தென்காசி மாவட்டம் சுரண்டை பகுதியில் இருந்து மதுரைக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். சுரண்டை வளர்ந்து வரும் முக்கிய வர்த்தக நகரமாகும். சுரண்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் வசிக்கும் பொது மக்கள், விவசாயிகள், வியாபாரிகள், மாணவ மாணவிகள், கல்வி, மருத்துவம், வணிகம் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக மதுரை சென்று வருகின்றனர். ஆனால் சுரண்டையில் இருந்து மதுரைக்கு போதிய நேரடி பஸ் வசதி இல்லை.
எனவே இப்பகுதி மக்கள் தென்காசி, திருநெல்வேலி, புளியங்குடி, சங்கரன் கோவில் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு சென்று பல பேருந்துகள் மாறி செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் நேரமும் பணமும் விரயமாவதுடன் சரியான நேரத்தில் சென்று பணிகளை முடித்து விட்டு திரும்ப முடிவதில்லை மேலும் பெண்கள், முதியோர், மற்றும் குடும்பமாக செல்பவர்கள் கடுமையான சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.



ஆகவே சுரண்டையில் இருந்து மதுரைக்கு நிரந்தரமாக கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஏற்கனவே கடந்த 38 வருடங்களுக்கு முன்பு சுரண்டையில் இருந்து மதுரைக்கு பாண்டியன் போக்குவரத்து கழகம் மூலம் 11 பஸ்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது சுரண்டையில் இருந்து மதுரைக்கு ராஜபாளையம் வழியாக இரண்டு பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகிறது. இந்த பஸ்கள் இயக்கம் போதுமானதாக இல்லை.
சுரண்டை பகுதி மக்கள் காலையில் மதுரை செல்லும் வகையில், சுரண்டையில் இருந்து காலை 6-00 மணிக்கு ராஜபாளையம் வழியாக மதுரைக்கும், தற்போது காலையில் இயக்கப்பட்டு வரும் பேருந்து காலை 11.00 மணிக்கும், மதியம் 3-30 மணிக்கும் மாலை 6-00 மணிக்கும் அதே போன்று மதுரையில் இருந்து தற்போது இயக்கப்பட்டு வரும் காலை 6-30 மணி பகல் 11-00 மணி மதியம் 2-00 மணி மற்றும் தங்கள் பணிகளை முடித்து விட்டு திரும்பும் வகையில் இரவு 6-00 மணி ஆகிய நேரங்களில் சுரண்டைக்கும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் திருநெல்வேலி சார்பில் நிரந்தரமாக கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் எனும் பொதுமக்கள் கோரிக்கை மீது சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதே போன்று சுரண்டையில் இருந்து சென்னை, ஈரோடு, கோவை, தேனி, போடி, மூணார், இராமநாதபுரம், தூத்துக்குடி, நாகர்கோவில், கொல்லம், திருவனந்தபுரம், பெங்களூர் போன்ற நீண்ட தூர பகுதிகளுக்கு பஸ்கள் இயக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் தொடர் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், சுரண்டையில் அரசு போக்குவரத்து கழக பணிமனை இல்லாததால் நீண்ட தூர பஸ்கள் இயக்கப்பட வில்லை. ஆகவே நடப்பு சட்டமன்ற கூட்டத் தொடரில் சுரண்டையில் அரசு பஸ் டெப்போ அமைக்க அரசு அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்




You must be logged in to post a comment.