03 April 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நகரி பகுதியில் பல மாதங்களாக கழிவுநீர் தேங்கி சுகாதார கேடு, மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

நகரி பகுதியில் பல மாதங்களாக கழிவுநீர் தேங்கி சுகாதார கேடு, மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

எழுதியவர்: mohan March 8, 2026, 7:44 pm

சோழவந்தான் தொகுதி அலங்காநல்லூர் ஒன்றியம் அய்யங்கோட்டை ஊராட்சி நகரி பகுதியில் பல மாதங்களாக கழிவுநீர் தேங்கி சுகாதார கேடு மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை.

மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதிக்கு உட்பட்ட அலங்காநல்லூர் ஒன்றியம் அய்யங்கோட்டை ஊராட்சி நகரி பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் பல மாதங்களாக கழிவுநீர் தேங்கி சுகாதாரக் கேடு ஏற்பட்டு இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். நகரி மெயின் ரோட்டில் மதுரை திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை அருகே சுமார் 200க்கும் மேற்பட்ட வட மாநிலத்தவர் வசித்து வருகின்றனர். இவர்கள் இந்த பகுதியில் உள்ள பல்வேறு தனியார் நிறுவனங்களில் வேலை செய்து இங்குள்ள குடியிருப்புகளில் வாடகைக்கு குடியிருந்து வருகின்றனர் .இந்த பகுதியில் மழைக்காலங்களில் கழிவுநீர் தேங்கி சுகாதார கேடு ஏற்பட்டு வருவதாக பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்திருந்த நிலையில் கடந்த ஆண்டு கழிவு நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுப்பதாக கூறி அய்யங்கோட்டை ஊராட்சி மன்றம் சார்பில் கழிவுநீர் கால்வாய் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இவ்வாறு கட்டிய கழிவுநீர் கால்வாயானது, தேசிய நெடுஞ்சாலை அருகே வெளியேறி செல்ல முடியாமல் அங்கேயே தேங்கி பல மாதங்களாக துர்நாற்றம் வீசி வருகிறது. இதன் காரணமாக இந்த பகுதியில் வசிக்கும் 200க்கும் மேற்பட்ட வட மாநிலத்தவர்கள் மற்றும் 300-க்கும் மேற்பட்ட உள்ளூர் மக்கள் என சுமார் 500க்கும் மேற்பட்டோர் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட்டு அடிக்கடி மருத்துவமனைக்கு செல்லக்கூடிய அவல நிலை ஏற்பட்டு வருகிறது , மேலும் கழிவுநீர் தேங்கி ஏற்படும் சுகாதாரக் கேட்டால் தொற்றுநோய் பரவி வட மாநிலத்தவர் இருவர் கடந்த ஆண்டு உயிரிழந்ததாக இந்த பகுதி பொதுமக்கள் அதிர்ச்சியுடன் கூறுகின்றனர். இதுகுறித்து அய்யங்கோட்டை ஊராட்சி நிர்வாகம் அலங்காநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்களில் புகார் அளித்தும், நேரில் சென்று மனுக்கள் வழங்கியும் சம்பந்தப்பட்ட நிர்வாகமோ அதிகாரிகளோ இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. தற்போது கழிவுநீர் கால்வாய் முழுவதும் கழிவு நீர் தேங்கி, வீடுகளுக்குள் பொதுமக்கள் செல்ல முடியாத அளவுக்கு வாசல் படிகளில் கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. இதனால் குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் உட்பட அனைவருக்கும் தொற்றுநோய் பரவி சுகாதார கேடு ஏற்பட்டு வருகிறது , உடனடியாக மாவட்ட நிர்வாகம் சம்பந்தப்பட்ட நகரி பகுதியில் ஆய்வு செய்து தேங்கி கிடக்கும் கழிவுநீரை வெளியேற்ற போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!