03 April 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » தமிழகத்தில் வெயில் சுட்டெரிக்கும்; Trekking செல்ல தடை விதிக்க வேண்டும்..

தமிழகத்தில் வெயில் சுட்டெரிக்கும்; Trekking செல்ல தடை விதிக்க வேண்டும்..

எழுதியவர்: Abubakker Sithik February 28, 2026, 8:54 pm

தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரிக்கும் என்றும், சுற்றுலா பயணிகளின் (Trekking) மலையேற்றத்திற்கு தமிழக வனத்துறை தடை விதிக்க வேண்டும் எனவும் வானிலை ஆராய்ச்சியாளர் தென்காசி வெதர்மேன் ராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் கோடைகாலம் குறித்த விரிவான வானிலை தகவல்களை வெதர்மேன் ராஜா பின்வருமாறு வழங்கி உள்ளார். தமிழகத்தில் மார்ச் 1 முதல் மே 31 வரையிலான காலகட்டமே கோடை காலமாகும். இந்த நிலையில் மார்ச் 1 முதல் கோடைகாலம் துவங்குகிறது. வெப்ப நிலையை பொறுத்தவரை கடந்தாண்டை விட இந்தாண்டு கோடை வெயில் கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மார்ச் மாதத்தை பொறுத்தவரை கன்னியாகுமரி,, தென்காசி, தேனி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, வேலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருக்கும்.

மார்ச் மாதத்தில் கடலூர், நாகப்பட்டினம், நெல்லை, தூத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்களில் இயல்பான அளவிலே வெப்ப நிலை பதிவாகும். குறிப்பாக ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு அடுத்தபடியாக தென் கடலோர பகுதிகளில் வெப்ப நிலை குறைவாகவே பதிவாகும். கிழக்கு கடல் காற்று தமிழக பகுதிக்குள் நுழைவதால் கோடியக்கரை, நாகப் பட்டினம், இராமேஷ்வரம், தூத்துக்குடி, திருச்செந்தூர், குலசேகரன் பட்டினம், உவரி ஆகிய கடலோர பகுதிகளில் மிதமான வெயில் காணப்படும். ஏப்ரல் மே மாதங்களை பொறுத்தவரை, தமிழகம் முழுவதுமே வெயில் கொளுத்தும். இயல்பை விட மிக அதிகமான வெப்பநிலை அதிகரிக்கும். கோடைகாலம் மே மாதத்துடன் நிறைவடைந்தாலும் இந்தாண்டு ஆகஸ்ட் மாதம் வரை வெயில் கொளுத்தும்.

வனத்துறைக்கு சவாலான பணி :

இந்தாண்டு வெயில் சுட்டெரிக்கும் என்பதால் காட்டுத்தீ ஏற்பட வாய்ப்புள்ளது. கோடை காலங்களில் ஏற்படும் வறட்சி மற்றும் காட்டுத்தீ போன்ற சவால்களை எதிர்கொள்ள தமிழக வனத்துறை பல்வேறு தற்காப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் தீ தடுப்பு கோடுகள் உருவாக்குதல், வனப் பணியாளர்கள் அடங்கிய குழுக்கள் உருவாக்குதல், வனத்தை ஒட்டியுள்ள கிராம மக்களிடம் காட்டுத்தீ குறித்த விழிப்புணர்வு போன்றவற்றை ஏற்படுத்தப்பட வேண்டும்.

மலையேற்றத்திற்கு தடை விதிக்க வேண்டும் : தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் வெப்பநிலை மிக அதிகமாக இருக்கும் என்பதால் சுற்றுலா பயணிகள் மலையேற்றத்திற்கு (Trekking) தடை செய்ய வேண்டும். கோடை காலங்களில் அனுமதி வழங்காமல் இருப்பது நல்லது.

கோடைமழை எப்படி? : கோடை காலத்தில் தமிழகம் சராசரியாக 125 மிமீ மழையை பெறும் அதிலும் குறிப்பாக தமிழக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் தான் கோடைகாலத்தில் அதிகமழையை பெறும் மாவட்டங்களாக உள்ளது. அதிகமழையை பெறும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள்: தமிழகத்தில் வெப்ப நிலை அதிகரித்தாலும் இரவு நேரங்களில் கோடை மழை பதிவாக வாய்ப்புள்ளது.

இந்தாண்டு கோடை மழையை பொறுத்தவரை, ஏப்ரல் மே மாதங்களில் குமரி, தென்காசி மாவட்டங்களில் கோடைமழை வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேனி, திண்டுக்கல், கோவை, தர்மபுரி, சேலம் மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக மே மாதங்களில் தமிழக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இயல்பை விட அதிகமழை பெய்யும். கோடைமழை என்பதால் தரைக்காற்று பலமாக வீசும். மாலை இரவு நேரங்களில் இடி மின்னலுடன் வலுவான மழை பெய்யும்.

இந்தாண்டு கோடை காலத்தில் நெல்லை, விருதுநகர், மதுரை, சேலம், கிருஷ்ணகிரி, திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களிலும் நல்ல மழை காத்திருக்கிறது. தூத்துக்குடி, இராமநாதபுரம் மாவட்டங்களில் மானாவாரி பயிர் செய்யும் பகுதிகளிலும் நல்ல மழை பெய்யும்.

கோடைமழை எவ்வளவு ? : தமிழகத்தில் கோடை காலங்களில் மாநிலத்திலேயே அதிகமான மழையை கன்னியாகுமரி மாவட்டம் பெறுகிறது. இம் மாவட்டம் சராசரியாக 272 மிமீ மழையும், நீலகிரி மாவட்டம் சராசரியாக 213 மிமீ மழையும், தென்காசி மாவட்டம் சராசரியாக 180 மிமீ மழையும், கோடை காலத்தில் பெறும். குமரி நீலகிரி தென்காசிக்கு அடுத்தப்படியாக தேனி திண்டுக்கல் மாவட்டங்கள் சராசரியாக 171 மிமீ மழையும், தர்மபுரி மாவட்டம் 170 மிமீ மழையும் கோடை காலத்தில் பெறுகிறது. இவ்வாறு தென்காசி வெதர்மேன் ராஜா தெரிவித்துள்ளார்.

சிறப்பு வானிலை தகவல்களுடன் செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!