ஜனநாயகத் திருவிழா-2026
( தோரணம் -11 )
கிணற்றுத் தவளையும்! பருந்துப் பார்வையும்!
தமிழ்நாட்டு வளர்ச்சியின் குறுக்கு வெட்டு தோற்றம் பற்றிய பேச்சுக்கள் மெல்ல, மெல்ல மேலெழுந்து வருகின்றன. இது போன்ற ஆக்கப்பூர்வமான பேச்சுக்களை நாம் எப்படி எதிர் கொள்கிறோம் என்பதற்கு இரண்டு வகையான மாதிரிகளை இங்கு காண்போம்:
சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியின் தரவுகளை ஆய்வு செய்து வரும் பிரபல தொழில் அதிபர் சுரேஷ் சம்பந்தம் நடத்திய ஒரு ஊடக கலந்துரையாடல் நிகழ்ச்சியில்,…..
கடந்த 60 ஆண்டு கால தமிழ்நாட்டின் போக்குகளை திராவிட இயக்க ஆட்சியாளர்கள் எப்படி எல்லாம் படிப்படியாக வார்த்தெடுத்தார்கள்? அதற்கான செயல் திடங்களை எப்படி வகுத்தார்கள் ? அதன் நேரடியான பிரதிபலிப்புகள் என்ன ? என்பதை மிகத் தெளிவாக விளக்கிப் பேசி அந்த நிகழ்ச்சியை நெறிப்படுத்தி நடத்தினார். அதற்கான “இன்ட்ராக்ட்”-டின் போது பலரும் தங்களின் கருத்துக்களை பதிவு செய்தார்கள். அப்போது, நமது மேற்கு மாவட்டத்தை சேர்ந்த நடுத்தர வயதுடைய படித்த நடுத்தர வர்க்கப் பெண்மணி ஒருவரும் பதில் அளித்து பேசினார்…
தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளையும், கல்லூரிகளையும் பல்வேறு தனியார் முதலாளிகள் பெரும் முதலீடுகளை போட்டு உருவாக்கினார்கள். எங்களுடைய உழைப்பால் சேர்த்து வைத்த சொத்துக்களை விற்று, அந்த கல்வி நிலையங்கள் சென்று நாங்கள் பட்டங்கள் பெற்றோம். மருத்துவம் போன்ற பல்வேறு துறைகளில் ஆளுமைகளாக மாறினோம். இதற்கு எங்களுடைய கடின உழைப்பும், மூலதனமும் மட்டுமே காரணம். இதில் ஆட்சியாளர்களுக்கு எந்தப் பங்கும் கிடையாது – எனத் தங்களின் குடிப் பெருமைகளை மட்டுமே கண்ணை மூடிக் கொண்டு பேசினார்.
அப்போது, அந்த நிகழ்ச்சியின் நெறியாளர் குறிக்கிட்டு….
“நமது மாநிலத்தில் அனைவருக்கும் கல்வி என்ற சமூக நீதியின் அடிப்படையிலேயே சட்டங்கள் இயற்றப்பட்டன. குறிப்பாக, இருமொழிக் கொள்கை என்ற பயிற்று மொழிச் சட்டம். அந்த சட்டங்களின் அடிப்படையிலேயே இங்கு கல்விக் கட்டமைப்புகள் உருவாகியுள்ளன. இதில் ஆரம்பக் கல்வி முதல் உயர் கல்வி வரையான கல்வி நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும், குக்கிராமங்கள் முதல் பெரிய நகரங்கள் வரைக்கும் தொடர் சங்கலி போல கல்வி நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. எனவே, நாம் யாராக இருந்தாலும் சரியே, நமது கைகளுக்கு எட்டும் தொலைவில் கல்வி கிடைத்து விட்டது. அரசின் திட்டங்களும், சட்டங்களும் இல்லாமல் இவை எல்லாம் சாத்தியமே இல்லை”- என பொறுமையோடு விளக்கிக் கூறிய போதும், அவரின் எந்தவொரு விளக்கத்தையும் அப் பெண்மணி ஏற்றுக் கொள்ளவில்லை. ஒரு கட்டத்திற்கு மேல், நெறியாளரை அரசியல் சார்பு உடையவர் என திட்டவட்டமாக அறிவித்து விட்டார்.
அடுத்து இரண்டவது:
அதே மேற்கு மாவட்டம். கரூரை அடுத்த பள்ளபட்டி நகரைச் சேர்ந்த முகமது மஃபாஸ் என்ற பொறியியல் கல்லூரி மாணவர், தனது கணினித் துறையில் நடைபெற்ற “புதிய மென் பொருள் சர்வதேச வரைவுப் போட்டி”- யில் கலந்து கொண்டு அதில் தங்கப் பதக்கம் பெற்று வெற்றியோடு திரும்பிய போது….
மாநில அளவில், தேசிய அளவில், ஆசிய அளவில் என ஒவ்வொரு கட்டமாக உள்ளே நுழைந்து வெற்றியோடு வெளியே வரும் போது தான் தெரிந்தது….
“இந்த வெற்றிக்கு என்னுடைய திறமையும், அறிவும் மட்டுமே காரணம் அல்ல. அதற்கான பயிற்சிகளையும், வாய்ப்புகளையும் உருவாக்கிக் கொடுத்த தமிழ்நாடு அரசின் கல்விக் கட்டமைப்பு தான் அடிப்படைக் காரணம். அந்த சுவர் இல்லாமல் இந்த சித்திரம் சாத்தியமில்லை”- என்பதை….
// நான் வெற்றி அடைந்தேன் என்பதை விட, நாம் வெற்றி அடைந்தோம் // என ஒற்றை வாசகத்தில் “பளிச்”-என்று கூறினார். காரணம், அவர் கடந்து வந்த ஒவ்வொரு கட்டத்திலும் தமிழ்நாட்டு உள் கட்டமைப்பை பிற மாநில கட்டமைப்புகளோடும், பிற நாட்டு கட்டமைப்புகளோடும் ஒப்பிட்டுப் பார்க்கும் அரிய வாய்ப்பு அந்த மாணவருக்கு கிடைத்துள்ளது. இப்படி, சர்வதேச அளவு உயரத்திற்குச் சென்று ஒரு பருந்துப் பார்வையில் பார்க்கும் போது மட்டும் தான் நமது தமிழ் நாட்டின் கல்விக் கட்டமைப்பு எப்படி உள்ளது ? என்ற உண்மைகள் நமக்கு விளங்குகிறது. இதைத்தான் அந்த இளம் மாணவர் பெருந்தன்மையோடு இந்த இடத்தில் பதிவு செய்கிறார்.
தமிழ் நாட்டின் ஒரு பகுதியைச் சேர்ந்த நடுத்தர வயது படித்த பெண்மணியின் பார்வையை தலை கீழாகப் புரட்டிப் போடும் வகையில்…. இன்றைய ZenC தலைமுறை எழுந்து வந்து தக்க பதிலடி தந்துள்ளது.
தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்பு மட்டுமல்ல, தொழில் கட்டமைப்பு, மனித வளக் கட்டமைப்பு, சுகாதாரக் கட்டமைப்பு, பொது போக்குவரத்து கட்டமைப்பு, அரசின் உயர் அதிகார அடுக்குகளின் முழுமையான ஒத்துழைப்பு, அரசின் பொருத்தமான தொழிற் கொள்கை முடிவுகள் மற்றும் சட்டங்கள், அதற்கான நிதி ஒதுக்கீடுகள் – என நம்முடைய தமிழ் நாட்டின் Eco- system பெரிய அளவுக்கு விரிந்து கொண்டே செல்கிறது. ஒரு மாநில அரசின் இத்தனை பெரிய தொடர் இயக்கங்களை எல்லாம், இங்கேயே படித்து, இங்கே வளர்ந்து, இங்கே ஆளாகி நின்று, ஆனால் பரந்து பட்ட பார்வைகளற்ற கிணற்றுத் தவளைகளால் அத்தனை எளிதில் புரிந்து கொள்ள முடியாது.
பருந்துகளும், ராஜாளிகளுமே நமது தமிழ் நாட்டின் திராவிட மாடல் வளர்ச்சியை உள்ளபடியே உணர்ந்து மகிழும் உயரிய பார்வைகளை கண்டடைகின்றன.
எனில்….
நாம் யார் ?
உள்ளுக்குள்ளேயே உழன்று கொண்டிருக்கும் கிணற்றுத் தவளையா ?
அல்லது….
உயர,உயரப் பறந்து கொண்டிருக்கும் உன்னதங்களை உணரும் பருந்துப் பறவையா ?
ஷரீப். அஸ்கர் அலி, வண்ணப்பலகை




You must be logged in to post a comment.