26 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » பொள்ளாச்சியில் ரூ.9.83 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் திறப்பு!

பொள்ளாச்சியில் ரூ.9.83 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் திறப்பு!

எழுதியவர்: Askar February 23, 2026, 5:24 am

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்  (22.2.2026) கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி நகராட்சி புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற விழாவில் 9.83 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையம் உள்பட 11.15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, 61.97 மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி நகராட்சியில் சி.டி.சி.மேடு பகுதியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் 9.83 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தை திறந்து வைத்தார்.

இந்த பேருந்து நிலையமானது 3.83 ஏக்கர் பரப்பளவில் 29 பேருந்துகள் நிறுத்தும் வசதியுடன் கட்டப்பட்டுள்ளது. பயணிகளின் வசதிக்காக இந்த பேருந்து நிலையத்தில் 64 கடைகள், 2 இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, தாய்மார்களுக்கான பாலுட்டும் அறை, 1 உணவகம், முதலுதவி அறை, பயணச்சீட்டு முன்பதிவு மையம்;

நேரக் காப்பாளர் அறை, பொருட்கள் பாதுகாப்பு அறை, கண்காணிப்பு கேமரா கட்டுப்பாட்டு அறை, ஏ.டி.எம் வசதி, 2 இடங்களில் கழிப்பிட வசதிகள், 2 உயர் கோபுர மின்விளக்குகள், 12 மீட்டர் உயர கம்பத்துடன் கூடிய 20 மின்விளக்குகள், கழிவுநீர் நீருந்து நிலையம், காவலர் அறை, பயணிகள் பேருந்துகளில் ஏறி, இறங்க தாரளமான இடவசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.

மேலும் இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கலங்கல் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் 45.00 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள துணை சுகாதார மைய கட்டடம்;

வால்பாறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கங்கம்பாளையம் பெத்தநாசிகனூர் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 17.25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மைய கட்டடம், கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சங்கராயபுரம் புதூர் முத்தூர் ஊராட்சியில் 9.85 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள நியாய விலைக் கடை என மொத்தம் 72.10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கட்ட்டங்களை திறந்து வைத்தார்.

தொடர்ந்து, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் 35.97 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாலைப்பணிகள், சமுதாய சுகாதார வளாகம், அங்கன்வாடி மையம் கட்டடம், நியாயவிலைக் கடை, குடிநீர் குழாய் அமைத்தல், நீர்தேக்கத் தொட்டி, ஆழ்துளை கிணறு, நடைபாதை அமைத்தல் உள்ளிட்ட 59 பணிகளுக்கும்;

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் 26.00 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கோட்டூர், வேட்டைக்காரன்புதூர், ஒடையகுளம் ஆகிய 3 பேரூராட்சிகள் மற்றும் ஆனைமலை ஒன்றியத்தில் உள்ள 38 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மறுசீரமைப்பு பணிகளுக்கும் என மொத்தம் 61.97 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

பின்னர், தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பொள்ளாச்சி நகராட்சியில் கோயம்புத்தூர் சாலை மற்றும் பல்லடம் சாலைகளை இணைக்கும் புதிய திட்ட சாலைக்கு டாக்டர் நா.மகாலிங்கம் அவர்களின் பெயரை சூட்ட மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இட்ட உத்தரவின்படி ”அருட்செல்வர் டாக்டர் நா.மகாலிங்கம் சாலை” என்று பெயர் சூட்டப்பட்ட பெயர் பதாகையை திறந்து வைத்தார்.

மேலும் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் பொள்ளாச்சி சுப்பம்மாள் வீதியில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் 60.00 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நகராட்சி கூடுதல் அலுவலக கட்டடத்தினையும் திறந்து வைத்தார்.

தொடர்ந்து சூலூர் பேரூராட்சியில் உள்ள ஊராட்சி அலுவலக வீதிக்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.எஸ். பொன்முடி அவர்களின் பெயரை சூட்ட முதலமைச்சர் அவர்கள் இட்ட உத்தரவின்படி, ”எஸ்.எஸ்.பொன்முடி சாலை” என்ற பெயர் சூட்டப்பட்ட பதாகையை தமிழ்நாடு துணை முதலமைச்சர் திறந்து வைத்தார்.

இன்றைய தினம் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி நகராட்சியில் புதிய பேருந்து நிலையம், கூடுதல் நகராட்சி அலுவலகம் உள்படமொத்தம் 11.15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, 61.97 மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!