20 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » ஜனநாயகத் திருவிழா-2026

ஜனநாயகத் திருவிழா-2026

எழுதியவர்: Askar February 20, 2026, 4:04 pm

ஜனநாயகத் திருவிழா-2026

( தோரணம் – 13 )

அம்பானியின் கனவும் திராவிடப் பொற்காலமும்

“ஒரு அஞ்சல் அட்டை விலையில் மக்கள் தங்களுக்குள் பேசும் படியான தொலைபேசி வசதியை இந்தியா முழுக்க உருவாக்குவதே என் லட்சியம்”-என ரிலையன்ஸ் நிறுவனர் திருபாய். அம்பானி ஒரு நேர்காணலில் கூறினார். அவர் அப்படிக் கூறிய 1990- களில் ஒரு அஞ்சல் அட்டை விலை வெறும் 15- பைசா மட்டுமே. மேலும், அதுவொரு STD-களின் பொற்காலமும் கூட….

10 ரூபாய்க்கு பக்கத்து ஊருக்கும், 50 ரூபாய்க்கு தொலை தூர ஊர்களுக்கும், 100- ரூபாய்க்கு தமிழ்நாட்டிற்க்கு வெளியே & வட மாநிலங்களுக்கும்- என மக்கள் தங்களின் கைக்காசுகளை செலவு செய்து பேசிக் கொண்டிருந்தார்கள். இந்த சூழலில், அம்பானியின் இந்தக் கூற்று இந்திய மக்களுக்கு மிகப் பெரிய ஆச்சரியத்தை தந்தது. இந்திய ஊடகங்கள் இதனை வியந்து, வியந்து பாராட்டி எழுதின. இதனால், அம்பானி மனது வைத்தால் எதையும் நடத்திக் காட்டி விடுவார். அவர் ஒரு மிகப் பெரிய அசகாய சூரர் என மக்கள் நம்பினார்கள். அப்படி நம்ப வைக்கப்பட்டார்கள்.

தேசிய வங்கிகளில் கடன் வாங்குவதில் தொடங்கி, பல்வேறு சலுகைகளையும், உரிமங்களையும் இந்திய அரசிடமிருந்து எளிதில் பெற்று விடும் பனியா தொழில் அதிபர்களுக்கு இத்தனை ஆழமான தன்னம்பிக்கை இருப்பதில் வியப்பில்லை

மேலும். உலகின் வேறு எங்குமே இல்லாத அளவிற்கு இங்கு மட்டுமே உள்ள வெகு அடர்த்தியான மக்கள் தொகை பற்றியும், அதன் ஆழமான சந்தை மதிப்புகள் பற்றியும், அதில் எத்தனை அடுக்குகளை தனக்கான சந்தையாக மாற்ற முடியும் என்பதை தனது நீண்ட கால வணிக அனுபவ அறிவால் உணர்ந்திருந்தார், இந்த இடத்தில் கவனிக்கவும். அவருடைய பார்வை முழுக்க, முழுக்க வணிக நலன் சார்ந்த கண்ணோட்டம் மட்டுமே. மேலும், இந்தியாவின் சமூகப் பொருளாதார கண்ணோட்டதின் அடிப்படையிலும், இதனை அவர் ஊகித்து வைத்திருந்தார். இப்படி, ஊடுருவிப் பார்த்து, அதில் தனக்கென ஒரு “பிஸ்னஸ் மாடல்”- ஐ அவர் உருவாக்கி வைத்திருந்தார். அதன் அடிப்படையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். ஆனால், இதனை திருபாய் அம்பானியின் வணிக ஆளுமையின் உச்சம் எனக் கூறி, நமது ஊடகங்கள் அவரை உச்சி முகர்ந்து மகிழ்ந்தன. இன்றளவும் மகிழ்கின்றன.

ஆனால்….?

பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, இதே கருத்தோட்டத்தை பிரதிபலிக்கும் வகையில், நமது இந்திய தொலைத் தொடர்புத் துறையில் மிகப் பெரிய தலைகீழ் மாற்றங்கள் நிகழத் தொடங்கியது.

2004- ஆம் ஆண்டு முதல் 2014- ஆம் ஆண்டு வரை இந்திய ஒன்றிய அரசின் பொறுப்பை காங்கிரஸ் கூட்டணி ஏற்றிருந்தது. அதில் தொலைத் தொடர்பு துறை கேபினட் அமைச்சராக (2004-2007) முதலில் தயாநிதி மாறன் MP அவர்களும், அவருக்குப் பிறகு ஆ.ராசா MP அவர்களும் ( 2007-2010) பதவி வகித்தனர். விபரம் தெரிந்த நாள் முதற் கொண்டு – சமூகநீதி, மாநில உரிமை, எல்லார்க்கும் எல்லாம் – என பேசிப் பேசியே வளர்ந்த இந்த இரு திராவிட ஆளுமைகளின் மொத்தம் 7- ஆண்டு கால துறை சார்ந்த செயல்பாடுகள் இந்திய தேசத்தை உலக அரங்கில் தூக்கி நிறுத்தியது.

மாறி வரும் தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொடர்புத் துறை மாற்றங்களைப் புரிந்து கொண்ட மாறனும், அடுத்து வந்த ஆ.ராசாவும் மிகத் துல்லியமாக செயல்பட்டார்கள்.

வச்சு அழகு பார்ப்பதை விட, சரக்குகளை விற்று அழகு பார்க்க வேண்டும்- என்ற பழமொழிக்கு ஏற்ப, மேலே குறிப்பிட்ட இரண்டு திராவிடர்களும் அடுத்தடுத்து வந்து அதிரடியாகச் செயல்பட்டார்கள். அதன்படி, எட்டாத உயரத்தில் “படம்” காட்டிக் கொண்டிருந்த தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொடர்பு சேவைகள் அனைத்தையும் எல்லாத் தரப்பு மக்களுக்கும் கொண்டு போய் சேர்க்க திட்டங்களை வகுத்தார்கள். எட்டவே எட்டாத உயரத்தில் நிலை கொண்டிருந்த தொலைபேசி மற்றும் அலைபேசிகளை எளிய மக்களின் சராசரி உயரத்திற்கு கீழே இறக்கினார்கள்.

குறிப்பாக, ஐம்பது பைசா அஞ்சலட்டை விலைக்கு “அழைப்பு” -களின் கட்டணத்தை “கிடு,கிடு”- என கீழே இறக்கினார்கள். பத்து ஆண்டுகளுக்கு முன் அம்பானி கண்ட வணிகக் கனவை, அதே பத்து ஆண்டுகளுக்குப் பிறகு நிர்வாக ரீதியாக நடத்திக் காட்டினார்கள். இவர்களின் அதிரடி நடவடிக்கைகளால், அலைபேசி வாடிக்கையாளர் எண்ணிக்கையானது ஏழே ஆண்டுகளில் 4-கோடிகளிலிருந்து 60-கோடிகளாக உயர்ந்தது. இதனால் வாடிக்கையாளர் எண்ணிக்கை அப்படியே 15- மடங்கு உயர்ந்தது. அந்த ஏழு ஆண்டுகளில் வீசிய திராவிட அலையானது, 2G அலைக்கற்றை பயன்பாட்டை தேசத்தின் வேர்கால்கள் வரைக்கும் கொண்டு போய் சேர்த்தது. எனவே, இந்த திராவிடக் காலக் கட்டத்தை இந்திய தொலை தொடர்புத் துறையின் பொற்காலம் என்று நாம் கொண்டாடி இருக்க வேண்டும்.

“2G- அலைக்கற்றை”- என்றாலே மேலே விவரிக்கப்பட்ட திராவிட பொற்காலம் தான் நம் நினைவுக்கு வர வேண்டும். அது தான் நன்றியுள்ள ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் அழகாகும். ஆனால்… இங்கே என்ன நடந்தது….. ???

ஷரீப். அஸ்கர் அலி, வண்ணப்பலகை

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!