திராவிட மகுடத்தில் மற்றுமொரு வைரக்கல்!
வாழ்க்கையின் போக்குகளை போகிற போக்கில் விளங்க வைப்பதில் மறைந்த எழுத்தாளர் சுஜாதா மிகவும் கில்லாடியானவர். அவருடைய “படிகள்”- நேர்காணல் தொடங்கி கட்டுரைகள், சிறுகதைகள், நாவல்கள், அறிவியல் எழுத்துக்கள் என எல்லாத் தளங்களிலும், பல்வேறு செய்திகளை நமக்கு சுவாரஸ்யமாக சொல்லி விளங்க வைத்திருப்பார். அவர் சுட்டிக் காட்டிய ஒவ்வொரு சுவாரஸ்யமான புள்ளிகளும் நமக்கான வாழ்க்கைப் பாடங்களே.
அந்த வரிசையில்….
“தான் வாழ்ந்து கொண்டிருக்கும் உலகத்தை ஒரு இளைஞன் எப்போது புரிந்து கொள்ள தொடங்குகிறான்?” – என்ற சற்று திருகலான கேள்விக்கு ….
“பப்ளிக் டாய்லெட்”- டில் – என “பளிச்”-சென்று பதிலளித்தார்.
அதற்கு மேல் நமக்கு வேறு எந்த விளக்கங்களும் தேவைப்படவில்லை.
உண்மைதானே? வீட்டுச் சூழலில் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வாழ்ந்து பழகிய நமக்கு, பொதுக் கழிப்பிடம் என்பது இந்த சமூகம் வைக்கும் மிகப் பெரிய “நுழைவுத் தேர்வு” தானே? ஆனால் இந்தத் தேர்வு அந்த ” நீட் தேர்வு”- போல நம்மை வடி கட்டி வெளியே நிறுத்தாது. மாறாக, சவால் மிகுந்த வாழ்க்கையை எதிர் கொள்ள நமக்கு சொல்லிக் கொடுக்கும். அதற்குத் தேவையான பக்குவத்தையும், சகிப்புத் தன்மையையும், சமகாலப் புரிதல்களையும் நமக்கு கற்றுத் தரும்.
நமக்கு மட்டுமல்ல. நம்மை ஆளத் துடிக்கும் அரசியல்வாதிகளுக்கும், ஆண்டு கொண்டிருக்கும் ஆட்சியாளர்களுக்கும் கூட இது போன்ற நுழைவுத் தேர்வுகள் உண்டு.
அந்த வகையில்….
2021- ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் ஆட்சி அதிகாரங்களை கைப் பற்றிய தி.மு.க.வின் சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் திரு உதயநிதி ஸ்டாலின் இது போன்றதொரு தேர்வை தானாகவே முன் சென்று எதிர் கொண்டார். அவரது தொகுதி மக்களுக்கு நன்றி சொல்லும் பொருட்டு களத்திற்கு நேரில் சென்ற போது, மக்களுடைய பல்வேறு குறைகளையும் செவி கொடுத்து கேட்டறிந்தார். அத்துடன், தேவைப்பட்ட இடங்களில் நேரடி கள ஆய்விலும் ஈடுபட்டார். அப்படியான ஆய்வுகளின் போது அடிப்படை சுகாதாரப் பணிகளுக்கே முன்னுரிமை தந்து பார்வையிட்டார்.
ஆம்… நண்பர்களே..!
நகரின் பாதாள சாக்கடை அமைப்புகளை மட்டுமின்றி நகரில் உள்ள பொதுக் கழிப்பறைகளை கூட எவ்வித தயக்கமும் இன்றி நேரடியாக உள்ளே சென்று ஆய்வு செய்தார். அந்த நேரத்தில் அவர் வெளிப்படுத்திய சமநிலை குழையாத உடல் மொழியும், நிர்வாகப் பார்வையும், பொறுப்புகளை உணர்ந்த வெளிப்பாடுகளும், அவர் மீது குறைந்தபட்ச நம்பிக்கையை உருவாக்கியது. மேலும், அவர் மீதான மக்களின் மேலோட்டமான பார்வையை மாற்றி அமைத்தது. எளிய மற்றும் விளிம்பு நிலை மக்கள் மீது அவர் காட்டி வரும் அக்கறைகள் பொது வெளியில் வெளிப்படத் தொடங்கியது.
இருப்பினும்….
தமிழ்நாட்டின் பொதுப் புத்தியில் புரையோடிப் போயிருக்கும் “திராவிட அலர்ஜி”- எனும் மஞ்சள் கண்ணாடி வழக்கம் போல நமக்கு மஞ்சள் நிறத்தையே காட்டி வந்தது. ஆனாலும், காலம் அப்படியே உறைந்து விடவில்லை. அல்லவை எது ? நல்லவை எது ? -என நமக்கு தெளிவாக அடையாளம் காட்டத் தொடங்கியது.
இந்திய மக்களை ஒவ்வொரு நாளும் பதட்டத்தில் ஆழ்த்தி வரும் ஆட்சியாளர்களால், மக்கள் நம்பிக்கை இழந்து நிற்கும் இன்றைய கொடும் சனாதான சூழலில்….
அந்தக் கொடும் சனாதான சூழலை – டெங்கு, மலேரியா போன்ற நோய் கூறுகளின் வரிசையில் கொண்டு வந்து நிறுத்திய அவருடைய துணிவான மேடைப் பேச்சு, அவர் யாருக்கானவர் என்பதை நமக்கு தெளிவாக அடையாளம் காட்டியது. ஒட்டு மொத்த இந்தியாவும் எதிர்க்கத் துணியாத மதவாத பனியா அரசை எதிர் கொள்ளும் திராவிட இயக்கத்தின் இளம் ஆளுமை இவர் தான் என நமக்கு துல்லியமாக அடையாளம் காட்டியது.
பிறகென்ன ?
மீனுக்கு இட்ட தூண்டிலில் வானம் வந்து சிக்கியதைப் போல,…..,
பெரியாரின் சித்தாந்த வாரிசு…
அண்ணாவின் கொள்கை வாரிசு…
கலைஞரின் வீட்டு வாரிசு…
காலத்திற்கு ஏற்ற கூர்மையான வேகத்துடனும், விவேகத்துடனும்…
இன்றைக்கு களத்தில் நிற்கிறது.
தேசம் காக்கப் புறப்பட்டுள்ள நமது திராவிடப் படையின் வெற்றி மகுடத்தில் மேலும் ஒரு வைரக் கல் பதிக்கப்பட்டு விட்டது.
பெரிதினும் பெரிது கேள்!- என்கிறது காலம்.
ஷரீப். அஸ்கர் அலி, வண்ணப்பலகை




You must be logged in to post a comment.