18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஒரு கை புரட்சி: தட்டச்சில் தடம் பதிக்கும் மாற்றுத் திறனாளி அபிதா

ஒரு கை புரட்சி: தட்டச்சில் தடம் பதிக்கும் மாற்றுத் திறனாளி அபிதா

எழுதியவர்: mohan February 18, 2026, 3:43 pm

 

தன்னுடைய ஒருகை சிறுவயதில் ஏற்பட்ட விபத்தின் காரணமாக ஊனமுற்ற நிலையில், மற்றொரு கையால் மட்டுமே தட்டச்சு பள்ளியில் பயின்று, தேர்வுக்கு தயாராகி வருகிறார் அபிதா என்ற மாற்றுத்திறனாளி பெண். முயற்சி செய்தால் மாற்றுத் திறனாளிகளும் மகத்தான சாதனை புரிய முடியும் என்பதை சொல்லாமல் சொல்லும் அபிதா குறித்த   ஒரு சிறப்பு தொகுப்பு.

தட்டச்சு பயிற்சி நிமித்தம் மதுரைக்கு வந்திருந்த அந்த பெண்ணை எதிர்பாராத விதமாக சந்திக்க நேர்ந்தது. தட்டச்சு செய்வதற்கு கைகள் இரண்டும் மிக முக்கியமான ஆயுதம். ஆனால், ஒரு கை ஊனமுற்றிருந்த நிலையில் இருந்த மாற்றுத்திறனாளி பெண்ணான இவரால் எப்படி இது சாத்தியம்? என பேச்சு கொடுத்தோம்.

மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகாவை ஒட்டி அமைந்துள்ளது மல்லபுரம் கிராமம். அருகில் உள்ள திருவள்ளுவர் கலை அறிவியல் கல்லூரியில் பி எஸ் சி பிசிக்ஸ் படித்து முடித்துள்ளார் அபிதா. இரண்டு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்று, ஒன்றரை வயதில் ஆண் குழந்தை உள்ளது. டி என் பி எஸ் சி குரூப் 4 தேர்வுக்காக தன்னை தயார்படுத்தி வரும் அபிதா, இரண்டு வயதாக இருக்கும் போது கட்டிலில் இருந்து கீழே விழுந்ததால் இடது கை பாதிக்கப்பட்டு செயல் இழந்து போனதாகக் குறிப்பிடுகிறார். இதற்காக பல்வேறு மருத்துவ சிகிச்சை மேற்கொண்டும் தனது கை சரியாகவில்லை என்கிறார். இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு தட்டச்சு முதன்மை தகுதியாக உள்ள நிலையில், தன்னால் கற்க இயலுமா என்ற ஐயம் வெகு நாட்களாக அபிதாவுக்கு இருந்து வந்தது.

எழுமலை காவல் நிலையம் அருகே கடந்த 38 ஆண்டுகளாக இயங்கி வரும் ரவி தட்டச்சு பயிற்சி பள்ளியை நாடுகிறார். அதன் உரிமையாளர் ரவியும் அபிதாவுக்கு ஊக்கமளிக்கிறார். தன்னம்பிக்கையும் மன உறுதியும் இருந்தால் போதும் சாதிக்க முடியும் என ரவி தந்த உத்வேகத்தோடு கடந்த ஆறு மாதங்களாக ஒரு கையால் மட்டும் தட்டச்சு பயிற்சி மேற்கொண்டு, இயல்பான மற்றவர்களோடு போட்டி போடுகிறார் அபிதா.

‘வழக்கமாக தட்டச்சு லோயர் கிரேடில் 10 நிமிடத்தில் அடிக்க வேண்டிய வேகத்தை 8ல் இருந்து 9 நிமிடங்களுக்குள் மிகக் குறைந்த பிழைகளோடு நான் முடித்து விடுவேன். ஒவ்வொரு நாளும் பயிற்சி பள்ளியில் நடைபெறும் வேகத்தேர்வில் நூற்றுக்கு 80 மதிப்பெண்கள் பெற்று வருகிறேன்’ என்கிறார் மிகுந்த உற்சாகத்துடன் அபிதா.

இந்த முறை டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்ற வைராக்கியத்தோடு தனது அம்மாவின் வீட்டில் இருந்து எழுமலை தட்டச்சு பள்ளிக்கு வருகை தந்து நாள்தோறும் கற்றுக் கொண்டிருக்கிறார். இதுகுறித்து அப்பள்ளியின் உரிமையாளர் ரவி கூறுகையில், ‘பல மாற்றுத்திறனாளிகளுக்கு அபிதா முன்னுதாரணமாக திகழ்கிறார். அவரது ஆர்வம் மற்றும் குடும்பச் சூழலை கணக்கில் கொண்டு அபிதா இலவசமாக இங்கே கற்றுக் கொள்ள அனுமதி அளித்துள்ளேன். தமிழ் ஆங்கிலத்தில் ஹையர் கிரேடு முடிக்கும் வரை அவருக்கு இங்கு பயிற்சிகள் இலவசமாக வழங்கப்படும்’ என்கிறார்.

ஒரு கையால் தட்டச்சு செய்யும் அபிதா போன்ற மாற்றுத்திறனாளிகளை, தமிழக அரசு ஊக்குவித்து முன்னுரிமை அளித்தால் மேலும் பல மாற்றத்திறனாளிகள் தட்டச்சு பயில வருகை தரக்கூடும் என நம்பிக்கை தெரிவிக்கிறார் ரவி. எழுமலை சுற்று வட்டாரப் பகுதிகளில், இது ஒன்றுதான் தட்டச்சு பயிற்சி பள்ளி என்பதால் பல ஆயிரக்கணக்கான கிராமத்து இளைஞர்களும் பெண்களும் இங்கே பயின்றுள்ளதை பெருமையுடன் பகிர்கிறார்.

தொடர்ந்து நம்மிடம் பேசிய அபிதா, ‘நம்மால் இதனை சாதிக்க முடியுமா என்ற தயக்கம் தொடக்கத்தில் இருந்தது. . என்னைப் போன்ற மாற்றுத் திறனாளிகளுக்கு என்னுடைய முயற்சி நிச்சயம் ஒரு ஊக்கமாக அமையும்’ என்கிறார் உறுதியாக.

தமிழ்நாடு தட்டச்சு மற்றும் கணினி பள்ளிகள் சங்க கூட்டமைப்பின் செயலாளர் கருணாகரன் கூறுகையில், ‘அண்மையில் மதுரை மாவட்டத்திலுள்ள பல்வேறு தட்டச்சு பள்ளிகளில் காது கேளாத, ஒரு கை உள்ள மாற்றுத்திறனாளிகள் பயின்று தேர்வு பெற்றிருக்கிறார்கள். என்னுடைய பள்ளியில் ஒரு கையில் மூன்று விரல்கள் மட்டுமே இருந்த மாற்றுத்திறனாளி பெண் கூட தட்டச்சு பயின்று தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். ஆகையால் ஊனம் ஒரு தடை இல்லை என்பது தான் இதன் செய்தி. தமிழக அரசும் வருகின்ற 2027ஆம் ஆண்டுடன் தட்டச்சு பள்ளிகளை கணினி பயிற்சி பள்ளிகளாக மற்றும் முயற்சியை கைவிட வேண்டும். கணினி பயிற்சி பள்ளிகள் ஒருபுறம் இயங்கினாலும் தட்டச்சு பள்ளிகளும் தொடர்ந்து இயங்குவதற்கு வழிவகை செய்ய வேண்டும். அப்போதுதான் மாற்றுத்திறனாளிகள் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் தங்களது தட்டச்சுத் திறமையை வளர்த்துக்கொள்ள இயலும். தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் கணினிகளை கையாள்வோர் கூட முறையான தட்டச்சு பயிற்சியை எடுத்துக் கொண்டால், அவர்களது வேலை மேலும் எளிதாகும். ஆகையால் தமிழக அரசு இந்த வேண்டுகோளுக்கு செவிசாய்க்க வேண்டும்’ என்கிறார்.

 நாம் எழுமலை சென்றிருந்த நேரம், மாதிரி தேர்வு நாள் என்பதால், நம்மிடம் பேசிக் கொண்டிருந்தபோதே, நேரம் பார்த்து, பயிற்சியாளர், ஸ்டார்ட் என‌ உத்தரவிட, அடுத்த நொடி அந்த வளாகமே அதிரும் வகையில் தட்டச்சு பொறிகளில் ஒவ்வொருவரின் விரல்களும் வேகம் எடுக்க ‘தடதடவென’ பறந்தது தேர்வு. அபிதா ஒற்றை கையில் நான்கு விரல்களில் தனக்கான சாதனையை ‘தட்டி’ தூக்கிக் கொண்டிருந்தார். சாதிப்பதற்கு எந்த ஊனமும் தடை இல்லை என்பது தான் இங்கு அபிதா சொல்லும் செய்தி.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!