ஜனநாயகத் திருவிழா- 2026
( தோரணம் – 12 )
தேசமெங்கும் வீசி வரும்; திராவிட அலைக்கற்றை!
1980- ஆம் ஆண்டுகளில்….
வளைகுடா நாடுகளுக்கு கொத்து, கொத்தாக வேலை தேடிப் போன நம்ம ஆட்கள், போய் வந்த பின் மீட்டர் கணக்கில் கதை சொன்னார்கள்.
அந்த நாட்டில் பால்காரர் கூட பைக்கில் வருவார். தெருக்களை கூட்டிப் பெருக்கும் தூய்மைப் பணியாளர் கூட பைக்கில் வருவார்கள்….. என “ரீல்”- அறுந்து போகும் அளவுக்கு அள்ளி விடுவார்கள்.
போலவே,
1990- களின் கடைசி…
இந்தியாவின் பெரு நகரங்களில் “செல்லுலார்”- செல்பேசி சேவைகள் தொடங்கப்பட்டன. அந்தந்தப் பெரு நகரங்களின் தலைக்கு மேல் உள்ள ஆகாய வெளிகளை “வாடகை”-க்கு எடுத்த ஒய்யார மனிதர்கள் மட்டும், தங்களுக்குள் ஓயாமல் பேசத் தொடங்கினார்கள். அதனை ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்த “மிஸ்டர்- பொதுஜன” -த் திற்கு கலர், கலரான விளம்பரங்கள் மட்டுமே கண்களில் மிஞ்சியது.
அப்போது….
“டேய் மச்சான்! எங்க அமிஞ்சிக்கரை மாமா அமெரிக்காவில் உள்ள நண்பருடன் “செல்லுலார்”- போனில் பேசினார்டா. அவுட் கோயிங் கால் நிமிடத்திற்கு நூறு ரூபாயாம்டா…”-என கட்டுக்கு அடங்காத பெருமையோடு, நம்ம அயனாவரம் கோபாலூ… தனது ஐ.சி.எப். நண்பனிடம் உரக்கச் சொல்லிக் கொண்டிருந்தான்.
இதனையெல்லாம், தனது கடைக் கண்ணால் பார்த்த படியே கடந்து சென்ற கால தேவன், கண்ணிமைக்கும் நேரத்தில் புரண்டு படுத்தான்.
மில்லேனியம் ஆண்டும் வந்தது….
கி.பி. 2000- ஆம் ஆண்டுகளில் அறிவியல் தொழில் நுட்பமும், தகவல் தொழில் நுட்பமும் பின்னிப் பிணைந்து வளர்ந்து கொண்டே சென்றது. அதுவரையில், கம்பிக்குள் கடந்து சென்ற பேச்சுக்கள் கூட அலைக் கற்றை ஏறி ஆகாயத்தில் பறந்து செல்லத் தொடங்கியது. இதனால், இந்திய தொலை தொடர்புத் துறையும், தகவல் தொழில் நுட்பத் திரையும் முயங்கித் திளைத்தது.
அப்புறமென்ன ?
“அகண்ட அலைக் கற்றை”- என்ற “பிராட் பேண்ட்”- துறை ஒன்று புதிதாகப் பிறந்தது. இது தொ.தொ. துறையின் இரண்டாம் தலைமுறை (2G).
அதற்கு அடுத்து- பேச்சுக்கள், படங்கள், காணொளிகள், கணினி மொழிகள் – என அதுவொரு “தகவல் நெடுஞ்சாலை”- யாக பரிணமித்தது. இது மூன்றாம் தலைமுறை (3G).
அடுத்தடுத்த வளர்ச்சியில்… தரவுகள் அடங்கிய நான்காம் தலைமுறை (4G),
துல்லியமான காணொளிகள், மேலும் அடர்த்தியான தரவுகள் அடங்கிய கோப்புகள்- என ஐந்தாம் தலைமுறை (5G) என… இப்படி வளர்ந்து கொண்டே செல்கிறது…
இதுவரை சொன்னது அறிவியல் வளர்ச்சி + தொழில்நுட்ப புரட்சி. நமது இந்திய அரசு அதனை எப்படி எதிர் கொண்டது + எப்படி கை கொண்டது ? என்பதை இனி பார்ப்போம்.
புதிய தொழில் நுட்பத்தில் உதித்த இந்த நவீன கால “அலைக்கற்றை”- ஐ லாபகரமான பண்டமாக மாற்ற, இந்திய தொலை தொடர்புத் துறையின் அன்றைய “கேபினட்” அமைச்சர் திரு. தயாநிதி மாறன் MP (DMK)* 2004- ஆம் ஆண்டில் பல்வேறு புதிய நடவடிக்கைகளை மேற் கொண்டார். FDI எனப்படும் அந்நிய மூலதனத்தை 49% லிருந்து 74% மாக உயர்த்தினார்.
அடுத்ததாக, முழுக் கட்டணம், அரைக் கட்டணம், கால் கட்டணம் – என்ற காலக் கெடு-க்களை எல்லாம் தூக்கி எறிந்து விட்டு, ஒரே கட்டண முறையைக் கொண்டு வந்தார்.
இதற்கு அடுத்ததாக அவர் அடித்த அடிதான் மிகப் பெரிய அடி. அனைத்து அலைபேசிகளுக்கும் “இன்கம்மிங் கால்”- இலவசம்.இந்திய தொ.தொ. துறையில் இன்றைக்கும் இதுதான் மிகப் பெரிய “மாஸ்டர் ஸ்ட்ரோக்”.
அதன் படி, இந்தியா முழுக்க “ஒன் இந்தியா” என்ற திட்டத்தின் கீழ் 1- நிமிடம், 1- ரூபாய் என்ற மலிவான கட்டணத்தை நிர்ணயித்தார். எனவே, *அலைப் பேசி என்பது ஆடம்பர சேவையல்ல. அதுவொரு அன்றாடத் தேவை* என்ற மக்கள் மயச் சூழல் உருவானது.
இதனால், அதன் பயனாளிகள் எண்ணிக்கை பல மடங்கு கூடியது, அதைத் தொட்டு, அரசுக்கான வருவாய்களும் பல மடங்கு கூடியது. மேலும், அலைபேசிப் பயனாளர்கள் எண்ணிக்கையில் உலகின் “நம்பர் ஒன்”- இடத்தை இந்தியா பிடித்தது. இதனையடுத்து, உலக அளவிலான தனியார் நிறுவனங்கள் தங்களது சேவைகளைத் தொடங்க இந்தியா நோக்கி வந்தார்கள்.
நடுத்தர மற்றும் எளிய மக்களும் அலைபேசியை பயன்படுத்த தொடங்கியதால், தொலைபேசியும், அலைபேசியும் இந்திய மக்களின் வாழ்க்கையில் ஓர் அங்கமாக மாறிப் போனது.
இப்படியாக…. “எல்லார்க்கும் எல்லாம்” என்ற திராவிட சித்தாந்தமானது, “தகவல் தொழில் நுட்ப புரட்சி”- வடிவில், தேசம் எங்கும் பரவியது.
அதற்குப் பிறகு, இந்திய தொலைத் தொடர்புத் துறை “கேபினட்”- அமைச்சராக 2007- ஆம் ஆண்டு பொறுப்பேற்ற *திரு. ஆ.ராசா MP (DMK)* அவர்கள் மேலும் பல சீர்திருத்தங்களை மேற் கொண்டார். அதன்படி, வட இந்திய கார்ப்பரேட் கம்பெனிகளின் சுய ஆதாயமிக்க “லாபி”-களை உடைத்து, அன்றைய *2G அலைக்கற்றை*- சந்தையை வாங்கத் தகுதி உள்ள பிற நிறுவனங்களுக்கும் பொதுவாக்கினார். போலவே, புதிய கட்டணச் சலுகைகளை அறிவித்தார். அதன் படி, *ஒரு நொடிக்கு ஒரு பைசா* -என கட்டணத்தை மிக, மிக மலிவாக்கினார். அத்துடன், இந்தியாவின் குக்கிராமங்கள் வரைக்கும் உயர் நுண்ணலை கோபுரங்களை அமைத்து அலைபேசி சேவையை ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் சொந்தமாக்கினார். இதன் வழியாக, திராவிடம் போதித்த சமூக நீதியானது நமது தேசம் முழுக்கவும் நிலை நிறுத்தப்பட்டது.
தமிழ் நாட்டில் தோன்றிய தி.மு.க. என்ற கட்சியானது, தனக்கு கிடைத்த இந்திய தொலைத் தொடர்புத் துறை பதவியைப் பயன்படுத்தி, நாட்டின் நவீன இயற்கை வளங்களில் ஒன்றான “அலைக்கற்றை”-ஐ முழுவதும் தேசியமயமாக்கியது. அதன் பயன்களை 140 கோடி மக்களும் இன்றைக்கு நேரடியாக அனுபவித்து வருகிறார்கள். அதிலும், தனது ஒவ்வொரு நொடியிலும் அனுபவித்து வருகிறார்கள். குறிப்பாக, வெறும் பேசும் கருவியாக செயல்பட்டு வந்த அலைபேசிகள், இன்றைக்கு பல்நோக்கு தொடுதிரை திறன் பேசிகளாக உருவெடுத்துள்ளன. இத்தனை பெரிய நவீன கால தொழில்நுட்ப ஜனநாயகப் புரட்சி- யை, தேசமெங்கும் வீசி வரும் திராவிட அலைக் கற்றையை, சகிக்கப் பொறுக்காத வட இந்திய ஆதிக்க சக்திகளும், வட இந்திய ஊடகங்களும் இதற்கு கை மாறாக என்ன செய்தார்கள் ?
அதற்கு எதிர்வினையாக நாம் என்ன செய்தோம் ?
ஷரீப். அஸ்கர் அலி, வண்ணப்பலகை




You must be logged in to post a comment.