17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » ஜனநாயகத் திருவிழா – 2026

ஜனநாயகத் திருவிழா – 2026

எழுதியவர்: Askar February 16, 2026, 8:49 am

ஜனநாயகத் திருவிழா – 2026

( தோரணம். -09 )

இரு மொழிக் கொள்கை: ஒருங்கிணைந்த வளர்ச்சியின் தொடக்கப் புள்ளி…

ஒரு ஊர் திருவிழாவில் இளைஞர்களுக்கான ஓட்டப் பந்தய நிகழ்ச்சி் நடக்கிறது. ஆட்ட விதிகளின் படி ஓட்டப் பந்தயம் நடக்கும். தகுதி உள்ள வெளியூர் இளைஞர்களும் பந்தயத்தில் கலந்து கொள்ளலாம். ஆனால், முதல் பரிசு எங்கள் ஊர் இளைஞருக்குத்தான்….

இப்படி ஒரு ஓட்டப் பந்தயம் நடக்கிறது என்றால், யாராவது அதில் கலந்து கொள்ள முன் வருவார்களா ? கண்டிப்பாக, யாரும் வர மாட்டார்கள்.

அவ்வளவு ஏன் ? அந்த உள்ளூர் இளைஞருக்குத்தான் பரிசு கிடைக்கும் என வெளிப்படையாக அறிவித்த பின்பு, பந்தயத்தை வேடிக்கை பார்க்க கூட யாரும் வர மாட்டார்கள். பதிலுக்கு, அந்த ஊர்க்காரன் பரிசை அந்த ஊர்க்காரனே வைத்துக் கொள்ளட்டும் என காரி துப்பி விட்டு போய் கொண்டே இருப்பார்கள்.

அப்படித்தான் இந்த இந்தி் மொழித் திணிப்பும்.

நமது இந்தியாவில் நீங்கள் எத்தனை மொழி வேண்டுமாகிலும் பேசிக் கொள்ளுங்கள். ஆனால், டில்லி என்ற அதிகார மையம், எந்த மொழியில் சிந்திக்கிறதோ ! அந்த மொழியைத் தான் நீங்கள் தேசிய மொழியாக ஏற்றுக் கொள்ள வேண்டும். எந்த மொழியில் செயல்படுகிறதோ அந்த மொழியைத்தான் நீங்கள் ஆட்சி மொழியாக ஏற்றுக் கொள்ள வேண்டும். அது தான் உங்களுக்கும் நல்லது. எங்களுக்கும் நல்லது. அவ்வளவு ஏன் ? அப்படி ஏற்பது தான் இந்த நாட்டிற்கே நல்லது. இப்படி, கடந்த 75- ஆண்டுகளாக அந்த டில்லிப் பட்டிணத்து ஆட்சி – அதிகார வர்க்கம் கொக்கரித்துக் கொண்டிருக்கிறது.

ஆனால், தமிழ்நாடு என்ற ஒரு மாநிலம் மட்டும் அதனை ஏற்றுக் கொள்ள மறுத்து அதனை தொடர்ந்து எதிர்த்தும் வருகிறது. சுய மரியாதை உள்ள எவனும் இந்த நீசத்தனத்தை எதிர்க்கவே செய்வான். எனில், பிற மாநிலங்களுக்கு சுயமரியாதை இல்லையா? என்றால். இருக்கிறது. அவர்களுக்கும் சுயமரியாதை இருக்கிறது. ஆனால், நமக்கு ஒரு திராவிட சித்தாந்தம் கிடைத்தது போல, அதனை அரசியல் மயப்படுத்தும் வலிமையான சித்தாந்தம் அவர்களுக்கு அமையவில்லை.

நூறு ஆண்டுகளுக்கு முன்பே நம்மிடம் ஒரு வலிமையான சித்தாந்தம் இருந்தது. அதற்குப் பெயர் “பிராமணர் அல்லாதார் இயக்கம்”. அன்றைய தேதியில், பிராமண சமூகம் மட்டுமே படித்து பட்டம், பதவிகளில் இருந்த தமிழ் நாட்டுச் சூழலில், சென்னை திருவல்லிக்கேணி- யில் பிராமணர் அல்லாத மாணவர்கள் தங்கிப் படிக்கும் விடுதி தொடங்கப்பட்டது. , ஓரிரு ஆண்டுகளில் அதுவே ஒரு மக்கள் இயக்கமாக மாறியது. பின் அதிலிருந்து தோன்றிய “பிராமணர் அல்லாதோர்”- என்ற நீதிக் கட்சி தோன்றியது. அக் கட்சி 1921- ஆம் ஆண்டு தேர்தலில் வென்று ஆட்சியைப் பிடித்தது.

ஆட்சிக்கு வந்த கையோடு அனைவருக்கும் கல்வி என்ற முழக்கத்துடன் சமூக நீதியை நிலை நாட்டியதால், அதுவரை பிராமண ஆதிக்கத்தில் இருந்த கல்வித் துறை அனைத்து தரப்பு மக்களுக்கும் பொதுவானது. மேலும், ஆங்கில மருத்துவ பட்டப் படிப்பிற்கு, சமஸ்கிருத மொழியில் வைக்கப்பட்ட நுழைவுத் தேர்வை ரத்து செய்தது. அந்த நீசத்தனமான சட்டத்தை தூக்கி எறிந்த பிறகு, அனைத்து சமூகத்தாரும் மருத்துவம் படிக்கும் நிலை உருவானது. இதனை அன்றைய பிரிட்டிஷ் இந்திய அரசாங்கம் வரவேற்றது.

இது போன்ற முன் கதைச் சுருக்கம் உள்ள அன்றைய சென்னை மாகாணம் 1938- ஆம் ஆண்டிலும், 1964-65- ஆம் ஆண்டுகளிலும் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை வீரியமாக நடத்தியது. காரணம், அன்றைய நீதிக் கட்சி ஏற்படுத்தி வைத்துள்ள சமூக நீதிச் சூழல், இந்த இந்தி மொழித் திணிப்பால் முற்றிலும் சிதைந்து விடும் என அஞ்சினார்கள். எனவே, அதற்கு எதிராக அன்றைய சென்னை மாகாணம் போராடத் தொடங்கியது.

ஆம் நண்பர்களே!

பிறப்பின் அடிப்படையில் பிராமணனாய் பிறந்தவர்கள் மட்டுமே கல்வி கற்க முடியும். மருத்துவம் பயில முடியும். அரசு பதவிகளை அலங்கரிக்க முடியும் -என்ற நிலை இருந்தது…. போல.

வடக்கில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இந்தி மொழியை, யாரெல்லாம் பள்ளிப் படிப்பில் படித்து தேர்ச்சி பெற்று வருகிறார்களோ ! அவர்கள் மட்டுமே மேல் படிப்புகளுக்கு செல்ல முடியும் என்ற சூழலை இங்கு உருவாக்க முனைந்தார்கள். இதனால், ஆங்கிலம், கணிதம், அறிவியல் , வரலாறு, பொருளியல் என நன்கு படித்து, அதே வேளையில் இந்தி மொழிப் பாடத்தில் தேர்ச்சி பெறாத பிற மாணவர்கள் பட்டப் படிப்பில் இருந்து விரட்டி அடிக்கப்படும் நவீன சனாதன சூழல் உருவாகி இருக்கும்.

இந்த இடத்தில் நன்றாக கவனியுங்கள்…

பள்ளியில் சொல்லித் தரும் ஆங்கிலம், கணிதம், அறிவியல், வரலாறு, பொருளியல், கணக்குப் பதிவியல் என எல்லா பாடங்களும் நம்முடைய அன்றாட வாழ்க்கையில் கண்டிப்பாக எதிர்ப்படும். கணிதம் எதிர்படும். அறிவியல் எதிர்படும். ஆனால், நமக்கு கற்றுத் தரப்பட்ட இந்தி மொழி எந்த வகையிலும் நமக்கு பயன் அளிக்காது. நாம் வடக்கே சென்றால் அப்போது பயன் தரும். ஆனால், அப்படி வடக்கே செல்பவர்கள் ஆயிரத்தில் ஒருவர் தான். மீதமுள்ள தொள்ளாயிரத்து சொச்சம் தமிழர்களும் இங்கேயே படித்து, இங்கேயே பட்டம் பெற்று, இங்கேயே பதவியோ அல்லது தொழில் செய்ய வாய்ப்பு பெற்றவர்களாகவே இருப்பார்கள். இது இப்படி இருக்கும் போது, பின் எதற்கு பள்ளிப் பாடத்தில் இந்தி மொழிப் பாடத்தை திணிக்கிறார்கள் ? நாம் ஏன் “எக்ஸ்டரா லக்கேஜ்”- ஆக இன்னொரு மூன்றாவது மொழியாக இந்தியை கற்க வேண்டும் ? என நமது முன்னோர்கள் அன்றைக்கு சமயோசிதமாக முடிவு எடுத்துள்ளார்கள். அதன்படி, அதிகாரத்தின் வழியே இங்கு உள்ளே நுழைய முற்பட்ட இந்தி மொழியை விரட்டி அடித்துள்ளார்கள். நமது சுய மரியாதையை மீட்டெடுத்துள்ளார்கள். அதற்கு திராவிட சித்தாந்தம் பின் புலமாக அமைந்தது.

அதன் பெயர் தான் “இரு மொழிக் கொள்கை”. தமிழ் மற்றும் ஆங்கிலம் – என இந்த இரண்டு மொழிகளை மட்டும் தமிழ் நாட்டின் பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என அறிஞர் அண்ணாவின் அமைச்சரவை சட்டம் இயற்றியது.

அன்றைய நீதிக் கட்சி சமஸ்கிருத மொழியை விரட்டி அடித்தது போல, இன்றைய (1968) தி.மு.க. அரசு தனது இரு மொழிக் கொள்கை மூலம் இந்தி மொழியை விரட்டி அடித்தது. இதனால் நமது தமிழ் மண்ணின் சுய அடையாளங்கள் மீட்கப்பட்டன. நமது மரபான சிந்தனைகளும், அறிவுகளும் பாழ் பட்டுப் போகாமல் பாதுக்காப்பட்டன. பிற் காலத்தில் நடைபெற்ற தமிழ் நாட்டின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கு ஏற்ற வகையில் இந்த தமிழ் மண் ஒரே இலக்கை நோக்கி ஓர்-முகப்படுத்தப்பட்டது. அங்கே இரு மொழிக் கொள்கை என்ற ஏர் கலப்பை ஆழமாக உழப்பட்டு அமோக விளைச்சலுக்கு ஏற்ற வகையில் இந்த தமிழ் மண் செம்மைப் படுத்தப்பட்டது.

இந்த ஒரு நூற்றாண்டு கால சமூக நீதி வெள்ளாமை இன்றைக்கு சர்வதேச வளர்ச்சியை நோக்கி செல்லத் தொடங்கியுள்ளது.

அதற்கு, இரு மொழிக் கொள்கையே தொடக்கப் புள்ளி…..

ஷரீப். அஸ்கர் அலி, வண்ணப்பலகை

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!