ஸ்டெர்லைட் நரி தந்திரத்துடன் நுழைய முயற்சிக்கிறது! தமிழக அரசு அடியோடு அகற்ற வேண்டும்!! என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தமிழக அரசை கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை : தூத்துக்குடி மாநகர மக்கள் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக களத்திலும், நீதிமன்றங்களிலும், ஆட்சி, அதிகார முகமைகளிடமும் தாமிர உருக்காலை ஸ்டெர்லைட்டை அகற்றக் கோரி நீண்ட நெடிய போராட்டம் நடத்தி வந்தனர் என்பதை நாடறியும்.
நச்சாலைக்கு எதிரான மக்களின் அறப் போராட்டத்தின் போது மக்களின் மீதான உச்சக்கட்ட தாக்குதலாக 2018 மே 22 அன்று நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச்சூடு 15 உயிர்களைக் கொடூரமாக காவு கொண்டது. 2018 மே 28 இல் அரசாணை மூலம் நச்சாலை இழுத்து மூடி சீல் வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 2020 ஆகஸ்ட் 18 இல் உயர் நீதிமன்றத்தில் நீதியரசர்கள் மாண்பமை சிவஞானம், பவானி சுப்பராயன் அமர்வில், “சுற்றுச்சூழல் வளர்ச்சியா, பொருளாதார வளர்ச்சியா என்கிற முரண்நிலை ஏற்படும் பொழுது, சுற்றுச் சூழல் பாதுகாப்புக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும்” என்று தீர்க்கமான தீர்ப்பினை வழங்கினார்கள்.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் உச்ச நீதிமன்றத்தை அணுகிய பொழுது, “உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மறுபரிசீலனை செய்வதற்கான முகாந்திரம் எதுவும் இல்லை” என தெளிவுபடுத்திய உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்தது. இந்த இரு நீதிமன்ற தீர்ப்புகளும் வழங்கப்படுவதற்கு முன்பு, 2013 மே 23 இல் ஸ்டெர்லைட் ஆலையில் ஏற்பட்ட கசிவினால் நச்சுக்காற்று மாநகரின் பல்வேறு பகுதிகளுக்குப் பரவி, பெருமளவில் மக்கள் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளுக்கு ஓடிய சம்பவத்தில் உச்ச நீதிமன்றம் மேற்படி ஆலை நிர்வாகத்துக்கு ரூபாய் 100 கோடி தண்டம் விதித்தது.
மேலும், 2021 கொரோனா பெருந்தொற்று நெருக்கடி காலத்தில் மருத்துவமனைகளுக்கு உயிர்வளி வினியோகம் பற்றாக்குறை காரணமாக நாடு நெருக்கடியைச் சந்தித்தது. அப்போது ஸ்டெர்லைட் ஆலை அரசாணையினால் மூடப்பட்டிருந்த நிலையில், “நாங்கள் நாள் ஒன்றுக்கு 1050 மெட்ரிக் டன் அளவு உயிர்வளி உற்பத்தி செய்து தருகிறோம்” என்று ஆலை நிர்வாகம் பொய்யாக உத்தரவாதம் அளித்தது. அவர்களின் இந்த முன்னெடுப்பில் உள்நோக்கம் இருப்பதை மக்கள் புரிந்திருந்தனர். இருப்பினும், நாட்டின் நலன் கருதி மக்கள் ஒத்துழைத்தனர். ஆனால் மக்கள் சந்தேகித்தது போலவே, ஆலையின் அன்றாட உயிர்வளி உற்பத்தி சராசரியாக நாள் ஒன்றுக்கு 90 மெட்ரிக் டன்னை தாண்டவில்லை.
ஸ்டெர்லைட்டின் உண்மையான நோக்கம், ஏதோ ஒரு காரணத்தைக் கூறி ஆலையில் இருக்கும் ஆதாரங்களை அழிப்பது தான் என்பதை புரிந்து கொள்வதற்கு மக்களுக்கு பெரிய அறிவியல் ஞானம் தேவைப்படவில்லை. அனைவரும் அறிந்த இந்த தகவல்களைத் தான் மக்கள் மீண்டும் வலியுறுத்துகிறார்கள் என்றால் அதற்கு காரணம் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்தின் இப்போதைய சூழ்ச்சியான நகர்வுகள்.
இத்தனை விபரீதங்களை விளைவித்த பிறகும் இத்தனை உயிரிழப்புக்களுக்கு காரணமாக இருந்த பிறகும், இத்தனை சட்ட மீறல்கள் புரிந்த பின்பும் ஆலை கைநழுவிப் போய் விடக்கூடாது என்பதற்காக மனசாட்சியின் உறுத்தலே இல்லாமல் ‘கிரீன் காப்பர்’ என்று சொல்லிக் கொண்டு தூத்துக்குடி பகுதியைக் கைப்பற்றவும், நாசப்படுத்தவும் ஸ்டெர்லைட் நிர்வாகம் முனைந்து வருகின்றது. அவர்கள் ஏற்கனவே செய்து கொண்டு இருந்த தொழிலை பெயர் மாற்றி மீண்டும் நிலை நிறுத்தப் பார்க்கின்றார்கள்.
‘கிரீன் காப்பர்’ என்று பசுமைப் பூச்சு பூசப்படுகிறது. ஆலை நிர்வாகம் பழைய கள்ளைப் புதிய மொந்தையில் பரிமாற முயல்வதை தூத்துக்குடி வட்டார மக்கள் தெளிவாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள். வேதாந்தா நிறுவனம் தனது சூழ்ச்சிகளை நிறுத்திக் கொள்ளாது என்பதை தமிழகத்தின் 30 ஆண்டு கால நிருபணம் மட்டுமல்ல, ஒடிசா போன்ற மாநிலங்களில் வேதாந்தா நிறுவத்தின் அடிச்சுவடும் கூட இல்லை. இவை மட்டுமல்ல, சாம்பியா போன்ற நாடுகளில் இந்த நிர்வாகத்தின் ஆலைக்கு எதிராக மக்கள் மேற்கொண்ட எழுச்சிமிகு நடவடிக்கைகளும் உதாரணமாகும்.
இப்பேர்ப்பட்ட இந்த ஆலைக்கு சிறிய ஒரு நுழைவாயில் கிடைத்து விட்டாலும் கூட, கண்ணுக்குள் தெறித்து விழுந்த நெருப்புப் பொறியாக தூத்துக்குடி பகுதியையே குருடாக்கி விடும். நச்சாலையின் புதிய பசுமை காப்பர் என்பது அரிதாரம் பூசிய அவதாரம் என்பதே மக்கள் பார்வை. ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் அறிவியலாளர்கள் இருவரின் துணையோடு ஒரு அறிக்கையை தயாரித்து பசுமை மீள் தொடக்கம் என்ற அடிப்படையிலே ஆலை மீண்டும் இயங்க அனுமதிக்க வேண்டும் என்று முதல்வரை அணுகி, உயர் நீதிமன்றத்திற்கும் இந்த அறிக்கையைக் கொண்டு சென்றிருக்கின்றது.
ஸ்டெர்லைட் எனும் நச்சு பூதம் வேறு வடிவத்தில் தூத்துக்குடியில் நரி தந்திரத்துடன் நுழைய முயற்சிக்கிறது. இந்த ஆலையை அடியோடு அகற்றுமாறு தமிழக அரசை வேண்டுகிறேன்.
வைகோ, பொதுச் செயலாளர், மறுமலர்ச்சி தி.மு.க., ‘தாயகம்’ சென்னை – 8




You must be logged in to post a comment.