20 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » ஸ்டாலினின் அரசியல் விஸ்வரூபம்.. காங்கிரஸை பணிய வைத்த திமுகவின், அந்த ‘பவர் பிளே’ வியூகம்.

ஸ்டாலினின் அரசியல் விஸ்வரூபம்.. காங்கிரஸை பணிய வைத்த திமுகவின், அந்த ‘பவர் பிளே’ வியூகம்.

எழுதியவர்: Askar February 20, 2026, 7:46 pm

ஸ்டாலினின் அரசியல் விஸ்வரூபம்.. காங்கிரஸை பணிய வைத்த திமுகவின்.. அந்த ‘பவர் பிளே’ வியூகம்.

தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மேற்கொண்டுள்ள அதிரடி அரசியல் நகர்வுகள், கூட்டணிக் கட்சியான காங்கிரஸை திகைக்க வைத்துள்ளது. கடந்த சில வாரங்களாக திமுகவிடம் “ஆட்சியில் பங்கு”, “கூடுதல் தொகுதிகள்” என உரிமைக் குரல் எழுப்பி வந்த காங்கிரஸ், இப்போது அப்படியே அடங்கிப்போய் ஸ்டாலினைப் புகழத் தொடங்கியுள்ளது.

நேற்று இரவு விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் திடீரென ஸ்டாலினைப் புகழ்ந்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்குப் பின்னால் இரண்டு முக்கிய காரணங்கள் இருப்பதாக அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.

முதல் காரணம், நேற்று தேமுதிக திமுக கூட்டணியில் இணைந்ததுதான். கேப்டன் விஜயகாந்த் தொடங்கிய தேமுதிகவை லாவகமாகத் தனது அணிக்குள் கொண்டு வந்ததன் மூலம், காங்கிரஸின் பேரம் பேசும் சக்தியை ஸ்டாலின் முறியடித்துள்ளார்.

தமிழக அரசியல் களத்தில் யாரும் எதிர்பாராத ஒரு மாபெரும் திருப்பமாக, தேமுதிக அதிகாரப்பூர்வமாக திமுகவுடன் கைகோர்த்துள்ளது. கடந்த சில நாட்களாக அதிமுக-பாஜக கூட்டணியில் தேமுதிக இணையப்போகிறது என்று பலமாக நம்பப்பட்ட நிலையில், நேற்று நள்ளிரவில் அரங்கேறிய ரகசிய பேச்சுவார்த்தைகள் ஒட்டுமொத்த அரசியல் கணக்குகளையும் தலைகீழாக மாற்றியுள்ளன.

கடந்த சில தேர்தல்களாகவே தனித்துப் போட்டியிட்டோ அல்லது மற்ற கூட்டணிகளிலோ இருந்த தேமுதிக, தற்போது திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இணைந்துள்ளது. முக்கியமாக 6 இடங்களுக்கான மக்களை தேர்தல் அடுத்த மாதம் நடப்பதால்  அதற்கு முன் தேமுதிக, திமுகவிடம் 1 எம்பி இடத்தை வாங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“காங்கிரஸ் இல்லாவிட்டாலும் எங்களுக்குப் பிரச்சனை இல்லை, தேமுதிக இருக்கிறது” என்ற மறைமுக எச்சரிக்கையை இதன் மூலம் ஸ்டாலின் விடுத்துள்ளார். ஒருவேளை காங்கிரஸ் தனது பிடிவாதத்தைக் காட்டினால், அவர்களுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளைத் தேமுதிகவிற்கு வழங்கிவிட்டு, காங்கிரஸை கூட்டணியை விட்டு வெளியேற்றவும் திமுக தயங்காது என்பதை இந்த நகர்வு உறுதிப்படுத்தியுள்ளது. இதனால் வேறு வழியின்றி காங்கிரஸ் தனது பிடிவாதத்தை விட்டு இறங்கி வந்துள்ளது.

இரண்டாவது முக்கியக் காரணமாகக் கருதப்படுவது, அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபாலின் சென்னை வருகை. டெல்லி மேலிடத்தின் அழுத்தத்தை ஸ்டாலினிடம் நேரடியாகச் செலுத்த அவர் வந்தபோது, அவரைச் சந்திக்காமல் ஸ்டாலின் தவிர்த்துவிட்டதாகக் கூறப்படுகிறது. பல முறை அப்பாயிண்ட்மெண்ட் கேட்டும் கிடைக்கவில்லை.

காங்கிரஸின் எந்த அழுத்தத்திற்கும் பணியப் போவதில்லை என்பதையும், தமிழகத்தில் திமுகதான் ‘பாஸ்’ என்பதையும் இந்தச் செய்கை நிரூபித்துள்ளது. இந்த “கோல்ட் ஷோல்டர்” (Cold Shoulder) பாணி, டெல்லி காங்கிரஸை யோசிக்க வைத்துள்ளது. இதன் விளைவாகவே, மாணிக்கம் தாகூர் போன்ற தீவிரமாகப் பேசி வந்த தலைவர்கள் கூட, இப்போது ஸ்டாலினே எங்கள் தலைவர் எனப் புகழாராம் சூட்டத் தொடங்கியுள்ளனர்.

இந்த அரசியல் ஆடுபுலி ஆட்டத்தில் ஸ்டாலின் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளார். பிப்ரவரி 22 அன்று அதிகாரப்பூர்வமாகத் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகள் தொடங்க உள்ள நிலையில், திமுக முழு பலத்துடன் களம் இறங்குகிறது. திராவிட மாடல் ஆட்சியில் யாருக்கும் பங்கு இல்லை என்பதை மிகத் தெளிவாக உணர்த்தி, காங்கிரஸை ஒரு ஜூனியர் பார்ட்னராகவே ஸ்டாலின் தக்க வைத்துள்ளார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!