணம் என்ன? விளையாட்டுத் துறைக்கு 800 கோடி ரூபாயாக இருந்த நிதி ஒதுக்கீட்டை, நம்முடைய ஆட்சியில், 2 ஆயிரத்து 268 கோடி ரூபாயாக உயர்த்தி இருக்கிறோம்!அதுமட்டுமல்ல, 2016-21-இல் அரசு வேலைவாய்ப்பு வழங்கப்பட்ட விளையாட்டு வீரர்கள் எத்தனை பேர்? மூன்றே மூன்று பேர்தான்! ஆனால், நம்முடைய அரசில், 301 விளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கி இருக்கிறோம்! இப்படி எல்லா துறையிலும் லிஸ்ட் இருக்கிறது!மக்கள் பெரும் சுமையாகக் கருதும் மருத்துவச் செலவுகள், சென்ற ஆட்சியில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில், 49 லட்சமாக இருந்த பயனாளிகள் எண்ணிக்கையை நம்முடைய ஆட்சியில் 90 இலட்சமாக உயர்த்தி இருக்கிறோம். அதற்குக் காரணம்., நம்முடைய அரசில் 72 ஆயிரமாக இருந்த வருமான வரம்பை, ஒரு இலட்சத்து 20 ஆயிரமாக உயர்த்தி கொடுத்தோம்.இப்படி எல்லாவற்றிலும் இரண்டு மடங்கு – மூன்று மடங்கு, ஏன், பல மடங்கு சாதனைகள் படைத்திருக்கிறோம்! இதுதான் வளர்ச்சி! அதனால்தான்., வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு 14 ஆண்டுகள் கழித்து, நம்முடைய ஆட்சியில் 11.19 விழுக்காடு பொருளாதார வளர்ச்சியை நம்முடைய மாநிலம் அடைந்திருக்கிறது! நானும் தொடர்ந்து ஒவ்வொரு மேடையிலும் நம்முடைய சாதனைகளை எல்லாம் டேட்டாவுடன் சொல்லிக் கொண்டிருக்கிறேன். செய்ததைக் கூட, நம்மால் முழுதாகச் சொல்ல முடியவில்லை. அந்த அளவுக்கு மிகப்பெரிய பட்டியல் இருக்கிறது.நம்முடைய திட்டங்களால் பயனடைந்தவர்களின் எண்ணிக்கையை மட்டும் சொல்கிறேன் கேளுங்கள்.கலைஞர் மகளிர் உரிமைத்தொகை – ஒரு கோடியே 31 இலட்சம் பேர்! காலை உணவுத் திட்டம் – 19 இலட்சத்து 34 ஆயிரம் குழந்தைகள்! புதுமைப்பெண் திட்டம் – 6 இலட்சத்து 95 ஆயிரம் மாணவிகள்! தமிழ்ப்புதல்வன் திட்டம் – 5 இலட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள்! நான் முதல்வன் திட்டம் – 49 இலட்சத்து 90 ஆயிரம் பயிற்சிச் சான்றிதழ்கள்! விடியல் பயணம் திட்டம் – 910 கோடி பயணங்கள்! மக்களைத் தேடி மருத்துவம் – 2 கோடியே 56 இலட்சம் பேர்! இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும் 48 திட்டம் – 4 இலட்சத்திற்கும் அதிகமான உயிர்கள்! பல்வேறு ஓய்வூதியத் திட்டங்கள் மூலமாக 30 இலட்சத்து 55 ஆயிரம் பேர்! பட்டா பெற்றவர்கள் 23 இலட்சத்து 56 ஆயிரம் பேர்! உங்களால் டோட்டல் போட முடிந்ததா? இல்லையா… இன்னும் ஏராளமாக இருக்கிறது! ஆனால், அதையெல்லாம் சேர்த்து நீங்கள் டோட்டல் போட்டு மக்களிடம் சொல்ல வேண்டும்! இப்போது தெரிகிறதா… ஏன், நான் அடிக்கடி ‘வெல்வோம் இருநூறு, வெல்வோம் இருநூறு‘ என்று சொல்கிறேன் என்று. இருநூறு தொகுதி உறுதியா… இல்லையா? கேட்கவில்லை! இன்னும் சத்தமாக., மகிழ்ச்சி!நீங்கள் பிரசாரத்திற்குச் செல்லும்போது, யாரைக் கேட்டாலும், அவர்கள் நம்முடைய அரசின் திட்டங்களில் பயனாளியாக இருப்பார்கள்! நம்முடைய அரசின் திட்டங்களின் பயனாளிகள் வாக்களித்தாலே போதும். நாம்தான் ‘ஃபுல் ஸ்வீப்’ பண்ணுவோம்! முழு வெற்றி அடைவோம். அதை உறுதிசெய்ய வேண்டியதுதான், உங்களின் பணி! நாம் இவ்வளவையும் செய்துவிட்டு, மக்களிடம் வாக்கு கேட்கிறோம்!இதே திருச்சி சிறுகனூரில், 5 ஆண்டுகளுக்கு முன்னால் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றிக் காட்டிவிட்டு, மக்கள் முன்னால் தெம்பாக, நம்பிக்கையாக நிற்கிறோம். அடுத்து விரைவில், விரிவான தேர்தல் அறிக்கை தங்கை கனிமொழி அவர்கள் தலைமையில் தயாராகிக் கொண்டிருக்கிறது. விரைவில் வெளியிடப் போகிறோம்.சமீப காலமாக கவனித்தீர்களா, மற்ற அரசியல் கட்சிகள் எல்லாம், இன்ஸ்டால்மென்ட்டில் தேர்தல் அறிக்கை வெளியிடுகிறார்கள். அதிலும் என்ன அறிவிக்கிறார்கள்? திராவிட மாடல் அரசு சார்பில், நாம் நிறைவேற்றிக் கொண்டிருக்கும் திட்டங்களையே, Top up செய்து, காப்பி அடித்து அறிவிக்கிறார்கள். அவ்வளவுதான்! ஏனென்றால், அவர்களுக்கும் வேறு வழியில்லை. நம்முடைய ஆட்சியில், நிறைவேற்றி இருக்கின்ற திட்டங்களை இனி யாராலும் மாற்ற முடியாது, எவராலும் நிறுத்த முடியாது.யோசித்துப் பாருங்கள்., நாம் வழங்கிய மகளிர் உரிமைத் தொகையை யாராலும் நிறுத்த முடியுமா? முடியாது. அப்படி அவர்கள் நினைத்தாலே, அவர்களின் வீட்டுப் பெண்களே அவர்களின் கட்சிக்கு வாக்களிக்க மாட்டார்கள். வீட்டை விட்டு வெளியே அனுப்பிவிடுவார்கள். அதனால்தான் இப்போது அதிகப்படுத்தி அறிவிக்கிறார்கள்.அடுத்து, பள்ளிக் குழந்தைகளுக்கான காலை உணவுத் திட்டத்தில், யாராவது கை வைக்க முடியுமா? முடியாது. அந்தக் குழந்தைகளை பட்டினி போட்டால், தமிழ்நாட்டு மக்கள் அவர்களைச் சும்மா விடமாட்டார்கள். அதேபோல, பெண்களுக்கான விடியல் பயணம் திட்டத்தை அவர்களால் மாற்ற முடியுமா? முடியாது. இன்னும் இருக்கிறது. உயர்கல்விக்கு உறுதுணையாக இருக்கும் புதுமைப் பெண் திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டம், நான் முதல்வன் திட்டம் – இதையெல்லாம் தடுக்கவோ, நிறுத்தவோ எந்தக் கட்சியாவது யோசிக்க முடியுமா? முடியாது.அதுமட்டுமல்ல, முதியவர்களுக்கு வீடு தேடி ரேசன் தரும் தாயுமானவர் திட்டம், வீடு தேடி மருத்துவம் தரும் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் – இதையெல்லாம் தொடரமாட்டோம் என்று எந்தக் கட்சியாவது வாய் திறக்க முடியுமா? இப்படி எவராலும் மாற்ற முடியாத திட்டங்கள்தான், இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் திட்டங்கள்!அவர்களுக்குத் தேர்தல் அறிக்கைக்குக் கண்டெண்ட் கொடுப்பதே இந்த ஸ்டாலினின் திட்டங்கள்தான்! அதனால்தான் உறுதியோடு சொல்கிறேன்… இந்தத் திட்டங்கள் தமிழ்நாட்டில் இருக்கின்ற வரைக்கும், இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்தான் தமிழ்நாட்டை ஆளுவான்!நாம் இவ்வளவையும் செய்துவிட்டு, மக்களிடம் வாக்கு கேட்கிறோம்! ஆனால், அ.தி.மு.க. கூட்டணி… சாரி… சாரி… அப்படி சொன்னால், மோடியும் – அமித் ஷாவும் கோபித்துக் கொள்வார்கள். N.D.A. கூட்டணி என்று சொல்ல வேண்டும். கூட்டணிக்குப் பெயர் வைக்கக் கூட முடியாத நிலையில்தான், இன்றைக்கு அ.தி.மு.க. இருக்கிறது. சரி அவர்கள் சொல்வது போன்று, அந்த N.D.A. கூட்டணி தமிழ்நாட்டிற்கு என்ன செய்திருக்கிறது?கடந்த 5 ஆண்டுகளில், நமக்கு தர வேண்டிய கல்வி நிதி, ஜல் ஜீவன் திட்ட நிதி, நூறு நாள் வேலைத்திட்ட நிதி, பேரிடர் நிவாரண நிதி என்று நாம் கேட்ட எதையும் தரவில்லை! மாநிலத்திற்கான சிறப்புத் திட்டங்களையும் தரவில்லை! ஏன், கோவை, மதுரை, திருச்சி மெட்ரோ உள்ளிட்ட எந்த உட்கட்டமைப்புத் திட்டங்களுக்கும் அனுமதி தரவில்லை.நாம் கேட்பது… மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் – ஆட்சிப் பொறுப்புக்கு வர வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு இருந்திருந்தால், அடிப்படையாக மாநிலத்துக்குக் கேட்டதையாவது அவர்கள் கொடுத்திருக்க வேண்டும். எதுவுமே இல்லையா?பா.ஜ.க. தமிழ்நாட்டுக்குத் தந்ததெல்லாம் என்ன தெரியுமா? ஆளுநர் மூலமாகக் குடைச்சல்! மாணவர்களின் உயிரோடு விளையாடும் நீட் தேர்வு! இந்தித் திணிப்பு! மிரட்டிப் பார்க்க ரெய்டுகள்! இப்படிப்பட்ட ஆட்சிதான், பிரதமர் மோடி சொல்லும் N.D.A. ஆட்சி! தமிழ்நாட்டுக்கு எந்த நன்மையும் செய்யாத இவர்கள்தான், நம்மை எதிர்த்து நிற்கிறார்கள்!தமிழ்நாடு மீது எந்த அளவிற்கு வன்மம் இருக்கிறது என்று சொல்ல வேண்டும் என்றால், தேர்தல் வருகிறதே என்று கூட தெரியாமல், அதைப்பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல், நமக்கான எதையும் அறிவிக்க இவர்களுக்கு மனது வரவில்லை.நான் கேட்கிறேன்… இப்படி திட்டமிட்டுத் தமிழ்நாட்டைப் புறக்கணிக்கின்ற N.D.A. கூட்டணிக்கு, எங்கள் மக்கள் எப்படி வாக்களிப்பார்கள்?எந்த நம்பிக்கையில் நீங்கள் எல்லாம் தமிழ்நாட்டுக்கு வருகிறீர்கள்? தமிழ்நாடு கேட்பதற்கெல்லாம், ‘நோ’ சொல்லும் NDA-வுக்கு, தமிழ்நாடும் ‘நோ’தான் சொல்லும்! இங்கே உங்களுக்கு எப்போதும் ’நோ எண்ட்ரி’ தான்! உங்கள் டப்பா எஞ்சினுக்கு தமிழ்நாடு எப்போதுமே, ‘No Entry’-தான் சொல்லும்!
தமிழ்நாட்டில் நாங்கள்தான் ஜெயிப்போம்! நாங்கள் மட்டும்தான் ஜெயிப்போம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை..
எழுதியவர்: Askar March 10, 2026, 4:45 am

தமிழ்நாட்டில் நாங்கள்தான் ஜெயிப்போம்! நாங்கள் மட்டும்தான் ஜெயிப்போம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சியில் சூளுரை..



You must be logged in to post a comment.