சூறைக்காற்றால் மீன்பிடித் தொழில் மந்தம்; கேரை மீன் கிடைக்காததால் மீனவர்கள் வேதனை!
குமரி மாவட்டம் குளச்சல் ஆழ்கடல் பகுதியில் வீசும் சூறைக்காற்று காரணமாக, மீன்பிடிக்கச் சென்ற விசைப்படகுகள் பாதியிலேயே கரை திரும்பின. எதிர்பார்த்த அளவு கேரை மீன்கள் கிடைக்காததால் மீனவர்கள் பெரும் நஷ்டத்தைச் சந்தித்துள்ளனர்.
குளச்சல் மீன்பிடித் துறைமுகத்தைத் தங்குதளமாகக் கொண்டு 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 1000-க்கும் மேற்பட்ட வள்ளம் மற்றும் கட்டுமரங்களும் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. பொதுவாக, ஆழ்கடலுக்குச் செல்லும் விசைப்படகுகள் சுமார் 10 நாட்கள் வரை கடலிலேயே தங்கி மீன்பிடிப்பது வழக்கம். இந்த ஆழ்கடல் பகுதியில்தான் கேரை, சுறா, கணவாய், இறால், புல்லன் போன்ற உயர்ரக மீன்கள் கிடைக்கும். தற்போது குளச்சல் பகுதியில் ‘கேரை’ மீன்களுக்கான சீசன் காலமாகும். ஆனால், கடந்த சில நாட்களாகக் கடலில் வீசும் பலத்த சூறைக்காற்று காரணமாக மீன்பிடித் தொழில் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால், ஆழ்கடலுக்குச் சென்ற பெரும்பாலான விசைப்படகுகள் மீன்பிடிக்க முடியாமல் பாதியிலேயே கரை திரும்பி, துறைமுகத்தில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளன.
நேற்று காலை நிலவரப்படி, மீன்பிடிக்கச் சென்றவற்றில் இரண்டு விசைப்படகுகள் மட்டுமே கரை திரும்பின. அவற்றிலும் மிகக் குறைந்த அளவிலேயே கேரை மீன்கள் கிடைத்தன. பிடித்து வரப்பட்ட மீன்களை மீனவர்கள் ஏலக்கூடத்தில் வைத்து விற்பனை செய்தனர். இதுகுறித்து விசைப்படகு மீனவர்கள் கவலை தெரிவிக்கையில், “தற்போது கேரை மீன் சீசனாக இருந்தாலும், மீன்கள் வரத்து மிகவும் குறைவாகவே உள்ளது. ஆழ்கடலில் காற்று பலமாக வீசுவதால் தொடர்ந்து மீன்பிடிக்க முடியவில்லை. கிடைத்த சொற்ப மீன்களை விற்று வரும் பணம், படகிற்குச் செலவிடப்பட்ட டீசல் காசைக் கூட ஈடுகட்டவில்லை,” என்று வேதனையுடன் தெரிவித்தனர்.
போதிய மீன்கள் கிடைக்காததால், குளச்சல் பகுதியில் மீன்பிடித் தொழில் தற்போது மிகவும் மந்தமடைந்துள்ளது.




You must be logged in to post a comment.