உயிரைப் பறிக்கும் மாடுகள்: நாகர்கோவில் மாநகராட்சியின் அலட்சியத்தால் அரங்கேறிய மரணம்! உறங்குகிறதா நிர்வாகம்?
குமரி மாவட்டம், நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட வெள்ளடிச்சிவிளை பகுதியில் இன்று அதிகாலை சாலையில் சுற்றித்திரிந்த மாடுகள் மோதியதில் அன்வர் அலி (56) என்பவர் விபத்துக்குள்ளாகி படுகாயமடைந்தார். உயிருக்குப் போராடிய அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
நாகர்கோவில் மாநகராட்சிப் பகுதிகளில் பிரதான சாலைகள் முதல் உள் தெருக்கள் வரை மாடுகள் கட்டுப்பாடின்றி சுற்றித்திரிவது வழக்கமாகி விட்டது. இதனால் அவ்வப்போது வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்கி உயிரிழப்பதும், படுகாயமடைவதும் தொடர்கதையாகி வருகிறது. இதற்கு முன்னரும் நாகர்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இதுபோன்ற சம்பவங்கள் பல முறை நிகழ்ந்துள்ளன. இருப்பினும், நிர்வாகம் எவ்விதப் பயனுள்ள நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதே பொதுமக்களின் குற்றச்சாட்டு.
பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக விளங்கும் இந்த விவகாரம் குறித்து சமூக ஆர்வலர்களும் பத்திரிகைகளும் தொடர்ந்து புகார் அளித்தும், செய்திகளை வெளியிட்டும் வருகின்றனர். இருந்தபோதிலும், நாகர்கோவில் மாநகராட்சி நிர்வாகம், மாவட்ட நிர்வாகம் மற்றும் போக்குவரத்து காவல்துறை ஆகிய பொறுப்புள்ள துறைகள் இதனை பொருட்படுத்தாததாகவே தோன்றுகிறது. பொதுமக்களின் வரிப்பணத்தில் இயங்கும் மாநகராட்சி நிர்வாகம், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யாமல் மௌனம் காப்பது ஏன்? சாலையில் சுற்றித்திரியும் இந்த மாடுகள் யாருக்கும் சொந்தமற்றவையா?
இன்னும் எத்தனை உயிர்களைப் பலி வாங்கிய பிறகே நிர்வாகம் விழிப்புணர்வு அடையும்?
இந்த மாடுகள் யாருக்காவது உரிமையானவை எனில், பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் அவற்றை பொதுச்சாலையில் விடும் உரிமையாளர்கள்மீது ‘அலட்சியத்தால் மரணம் விளைவித்தல்’ (முந்தைய இந்திய தண்டனைச் சட்டம் 304A / தற்போதைய பாரதிய நியாய சன்ஹிதா – பிரிவு 106) மற்றும் ‘பொதுப் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துதல்’ (BNS பிரிவு 291) ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் ஏன் உடனடியாக குற்றவியல் வழக்குப் பதிவு செய்யக்கூடாது? மேலும், ‘மிருகவதைத் தடுப்புச் சட்டம், 1960’ன் படி விலங்குகளை கட்டுப்பாடின்றி சாலையில் விடுவதும் தண்டனைக்குரிய குற்றமாகும்.
மாடுகள் சாலையில் திரிவதைத் தடுக்க உயர்நீதிமன்றம் பலமுறை கடுமையான அறிவுறுத்தல்கள் வழங்கியிருந்தும், அவற்றைச் செயல்படுத்தாமல் மாநகராட்சி நிர்வாகமும் காவல்துறையும் செயலிழந்த நிலையில் உள்ளதா? விபத்து நடந்த பிறகு கண்துடைப்புக்காக சில மாடுகளைப் பிடித்து, பெயரளவில் சிறு அபராதம் விதித்து மீண்டும் அதே மாடுகளைச் சாலையில் விடுவது தான் பொறுப்பான நிர்வாகமா?
தொடர்ச்சியான விபத்துகள் நிகழ்ந்தும் பாராமுகமாக இருக்கும் மாநகராட்சி அதிகாரிகளும் கால்நடை பராமரிப்புத் துறையும் இதற்கு என்ன பதில் கூறப் போகின்றன? பொதுமக்களின் உயிருடன் விளையாடும் இந்த அலட்சியப் போக்கு தொடர்ந்தால், சம்பந்தப்பட்ட துறைகளும் அதிகாரிகளும் நீதிமன்றத்தில் சட்டத்தின் முன் பதில் சொல்ல வேண்டிய சூழ்நிலை உருவாகும்.
இனியாவது நிர்வாகம் விழித்தெழ்ந்து, சாலைகளை ஆக்கிரமிக்கும் மாடுகளை பறிமுதல் செய்து, அதன் உரிமையாளர்கள்மீது கடுமையான சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். மேலும், நிர்வாக அலட்சியத்தால் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு சம்பந்தப்பட்ட மாட்டின் உரிமையாளரும் மாநகராட்சி நிர்வாகமும் இணைந்து ரூ. 20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.




You must be logged in to post a comment.