“இந்தியில் பெயர் பலகை” அமைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஒன்றிய பாஜக அரசை கண்டித்தும் திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சி மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி தலைமையில், மாநகரச் செயலாளர் மேயர் அன்பழகன் முன்னிலையில் ரயில்வே நுழைவு வாயில் கல்வெட்டில் இருந்த இந்தி எழுத்தை கருப்பு மை கொண்டு அழித்தனர்.
திருச்சி ரெயில்வே கோட்ட மேலாளர் அலுவலகம் திருச்சி ஜங்சன் ரயில் நிலையம் அருகே அமைந்துள்ளது. அந்த ரயில் நுழைவு வளைவு புதிதாக கட்டப்பட்டுள்ளது. இதில், அலுவலக வாயில் என்பதை இந்தி வார்த்தையில் “கர்தவ்யத்வார்” என குறிப்பிடுகின்றனர். இதனை, கர்தவ்ய த்வார் என தமிழ் எழுத்துக்களைக் கொண்டும், KARTAVYA DWAR என்ற ஆங்கில எழுத்துக்களைக் கொண்டும் எழுதியுள்ளனர்.
அலுவலக நுழைவாயில் என்பதை தமிழர்கள் எளிதில் புரிந்து கொள்ள முடியாத வகையில், தமிழ் எழுத்துக்களை கொண்டு இந்தி மொழி வார்த்தையில் எழுதியுள்ள ரயில்வே நிர்வாகத்தினரை கண்டித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் குரல் எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலக நுழைவாயில் முன்பாக, தி.மு.க.வினர், காவல் துறையினரின் அனுமதி இல்லாமல் திருச்சி மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி தலைமையில் மாநகரச் செயலாளர் மேயர் அன்பழகன் முன்னிலையில் 500க்கும் மேற்பட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் தடையை மீறி பேரணியாக சென்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.
மேலும் கல்வெட்டில் இருந்த இந்தி எழுத்தை மைகொண்டு அழித்து ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய மாவட்ட பொருளாளர் துரைராஜ், மண்டலக் குழு தலைவர் துர்கா தேவி, பகுதிச் செயலாளர் மோகன்தாஸ், கனகராஜ், மாமன்ற உறுப்பினர்கள், காஜா மலை விஜி,முத்துச்செல்வம், கலைச்செல்வி, ராமதாஸ் உள்ளிட்ட நூற்றுக்கு மேற்பட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.




You must be logged in to post a comment.