தஞ்சாவூர் மாணவி மரண விவகாரத்தில் சிபிஐ விசாரணை அறிக்கை பாஜகவின் மதவாத அரசியலை அம்பலப்படுத்தி உள்ளதாகவும், தற்கொலையை மதக் கலவரமாக மாற்றத் தூண்டியவர்கள் மீதும், ஆதாரமற்ற பொய்ப் புகார்களைப் பரப்பி சமூகப் பதற்றத்தை உருவாக்கிய பாஜக தலைவர்கள் உள்ளிட்ட அனைவர் மீதும் தமிழக அரசு உடனடியாகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தஞ்சாவூர் மாணவி லாவண்யாவின் தற்கொலை வழக்கில் சிபிஐ சமர்ப்பித்துள்ள இறுதி அறிக்கை, பாஜக மற்றும் அதன் ஆதரவு அமைப்புகளால் தமிழகத்தில் திட்டமிட்டுப் பரப்பப்பட்ட மிகப்பெரிய மதவாதப் பொய்க்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இந்த மரணத்திற்கு ‘மதமாற்ற முயற்சி’ காரணம் அல்ல என்பதையும், மாணவி எந்த இடத்திலும் மதமாற்றம் குறித்து ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை என்பதையும் சிபிஐ ஆதாரங்களுடன் திட்ட வட்டமாகத் தெரிவித்துள்ளது. இதன் மூலம், மாணவியின் மரணத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேட முயன்ற பாஜகவின் மதவெறுப்பு அரசியல் உலகிற்கு அம்பலமாகியுள்ளது.
பாஜகவின் அப்போதைய மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர், எவ்வித அடிப்படை ஆதாரமுமின்றி இது ‘மதமாற்றத் தற்கொலை’ என்று முத்திரை குத்தி, தமிழகத்தின் அமைதிக்கும் மத நல்லிணக்கத்திற்கும் பெரும் சவாலை ஏற்படுத்தினர். மகளை இழந்து துயரத்தில் இருந்த பெற்றோரை ஆறுதல்படுத்தாமல், அவர்களைத் தவறாக வழிநடத்தி, மகளின் உடலைப் பெறவிடாமல் தடுத்து போராட்டக் களத்திற்கு இழுத்து வந்த பாஜக தலைவர்களின் செயல் அப்பட்டமான மனிதநேயமற்ற செயலாகும்.
தமிழகத்தில் பல தசாப்தங்களாகக் கல்விச் சேவை ஆற்றி வரும் சிறுபான்மை கிறிஸ்தவ கல்வி நிறுவனங்கள் மீது ‘மதமாற்றக் கூடம்’ என்ற அவதூறு முத்திரையைக் குத்த பாஜக மேற்கொண்ட சதித்திட்டம் இன்று தவிடு பொடியாகியுள்ளது. அந்தப் பள்ளியில் பயின்று வெளியேறிய முன்னாள் மாணவர்களின் சான்றிதழ்களை ஆய்வு செய்ததில், ஒருவர் கூட மதம் மாறவில்லை என்பது சிபிஐ விசாரணையில் உறுதியாகியுள்ளது. இதன் மூலம், கல்வி நிலையங்களுக்குள் மதவாத விஷத்தைப் பாய்ச்சி சமூகத்தைப் பிளவுபடுத்த நினைக்கும் பாஜகவின் போலி முகம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
எனவே, ஒரு தற்கொலையை மதக் கலவரமாக மாற்றத் தூண்டியவர்கள் மீதும், ஆதாரமற்ற பொய்ப் புகார்களைப் பரப்பி சமூகப் பதற்றத்தை உருவாக்கிய பாஜக தலைவர்கள் உள்ளிட்ட அனைவர் மீதும் தமிழக அரசு உடனடியாகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.




You must be logged in to post a comment.