ஜனநாயகத் திருவிழா -2026
( தோரணம் -10 )
அடுக்கடுக்கான வளர்ச்சி
அனைத்து அடுக்குகளுக்குமான வளர்ச்சி!
ஒரு மக்கள் கூட்டத்தின் தேவைகளை பூர்த்தி செய்ய புதிய தொழில்கள் உருவாகின்றன. புதிய தொழில்களானது உற்பத்தி, வேலைவாய்ப்பு, வணிகம்- என அதிலிருந்து மூன்று புதிய அம்சங்களை உருவாக்குகின்றன.
இதில் வணிகம் சரக்கு போக்குவரத்தை உருவாக்குகிறது. வேலை வாய்ப்பிற்கு மனித வளம் தேவைப்படுகிறது. மனித வளத்தை உருவாக்க கல்வி தேவைப்படுகிறது. அதே மனித வளத்தை பராமரிக்க சுகாதாரம் தேவைப்படுகிறது. மனித வளம், கல்வி, சுகாதாரம் என இந்த மூன்றும் தடையில்லாமல் தொழிற்படுவதற்கு சாலைப் போக்குவரத்து தேவைப்படுகிறது.
போலவே, ஒரு துறையை இன்னொரு துறை உருவாகிறது. அந்த இன்னொரு துறையை சார்ந்து பல துறைகள் உருவாகின்றன.
இந்த அனைத்திற்கும் அடிப்படையாக அரசின் தொழிற் கொள்கைகளும், அரசு அல்லது தனியார் முதலீடுகளும், புதிய தொழில் நுட்பங்களும் தேவைப்படுகின்றன. இதனைத் தொடர்ந்து வணிக மேலாண்மை, வங்கிச் செயல்பாடுகள், தகவல் தொழில்நுட்பம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, புதிய கட்டுமானங்கள், என மேலும் பல வேலை வாய்ப்புகள் உருவாகின்றன. புதிய, புதிய சந்தைகள் உருவாகின்றன. சந்தைகள் பரவலாகின்றன. இதனால், கடைக் கோடி கிராமங்கள் வரை பலன் அடைகின்றது. இதற்கு இணையாக புதிய கட்டமைப்புகள் உருவாகி, மாநிலம் எங்கும் நகரமயமாதல் விரைவடைகிறது. வணிகத்தின் எல்லைகளும் விரிவடைகிறது.
இது ஒரு வகை இயங்கியல் அடுக்கு
அப்படியே வாருங்கள்;இன்னொரு வகை அடுக்கையும் பார்ப்போம்.
“எல்லார்க்கும் எல்லாம்”- என்ற சமூக நீதிச் சூழலை இந்த தமிழ் மண்ணில் உருவாக்க கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக பல்வேறு முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.
இன்னும் சொல்வதென்றால், “வாடிய பயிரைக் கண்ட பொழுதெல்லாம் வாடி நின்றேன்”- என இருநூறு ஆண்டுகளுக்கு முன்பே அந்த சமத்துவப் பணி தொடங்கி விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்,
ஆம் நண்பர்களே!
நம் தமிழ் மக்களிடையே மண்டிக் கிடக்கும் அறியாமை இருள் அகற்ற அருட் பெரும் ஜோதியாய் வள்ளலார் தோன்றி விட்டார்.
அவருக்குப் பின் வந்த தாத்தா இரட்டை மலை சீனிவாசன், பொதுவுடமையாளர் சிங்கார வேலர், தமிழ் தென்றல் திரு.வி.க, கப்பலோட்டிய வ.ஊ.சி என சமூக சீர்திருத்தவாதிகள் வரிசையாகத் தோன்றினார்கள். இந்தப் பெரியோர்களின் சீர் திருத்த எழுத்துக்களை, பேச்சுக்களை, சமத்துவக் கருத்துக்களை நம்ம ஈரோட்டுப் பெரியார் மக்கள் இயக்கமாக மாற்றினார். அத்துடன் சுயமரியாதை இயக்கத்தின் வழியே மூட நம்பிக்கைகளை எதிர்த்து நெஞ்சுரத்துடன் போராடினார். சனாதனக் கருத்துக்களை நேரடியாகச் சாடினார்.
இப்படி பல ஆண்டுகள், பல அறிஞர்கள் விடாமல் பாடுபட்டு இந்த மண்ணில் கனன்று கொண்டிருந்த தமிழ் அற நெறிகளை மீட்டெடுத்து மக்களிடையே பரப்பினார்கள். அத்துடன், தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு, தொன்மம் என நம்முடைய பாரம்பரிய அம்சங்களும் மீட்டெடுக்கப்பட்டது.
இதனால், இந்திய அளவில் உள்ள பிற மாநிலங்களில் இருந்து நமது தமிழ் மண் முற்றிலும் மேம்பட்டுக் காணப்பட்டது. குறிப்பாக, சாதியப் பாகுபாடுகளை விட்டு மக்கள் வெளியேறத் துணிந்தனர். அன்றைய நீதிக் கட்சியும் அனைத்து தரப்பு மக்களுக்கும் அடிப்படைக் கல்வியை இலவசமாக வழங்கியது. இதனால், சமூகத்தின் அடித் தட்டு மக்கள் வரைக்கும் கல்வியின் வாசனை வீசியது. மக்களிடையே, ஏற்ற – தாழ்வுகள் குறைந்த இந்த மேம்பட்ட சூழலில் ஆங்கிலேய ஆட்சியாளர்களால் அறிமுகம் செய்யப்பட்ட ஆங்கில வழிக் கல்வியானது இந்த தமிழ் சமூகத்திற்கு உலகத்தின் சாளரத்தை திறந்து வைத்தது.
இப்படி தன்னை அறிந்து கொள்ள தாய் மொழித் தமிழையும், உலகத்தை அறிந்து கொள்ள அந்நிய மொழியான ஆங்கிலத்தையும் – கற்றுத் தேர்ந்தனர். இந்த இரு மொழிகளின் துணையோடு தனது கல்வி மற்றும் மனித வளத்தை மேலும் மேம்படுத்திக் கொண்டனர்.
இது இன்னொரு வகை இயங்கியல் அடுக்கு!
இந்த இயைந்த சூழலில் உருவான கர்ம வீரர் காமராஜர், அவருக்குப் பின் வந்த அறிஞர் அண்ணா போன்றவர்கள் தமிழர்களின் ஒப்பற்ற தலைவர்களாக உருவெடுத்தார்கள். இவர்களின் சொல், செயல், சிந்தனை யாவும் தமிழ் மக்களின் முன்னேற்றத்தை மட்டுமே குறிக் கோளாக கொண்டிருந்தது. இந்த இரு பெரும் தலைவர்களையும் உள் வாங்கி புரிந்து கொள்ளும் அளவிற்கு தமிழ் சமூகம் பக்குவப்பட்டு இருந்தது.
நன்கு புடம் போடப்பட்டு எந்த வடிவத்திற்க்கும் தன்னை வளைத்துக் கொண்டு முன்னேறத் தயார் நிலையில் நின்றிருந்த இந்த தமிழ் மண்ணில் காமராஜர் அதிகாரத்திற்க்கு வந்தார். வந்த கையோடு பெரியாரின் தூண்டுதலால் ஆரம்பப் பள்ளிகளை தொடங்கினார். தொழில் வேளாண்மை, நீர் பாசனம் போன்ற துறைகளில் புதிய கட்டமைப்புகளை உருவாக்கினார். அவருக்குப் பின் ஆட்சிக்கு வந்த அண்ணா தன்னுடைய கூர்மையான சிந்தனையால் தமிழ்நாட்டின் போக்குகளை அப்படியே புரட்டிப் போட்டு, அதனை நிலை நிறுத்தினார்,
மேலே கூறப்பட்ட இரு வகையான இயங்கியல் போக்குகளையும் அறிஞர் அண்ணா தன்னளவில் உணர்ந்திருந்தார். எனவே, இந்த இரண்டையும் பின்னிப் பிணைத்து புதியதொரு தமிழ்நாட்டை உருவாக்க தீர்க்கமான திட்டம் ஒன்றை வரைந்தார்.
வள்ளலாரில் தொடங்கிய நமது நவீன தமிழ் சிந்தனை மரபு சுமார் நூறு ஆண்டுகளைக் கடந்து நம் கைகளுக்கு வந்துள்ளது. இந்த இடைப்பட்ட காலத்தில் நமது தமிழ் மக்கள் பகுத்தறிவும், அறிவியல் சிந்தனையும், தமிழ் அற உணர்வும் பெற்று இந்தியாவின் தனித்துவமிக்க முன்னோடி சமூகமாக திகழ்ந்து வருகிறது. இதற்கு நம்மிடையே நிலவி வரும் தமிழ் மயச் சூழல் மட்டுமே காரணம். ஆட்சி- அதிகாரம், கல்வி, பண்பாட்டு வெளி என எங்கும் தமிழ் மட்டுமே புழங்கு மொழியாக இருந்து வருகிறது. மேலும், நமது தமிழ் சமூகத்தின் அசல் பலம் தமிழ் மயச் சூழலால் மட்டுமே உருவாகிறது. எனவே, எந்த நிலையிலும் தமிழ் மொழியை நாம் விட்டுக் கொடுத்து விடக் கூடாது. மத்திய அரசின் அதிகாரத்திற்கு அஞ்சி அந்த கரடு- முரடான இந்தி மொழியை ஏற்றுக் கொள்ளவும் கூடாது. அப்போது தான், நவீன அறிவியலால் முன்னேறிக் கொண்டிருக்கும் மேற்கத்திய நாடுகளுக்கு இணையாக நம்மாலும் வளர முடியும். அதற்கான அத்தனை தகுதிகளும், தகவமைப்புகளும் நம்மிடம் உள்ளது. எனவே, தமிழ் மற்றும் ஆங்கிலம் என்ற இரு மொழிகளையும் ஆட்சி மொழியாகவும், பயிற்று மொழியாகவும் கடைபிடிக்க 1968- ஆம் ஆண்டு சட்டம் இயற்றினார். இந்த இரு மொழிக் கொள்கை சட்டம் தான் கடந்த அறுபது ஆண்டு கால தொழில் துறை வளர்ச்சிக்கும், சமூக வளர்ச்சிக்கும் அடிப்படை அச்சாரமாக திகழ்ந்து வருகிறது.
இனி வரும் எதிர் காலத்திற்க்கும் இதுவே அச்சாரமாகத் தொடரும்…
ஷரீப். அஸ்கர் அலி,
வண்ணப்பலகை




You must be logged in to post a comment.