23 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » இராமநாதபுரம் மாவட்ட கூட்டுறவு நூற்பாலை தொழிலாளர்கள் கோரிக்கை.!

இராமநாதபுரம் மாவட்ட கூட்டுறவு நூற்பாலை தொழிலாளர்கள் கோரிக்கை.!

எழுதியவர்: Baker BAker February 23, 2026, 5:42 pm

இராமநாதபுரம் மாவட்டம், அச்சங்குளத்தில் செயல்பட்டு வரும் இராமநாதபுரம் மாவட்ட கூட்டுறவு நூற்பாலை 2014 டிசம்பர் மாதம் மறுசீரமைக்கப்பட்டு மீண்டும் தொடங்கப்பட்டது. தொடக்கத்தில் 200 தொழிலாளர்கள் மற்றும் 18 தொழில்நுட்ப தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். பின்னர் பலர் குடும்ப சூழ்நிலைகளால் விலகிய நிலையில், தற்போது சுமார் 130-க்கும் மேற்பட்ட நிரந்தர தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

கடந்த ஆறு மாதங்களாக நிதிநிலையை காரணம் காட்டி மூன்று ஷிப்ட்களில் இயங்கிய ஆலை தற்போது இரண்டு ஷிப்ட்களாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும், ஆலையுடன் தொடர்பில்லாத பணிகளும் வழங்கப்பட்டு வருவதாக தொழிலாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இதனால் வேலைநிலைத்தன்மை பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பல நலன்கள் நிலுவையில் உள்ளன என கூறப்படுகிறது. 2021 முதல் 2025 வரையிலான ஊதிய உயர்வு தொகை வழங்கப்படவில்லை. 2023 முதல் 2025 வரையிலான சுற்றுலா படி நிலுவையில் உள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கான ESI மற்றும் EPF தொகைகள் கடந்த ஆறு மாதங்களாக செலுத்தப்படாத நிலையில் உள்ளன. 2025 ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களுக்கான வருடாந்திர ஊதிய உயர்வும் வழங்கப்படவில்லை. அதேபோல், 2025 ஆண்டுக்கான வைப்பு நிதியும் நிலுவையில் உள்ளது.

ஆலை தொடங்கிய நாள் முதல் பணியாற்றி இறந்த தொழிலாளர்கள் மற்றும் குடும்ப காரணங்களால் பணியை விட்டு விலகிய தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய முழு பணபலன்களும் வழங்கப்படவில்லை என தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், பணி மூப்பு (சீனியாரிட்டி) அடிப்படையில் உரிய அமலாக்கம் இதுவரை செய்யப்படவில்லை என்றும் அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

நிர்வாகம் “லே-ஆப்” நடைமுறையை அமல்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் பாதுகாக்க வேண்டும் என தொழிலாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

எனவே, இராமநாதபுரம் மாவட்ட கூட்டுறவு நூற்பாலை தொடர்ந்து முழுமையாக செயல்படவும், நிலுவைத் தொகைகள் உடனடியாக வழங்கப்படவும், 135 தொழிலாளர்கள் மற்றும் தொழில்நுட்ப தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படவும் மாவட்ட ஆட்சித் தலைவர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!