தமிழக சட்டமன்றத்திற்கு வருகிற ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேதி அடுத்த மாதம் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பரபரப்பான சூழலில் தமிழக அரசியல் கட்சிகள் தேர்தலை எதிர்கொள்ள ஆயத்தமாகி வருகின்றன.தி.மு.க-காங்கிரஸ் தலைமையில் ஒரு அணியும், அ.தி.மு.க-பா.ஜ.க. தலைமையில் மற்றொரு அணியும், தமிழக வெற்றி கழகம் கூட்டணி அமைத்தோ அல்லது தனியாகவோ களமிறங்குகிறது. இதில் வழக்கம்போல் தனித்த அடையாளத்துடனும், உறுதியான கொள்கை நிலைப்பாட்டுடன் நாம் தமிழர் கட்சி சீமான் தனித்து களம் காண்கிறார். ஆகவே தமிழக அரசியல் களத்தில் நான்குமுனை போட்டி நிலவ வாய்ப்பு உள்ளது.நாம் தமிழர் கட்சி சார்பில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு ‘மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு’ என்ற தலைப்பில் பிரமாண்ட மாநாடு திருச்சி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆலம்பட்டி புதூரில் இன்று நடைபெறுகிறது. மாநாட்டையொட்டி அங்கு பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. திறந்தவெளி மைதானத்தில் நடைபெறும் இந்த மாநாட்டில் நாம் தமிழர் கட்சியினர் மற்றும் தொண்டர்கள் அமர இருக்கைகள் போடப்பட்டுள்ளன. மாநாட்டை முன்னிட்டு ஆலம்பட்டி புதூரில் இருந்து திருச்சி மாநகர் வரை சுமார் 25 கிலோ மீட்டர் தூரத்துக்கு கட்சி கொடிகள், தோரணங்கள், பிரம்மாண்ட பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இதில் பங்கேற்பதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து காலை முதல் பஸ், கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் தொண்டர்கள் மாநாட்டு திடலில் குவிந்த வண்ணம் உள்ளனர். பெரும்பாலானோர் குடும்பம் குடும்பமாக வந்தனர்.பின்னர் அவர்கள் தலைவர்களின் பிரம்மாண்ட கட்டவுட்டுகள் முன்பு செல்பி எடுத்து மகிழ்ந்தனர். மாநாடு சரியாக மாலை 3 மணிக்கு தொடங்குகிறது. இதற்கான மேடை 200 அடி நீளம், 64 அடி அகலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. மொழிப்போர் தியாகிகள், தமிழ் மண்ணை ஆண்ட மன்னர்கள், தமிழுக்காக போராடியர்கள் என மொத்தம் 570 தலைவர்களின் பதாகைகள் மாநாட்டு திடலில் வைக்கப்பட்டுள்ளன.வாகனங்கள் நிறுத்த 47 ஏக்கரில் பிரமாண்ட பார்க்கிங் வசதி, 38 மாவட்ட நிர்வாகிகள் தனித்தனியாக அமர இருக்கைகளுடன் கேபின்கள், மாற்றுத்திறனாளிகள், வயது முதிர்ந்தோர் அமர தனி கேபின், வெளிநாட்டவர்கள் அமர தனி இருக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மாநாட்டு திடல் முழுவதும் மின்விளக்குகள் பொருத்தப்பட்டு ஜொலிக்கிறது.ஒயிலாட்டம், கரகாட்டம், பரதம் பறை போன்ற தமிழர்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் இரண்டு மணி நேரம் நடைபெறுகிறது. அதன் பின்னர் மாலை 6 மணி அளவில் 100 அடி உயர கொடிக்கம்பத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கொடியேற்றி வைக்கிறார். அதன் பின்னர் மாலை 6.15 மணியளவில் அவரது தாய் அன்னம்மாள், மனைவி கயல்விழி மற்றும் நாம் தமிழர் கட்சியின் பெண் நிர்வாகிகள் குத்துவிளக்கு ஏற்றி வைத்து மாநாட்டை தொடங்கி வைக்கிறார்கள்.நிறைவாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எழுச்சி உரை ஆற்றுகிறார். அப்போது பிரம்மாண்ட மேடையில் 2026 சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் 117 ஆண்கள், 117 பெண்கள் என மொத்தம் 234 வேட்பாளர்களையும் அறிமுகப்படுத்துகிறார்.இந்த தேர்தலில் சீமான் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தனது சொந்த தொகுதியான காரைக்குடியில் களமிறங்கும் தகவலையும் வெளியிடுகிறார். கடந்த பாராளுமன்றத் தேர்தலில் 17 சதவீத வாக்குகளை காரைக்குடி அவருக்கு பெற்றுத்தந்தது. ஆகவே இந்த முறை காரைக்குடியில் வெற்றி கொடியை நாட்ட வேண்டும் என அவர் திட்டமிட்டு அங்கு களம் காண்கிறார்.தமிழக அரசியல் களத்தில் ஜெயலலிதா, கருணாநிதி ஆகிய இரு பெரும் ஆளுமைகள் இருந்த காலத்தில் அரசியலுக்கு வந்து தனக்கான தனி இடத்தை பெற்றிருப்பவர் சீமான். ஒவ்வொரு தேர்தலிலும் தனக்கான வாக்கு வங்கியை உயர்த்திக் காண்பித்து அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களையும் திரும்பிப் பார்க்க வைத்து வருகிறார்.கடந்த பாராளுமன்ற தேர்தலில் 8 சதவீதத்துக்கு மேல் வாக்குகள் பெற்று நாம் தமிழர் கட்சி அங்கீகாரம் பெற்றது குறிப்பிடத்தக்கது. சட்டமன்ற தேர்தலில் அடுத்த பாய்ச்சலாக மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு அமையும் என்பதில் சீமான் உறுதியாக உள்ளார். முன்னதாக மாநாட்டில் பங்கேற்பதற்காக சீமான் நேற்று இரவு திருச்சி வருகை தந்தார்.
திருச்சியில் நாம் தமிழர் கட்சியின் பிரமாண்டமான மாநாடு!
எழுதியவர்: Askar February 21, 2026, 10:20 am




You must be logged in to post a comment.